HomeSpiritualகரும வினைகளைக் களைவோம்; பாகம்-03

கரும வினைகளைக் களைவோம்; பாகம்-03

குரு இல்லா வித்தை பாழ்….
மனிதர்கள் தமது கரும வினைகளில் இருந்து விடுபட ஒவ்வொருவருக்கும் ஆன்ம வழிகாட்ட ஞான குரு ஒருவர் கண்டிப்பாக தேவை ஏனெனில் பூர்வ ஜென்மமும் அதில் ஏற்பட்ட கருமவினைகளின் தாக்கம் பற்றியும் தன்னை விடுவித்துக் கொண்டு தான் யார்? என்பதனை ஞானத்தால் உணர்ந்து தன்னைப்போல் பிறரையும் வாழ வைக்க வேண்டும் என திடம் கொண்டு நாடி வருபவர்களுக்கு ஆன்ம வழி காண்பிப்பவரே ஞான குரு.
105001410 2822012974693001 8161365325946828322 o
இருந்தும் ஞான குருவை எவ்வாறு அறிவது? அந்த குருவிடம் சென்ற உடனே அனைத்தும் சரி வந்து விடுமா?
ஞான வழிகாட்டும் ஞான குரு ஒருவரிடம் செல்ல எமக்கு வழி கிடைத்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுவோம் அவரிடம் செல்லும் போது நம் மனதில் பல பாரங்களை பல எண்ணங்களை மனதில் சுமந்து கொண்டுதான் செல்வோம் அப்படி அவர் முன்னே சென்று அமர்ந்ததும் நம் மனம் அந்த பாரங்கள், எண்ணங்களைத் தாண்டி ஒரு அமைதியினையும் ஆனந்தத்தினையும் உணரும் அப்படி எந்தக் குருவிற்கு முன் சென்று நீங்கள் அமரும் போது இந்த சம்பவம் நிகழ்கிறதோ அவரே ஞான குரு அவரே ஆன்மீகக் குரு அவரே மகா யோகி அவரே சித்தபுருஷர் அவரே மகா ஞானி என்பது திண்ணம்; உதாரணத்திற்கு சூரியனிடம் சென்று கரு மேகம் கேட்கிறதாம் “சூரியனே என் கறைகளை போக்கி விடு” என்று அதற்கு சூரியன் “என் அருகில் நீ வந்ததுமே உன் கறையான இருள் அகன்று விட்டது மேகமே அதனால் நீ அதை கேட்கவேண்டிய தேவை இல்லை அது தானாகவே நிகழ்ந்து விட்டது” என்று கூறியதாம்; அது போல்தான் ஒரு ஞான குருவிடம் நாம் எதையும் கூறத் தேவையில்லை அவர் அருகில் சென்றமர்ந்தாலே போதும் சூரியன் அருகில் சென்ற கருமேகம் இருளகன்று ஒளி பொருந்தியதைப் போன்று நம் மனமும் தூய்மையடைந்து விடும்.
சரி அப்பேற்பட்ட குருவை சரணடைந்து விட்டோம் அவர் அருகில் சென்றதும் மனம் அமைதியடைந்து விட்டது பின்னர் வீடு சென்றதும் மீண்டும் மனம் சஞ்சலப்படுகிறது அப்படியாயின் நம் பாவங்கள் போகவில்லையா? என்று நாம் கேட்போம் அல்லவா! உண்மையில் நாம் எதற்காக குருவினை நாடிச் செல்கிறோம்? நம் கரும வினைகளை களைந்து நல் வாழ்வளிப்பார் என்றுதானே! ஆனால் அவர் அருளிய உபதேசத்தை நாம் தொடர்ந்து பின்பற்றியிருக்கிறோமா என்று பார்த்தால் அதுதான் இல்லை என்றாகிறது லாரியொன்றில் மண் ஏற்றி வருவதும் பின்னர் இறக்குவதும் போல் தினம் உலக விடயங்களில் ஈடுபட்டு  குருவிடம் செல்லும் போது அத்தனை சுமைகளையும் மனதில் சுமந்து கொண்டு சென்று அவரிடம் கொட்டி விட்டு மீண்டும் உலக விடயங்களில் மூழ்கி பாரத்தை சுமந்து செல்கிறோம் இவ்வாறு ஏற்றுவதும் இறக்குவதுமாக இருந்தால் எப்படி நமது கரும வினைகளை கரைப்பது?
அதுவே குருவினை நாடிச் சென்று பூஜை, ஜெப, தியானங்களில் கலந்து கொண்டு அவரது உபதேச நெறி நின்று அதிகாலையில் துயிலெழுந்து பயபக்தியாக இறை வழிபாட்டை, தியான ஜெபங்களை கடைப் பிடித்து அதன் பின்னர் உலக கடமைகளை ஆற்றி விட்டு மீண்டும் மாலைப் பொழுதில் அதேபோன்று இறை வழிபாட்டை மேற் கொண்டு வரவேண்டும் .
அப்போதுதான் ஏற்கனவே சேகரித்த அதாவது கடந்த பிறவியில் சித்தத்தில் பதிந்துள்ள கரும வினைகளும் கரைக்கப்படும் இனியும் கரும வினைகள் சேராமல் தடுக்கப்படும் அப்போதுதான் இவ்வுலக வாழ்வில் மனிதர்கள் வெற்றியடைய முடியும்; உதாரணத்திற்கு சிறுவயதில் பாலர் பாடசாலையில் பயில்கிறோம் பின்னர் ஆண்டு ஒன்றில் பயில்கிறோம் இவ்வாறு தொடர்ந்து பல வகுப்புகள் பல பாடங்கள் பல தேர்வுகள் என முன்னேறி இறுதியில் பல்கலைக்கழகம் செல்கிறோம் அதன் பின்னர்  நாம் எந்தத் துறையில் படித்தோமோ அந்த படிப்பிற்கான துறையில் தொழில் கிடைக்குமல்லவா அது போலதான் ஆன்மீக வாழ்விலும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என பல பிரிவுகள் உள்ளன அதனை பயில்வதற்காக தகுந்த குருவினை நாடும் போது அவர் முறைப்படி அனைத்தையும் போதிப்பார் பக்தர்கள், சாதகர்கள், மாணவர்கள் போன்றோரின் பக்திக்குத் தக எதைக் கண்டால் பற்றிப் பிடிப்பார்களோ அந்த தன்மையில் அந்த உருவத்தில் காட்சி கொடுத்து போதித்து ஞான நிலையடைய துணை புரிவார் அவரே உண்மையான ஞான குரு.
உதாரணத்திற்கு பாடசாலை கல்வியானது ஆரம்ப வகுப்பு ஆண்டு ஒன்றில் தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை தொடர்ந்து பின்னர் பல்கலைக்கழக பட்டப்படிப்பு அதன் பின்னர் படித்த படிப்பிற்கேற்ற தொழில் என வகுக்கப்பட்டுள்ளது அல்லவா அதே போன்றுதான் ஆன்மீகத்திலும் ஒருவன் தன் குருவிற்கு பன்னிரண்டு வருடங்கள் அவரிடம் எந்த கேள்விகளும் கேட்காமல் சேவை புரிந்து வருவானாகில் அந்தக் குரு தன் மாணவனின் சேவையில் மகிழ்ந்து அவனது பக்குவநிலையினை உணர்ந்து தன் அனைத்து சக்திகளையும் அவனுக்கு வழங்கி அவற்றை போதித்து ஞானத்தை அருள்வார் அந்த ஞானத்தால் தன் முற்பிறவிகளின் கரும வினைகளையும் இப்பிறவியின் கரும வினைகளையும் இல்லாதொழித்து தான் வேறு இறைவன் வேறல்ல எனும் நிலையினை அவர்கள் அடைந்து இவ்வுலகம் உய்வு பெற தனக்கோ பிறருக்கோ தீங்கிழைக்காத நற் காரியங்களை குருவின் ஆணைப்படி செவ்வனே ஆற்றி வருவார்கள்.
இதற்கு மேலும் ஒரு உதாரணமாக மகா பாரதத்தில் பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்கிறார்கள் “கண்ணா நீ அருகில் இருந்தும் ஏன் எங்களுக்கு துன்பம் நேர்கிறது” என்று அதற்கு  ஸ்ரீ கிருஸ்ணர் கூறுகிறார் இப்போது அதர்மமான பாவத்தை வெல்லக்கூடிய அளவிற்கு உங்கள் ஆன்ம சக்தி போதுமானதாக இல்லை உலக விடயங்களில் மனதை செலுத்தி குறைத்து விட்டீர்கள் எனவே அதனால் ஏற்பட்ட அந்த துன்பத்தை வெல்ல ஆன்ம சக்தியினை கூட்டுவதற்காக பொறுமையாக 12 ஆண்டுகள் வனவாசம் அனுபவித்து 1 வருடம் யாரும் அறியாதவாறு மாறு வேடமிட்டு அஞ்ஞாதவாசம் இருந்து எனது உபதேசத்தினை பின்பற்றி தியான ஜெபங்களில் ஈடுபட்டு வரும் போது உங்கள் ஆன்ம சக்தி அதிகரித்து விடும் அந்த தருணத்தில் வேதவியாசர் வருவார், ஆஞ்சநேயர் வருவார், சிவன் வருவார், மகா காளி வருவார், அவர்கள் அத்தனைபேரின் ஆசீர்வாதத்துடனும் அருளுடனும் உங்கள் இருள் நீங்கி ஒளி பிறக்கும் அதன் பின்னர் அதர்மத்தின் உறைவிடமான கௌரவப்படைகளுடன் இடம் பெறப் போகின்ற தர்ம யுத்தத்தில் வெற்றி பெறுவீர்கள் என்றுரைத்தார் என்பது வரலாறு.
அதே போன்றுதான் துரியோதனிடம் சென்று பாண்டவர்களுக்கு வழங்க வேண்டிய ராஜ்ஜியத்தை வழங்கி விடு என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்; ஊசி முனையளவு இடங்கூட தரமாட்டேன் என்று துரியோதனன் மறுக்கிறான் இங்கு துரியோதனன் பார்ப்பவர்களுக்கு கெட்டவனாக தென்பட்டாலும் உண்மையில் அவன் நல்லவன்; அவனது சிறு வயதிலேயே அனைவரும் நீதான் பட்டத்து இளவரசன் என்று கூறிக்கூறியே ஆசையூட்டி வளர்த்து விட்டார்கள் பெரியவனாக வளர்ந்த பின் தன்னால் ராஜ்ஜியத்தின் பட்டத்து இளவரசனாக முடியாது என்று உணர்ந்ததும் அந்த ஆசை கோபமாக மாறி ராஜ்ஜியத்தை பாண்டவர்களுக்கு தர மறுக்கிறான் இங்கு துரியோதன் மேல் தவறில்லை அவனுக்கு ஊட்டப்பட்ட ஆசையால் நிகழ்ந்த வினை.
பாண்டவர்கள் தமது கரும வினைகளை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா உபதேசித்தனை பின்பற்றி அவ்வழியில் பயணித்து உயிர்சக்தி பெற்று அதர்மத்தை அழித்து வெற்றி கண்டார்கள் முக்தியடைந்தார்கள்
ஆனால் துரியோதனனோ இவை எதனையும் கருத்திலெடுக்காமல் கரும வினைகளை அதிகரித்து இறுதியில் மாண்டு போனான்; இங்கே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பாண்டவர், கௌரவர் என பிரிவினை பாராது பொதுவாக இருவருக்குமே உபதேசித்தார் ஆனால் அவரது உபதேசத்தை கருத்தில் எடுத்து வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தார்கள் பாண்டவர்கள் ஆனால் அலட்சியம் செய்தான் துரியோதனன்; இதே போன்றுதான் மனிதர்கள் தர்மத்தை கடைப்பிடிக்க ஆன்மீகத்தை சார்ந்து வாழாமல் இருக்கும் போது ஆன்மீகத்தையும் அதனை கடைப்பிடிப்பவர்களையும்  நோக்கி ஏளனம் செய்வதுவும் விமர்சிப்பதுவுமாக இருந்தார்கள்  ஆனால் இன்றைய சூழலில் ஆன்மீகம் ஒன்றே தம்மை பாதுகாக்கும் என்பதனை முற்றிலும் உணர்ந்து கொண்டு வருகிறார்கள். 
இவ்வாறுதான் பகவான் ஸ்ரீ இராம கிருஷ்ண பரமஹம்சர் போதனை செய்த ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு அடிக்கவென ஒருவரை தயார் செய்திருந்தார்கள் சுவாமிகள் வீதியால் வரும்போது அவரை அடிக்க கைகளை ஓங்கிய அந்த நபர் உடனே தன்னிலை மறந்து கையெடுத்து வணங்கினார் சுவாமிகளின் திருவுருவப் படத்தினை கரங்களிலே ஏந்திக் கொண்டு சுவாமிகளின் முன்னே பயணித்தார் அவரே ஸ்ரீ இராம கிருஷ்ணரின் முதல் சீடனார்; அதே போன்று உலக இச்சையான காமத்திலே மூழ்கி கிடந்த அருணகிரிநாதர் இறுதியில் ஆண்டவனை நாடி ஞானம் பெறவில்லையா அப்போதுதான் பாடுறார் திருப்புகழ் எனும் தித்திக்கும் அமிர்தப் பாவினை, வான்மீகி மகரிஷி ஒரு வேட்டுவ குலத்தவர் வழிப்பறித் திருடன் அவர் ஞானம் பெற்று எழுதிய ராமாயணத்தை இன்று உலகம் போற்றவில்லையா என்ன! பட்டினத்தார் பெரும் செல்வந்தர் இறுதியில் வாழ்வை பட்டுணர்ந்து “காதற்ற ஊசியும் கடைவழிக்கு வாராதே காண்” என்று அனைத்தையும் தூக்கியெறிந்து விட்டு இறைவனை தன் மனதில் இருத்தி பட்டினத்தார் பாடல்கள் என பல தத்துவப் பாடல்களை தந்தருளவில்லையா! எப்படி வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழப் போகிறோம் என்பதனை மனிதர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் தத்தமது கருமாக்களை வென்றிட என்ன செய்யலாம் என்பது மேலே கூறிய பல உதாரணங்கள் தெளிவினை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புகின்றோம்.
ஆன்மீகம் என்றால் பலர் நினைப்பதுண்டு சாமியாராகப் போகிறார்கள், திருமணம் செய்யமாட்டார்கள், வேலை செய்யமாட்டார்கள், காவி உடுத்து கமண்டலமும் எடுத்து ருத்திராட்சை போட்டுக் கொண்டு விபூதியால் பட்டையடித்துக் கொண்டு ஏதோவெல்லாம் வாயில் வந்ததை பிதற்றிக் கொண்டு திரிவதுதான் ஆன்மீகம் என்று நினைக்கிறார்கள் உண்மை ஆன்மீகவாதி உலகில் வாழும் மனிதர்கள் ஆற்றும் அத்தனை கடமைகளையும் எந்தவொரு குறையுமில்லாமல் சலனமற்று செவ்வனே ஆற்றுவார்கள் அவர்கள் வேடதாரிகளாக வேடமிட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு திரியமாட்டார்கள் உலகமே எதிர்த்து நின்று தூற்றினாலும் அனைவரும் இறைவனின் குழந்தைகளே எனும் சமத்துவம் பேணுவார்கள்.
அதே போன்று ஒரே குறிக்கோளோடு அந்தந்த துறை சார்ந்து ஆன்ம சக்தியான உயிர்ச்சக்தியினை அதிகரித்து கொண்டு  இன்று இசைத் துறையில் கோலோச்சுகிறார்கள் சினிமாத் துறையில் சூப்பர்ஸ்ரார் நட்சத்திரங்களாக மிளிர்கிறார்கள் ஏன் விஞ்ஞானத்துறையில் பல அரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த பெருமைக்குரிய உலகே போற்றும் விஞ்ஞானிகளாக பலர் அறியப்படுகிறார்கள் இவர்கள் தத்தமது குறிக்கோளில் பற்று வைத்து பல வேதனைகளையும் சோதனைகளையும் கடந்துதான் வெற்றியடைந்தார்கள்; தம்மை படைத்த இறைவனை நினைத்து வழிபட்டுக் கொண்டு வாழும் வாழ்க்கை ஆன்மீக வாழ்க்கை ஆகிறது அதுவே இப்பிரபஞ்சம் இறைவனின் படைப்பு என்றும் படைத்தவனை தமக்குள்ளாக உணர்ந்து கொண்டு தாம் வேறு இறைவன் வேறல்ல எனும் வாழ்க்கை வாழ்ந்து வருபவர்களை ஞானிகள் என்கிறோம் அவர்களில் பலர் பல துறைகளிலும் சித்தி பெற்று ஞானிகளாக மிளிர்கிறார்கள் அது பற்றி அடுத்த பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.
கரும வினைகள் ஏன் எங்களை மாத்திரம் தாக்குகிறது ஏனையவர்களுக்கு தாக்குவதில்லை என்ற மன குழப்பம் பலருக்கும் ஏற்படலாம் உண்மையில் ஆன்ம சக்தியான உயிர்ச்சக்தி யார் யாருக்கெல்லாம் குன்றி விடுகிறதோ அவர்களையெல்லாம் முன்ஜென்ம வினைகளான கரும வினைகள் சந்தர்ப்பம் பார்த்து மேலெழுந்து செயல்பட்டு தாக்கத்தினை கொடுக்கும் அவ்வாறு அது செயல்படும் பட்சத்தில் மனிதர்கள் செய்த செயல்களுக்கேற்ப பலனை அனுபவிக்கிறார்கள்.
 
இவையெல்லாம் மனிதர்களின் தவறல்ல அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளின் சந்தர்ப்பம் சூழல் அவர்களை அவ்வாறு பேச வைத்து விடுகிறது பட்டினத்தாரைப் போல பட்டுணர்வு வந்தவுடன் இறை சார்ந்து வாழ முற்படுகிறார்கள். (தொடரும்)
“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”
 
கீழேயுள்ள இணைப்புகளை சொடுக்கி முன்னய பதிவுகளை முறையே படித்திடுங்கள்👇👇👇👇
 

கரும வினைகளை களைவோம்; பாகம்- 01 👇👇👇👇👇👇

 
 
கரும வினைகளை களைவோம்; பாகம்- 02 👇👇👇👇👇👇
ஸ்ரீ பேரின்பஞான பீடம்
பெரிய உப்போடை வீதி
இல.07
மட்டக்களப்பு
இலங்கை
T.P-0094652226801

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -