HomeSpiritualகரும வினைகளை களைவோம்; பாகம்- 04

கரும வினைகளை களைவோம்; பாகம்- 04

மனிதர்கள் இவ்வுலகில் எதனைச் சார்ந்து வாழவேண்டும் எதைச் சார்ந்து வாழக் கூடாது……
மனிதர்கள் எந்த விடயத்தை சார்ந்து வாழ்கிறார்களோ அந்த விடயத்தை பற்றியே பெரிதாக பேசுவார்கள் உதாரணத்திற்கு மது அருந்துபவர்கள் மதுவைப் பற்றியே பேசுவார்கள் ஏனெனில் அவர்கள் அதற்கு அடிமையாகி விட்டார்கள் அது போல பணத்தை அதிகமாக சேர்ப்பவர்கள் பணத்தைப் பற்றியும் அதை சேர்ப்பதற்கான வழிமுறைகளையுமே சிந்திப்பார்கள் செயலாற்றுவார்கள் ஏனெனில் அவர்கள் பணத்திற்கு அடிமையாகி விட்டார்கள்; இவ்வாறு மனிதர்கள் உலகின் போகப் பொருட்கள் அனைத்திற்கும் அடிமையாகிவிட்டார்கள் அதனால் யோகத்தை நல்கக்கூடிய ஆன்மீகத்திற்குள் அவர்களால் மனதை சாய்த்திட முடியவில்லை இதுவும் மனிதர்களின் தவறல்ல; அவர்கள் வாழும் அல்லது வாழ்ந்த சூழல் அவற்றின் குணம், தன்மை, பண்புகள் அவன் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்டதன் விளைவே இவ்வாறு அவர்கள் வாழ்வதற்கு காரணமாகிறது.
ca61eb4e b8e5 41f4 a65c 44ceefec6ba8
அதிக பணம் படைத்தவர்கள் பிறரை மதிக்கமாட்டார்கள் தம் அத்தஸ்த்து உள்ளவர்களோடுதான் சகவாசம் வைத்திருப்பார்கள் இவை எல்லாம் அவர்கள் பிற்காலத்தில் துன்பத்தை அனுபவிப்பதற்காக தம்மைத் தாமே தயார் செய்கிறார்கள் என்று அர்த்தமாகிறது.
இதனை விளக்க மகா பாரதத்தில் அருச்சுனனுக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குமிடையே நிகழ்ந்த சம்பவத்தை கூறுகிறோம்.
ஒரு சமயம் உலக வாழ்வின் அர்த்தத்தினை அருச்சுனனுக்கு உணர்த்தும் முகமாக ஸ்ரீ கிருஷ்ணர் கிராமம் ஒன்றுக்கு மாறுவேடமணிந்து அரிச்சுனனையும் அழைத்துக் கொண்டு செல்கிறார் அங்கே பெரும் தனவந்தர் ஒருவரது வீட்டு வாசலில் நின்று பிச்சாந்தேகி என்று பிச்சை கேட்டு பல முறை அழைத்தும் எவரும் வரவில்லை சிறிது நேரம் கழித்து மாடியின் யன்னல் வழியே என்ன வேண்டும் என்று அந்த தனவந்தர் கேட்டார் இவர்களும் பிச்சாந்தேகி என்றார்கள் உடனே வீட்டு காவலாளியிடம் அவர்கள் மீது நாயை விட்டு விரட்டுமாறு பணித்து யன்னலை பூட்டினான் தனவந்தன் உடனே ஸ்ரீ கிருஷ்ணரும் சிரித்துக் கொண்டு நீடூழி காலம் வாழ்க என்று வாழ்த்தி ஆசீர்வதித்தார் அந்த தனவந்தனை நோக்கி இதைக் கண்ட அருச்சுனனுக்கு கோபம் வந்து என்ன கண்ணா இப்படி செய்கிறாய் அவன் நமக்கு பிச்சை அளிக்காமல் நாயை விட்டு குதறும் படி பணித்தான் ஆனால் நீங்களோ அவனை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறீர்கள் என்றான்.
ஸ்ரீ கிருஷ்ணரோ புன்முறுவலுடன் அரிச்சுனா இப்போதைக்கு எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்காமல் என் பின்னே வா இதற்கான பதிலினை நான் உனக்கு வழங்குகிறேன் என்றார்; ஒருவாறு செல்வந்தனின் நாயிலிருந்து தப்பி இன்னொரு குடிசை வீடொன்றுக்கு வந்தார்கள் அங்கு ஒரு ஏழை வாழ்ந்து வந்தான் அவனுக்கு சொத்தென்று அந்தக் குடிசையும் ஒரு பசுவும் கன்றுமே உள்ளன அந்த ஏழையை நோக்கி பிச்சாந்தேகி என்று பிச்சை கேட்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர் அந்த ஏழையோ ஓடோடிச் சென்று தன் பசுவில் அப்போதுதான் கறந்து காய்ச்சிய பாலினை ஒரு பாத்திரத்தில் கொண்டுவந்து அருந்தக் கொடுத்தான் பாலினை அருந்திய கிருஷ்ணர் அந்த ஏழையை நோக்கி உன் குடிசையும் பசுவும் கன்றும் எரியக்கடவது என்றார்; இதனைக் கண்ணுற்ற அரிச்சுனனுக்கோ ஸ்ரீ கிருஷ்ணர் மீது தீராத கோபம் வந்தது நீங்கள் செய்த காரியம் நியாயமானதா? நமக்கு தர தன்னிடம் எதுவுமே இல்லாத போதும் அவன் குடிக்க வைத்திருந்த பாலினை நமக்கு பருகத் தந்தது ஒரு குற்றமா கிருஷ்ணா?  அதற்கு அவனுக்கு இத்தனை பெரிய தண்டனையா? இதுவே சற்று முன்னர் அந்த செல்வந்தன் நாயை விட்டு நம்மை விரட்டியடித்தான் ஆனால் நீங்கள் அவனை நீடூழி காலம் வாழ்கவென்று வாழ்த்தி ஆசீர்வதித்தீர்கள் இங்கு உங்கள் தர்மம் எங்கே போயிற்று என்று மிகுந்த கோபத்துடன் வினாவினான்.
அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் “அரிச்சுனா சொல்கிறேன் கேள் அங்கு அந்த செல்வந்தனுக்கு இறைவனை நினைத்திட பல தடைகள் இருந்தன அவனால் தர்மம் செய்ய முடியாது ஒரு மனிதனுக்கு தர்ம சிந்தனை இல்லையேல் அவனால் இறைவனை வணங்க முடியாது அவ்வாறு இறைவனை வணங்காதவர்கள் எத்தனை செல்வங்கள் சேர்த்தாலும் நாளடைவில் அவை கரைந்து போய் விடும் அந்த செல்வத்தின்பால் வைத்த பற்றினால் கவலையிலேயே அவர்களை நோய் பற்றிக் கொண்டு இறந்தும் விடுவார்கள் அதன் காரணமாகத்தான் அந்த செல்வந்தனுக்கு நீடூழி காலம் வாழ்க என்று ஆசீர்வதித்தேன் அப்போதுதான் அவன் செல்வத்தை தேடி ஓடி ஓடி களைத்துப் போய் ஈற்றில் மரணத்தை தழுவிக் கொள்ளுவான் ஏனெனில் அவன் செல்வம் எனும் மாயைக்குள் சிக்குண்டு கிடக்கிறான் ஆனால் இந்த ஏழைக்கோ சொத்துக்கள் என்று ஒரு மாடும் கன்றும் இந்தக் குடிசையுமே இருந்தது அம் மூன்றின் மீதே அவனுக்கு பற்று இருந்தது அதனால் அவன் பற்று வைத்திருந்த மூன்று பொருட்களையும் எரித்து விட்டேன் இப்போது அவன் முழுவதுமாக பற்றற்ற என் பாதங்களில் சரணாகதி அடைந்து விட்டான் அவனுக்கு முக்தியும் கிட்டி விட்டது ஆனால் செல்வந்தனுக்கோ எண்ணிலடங்கா பொருட்களின் மேல் பற்று இருந்தது அவன் எந்தப் பிறவியில் அவனது பற்றுக்களை துறக்கிறானோ அந்தப் பிறவியில் என்னை வந்தடைவான் என்று திருவாய் மலர்ந்தருளினார்.
அப்போதுதான் அரிச்சுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ண பகவான் உணர்த்திய மனித வாழ்க்கையின் தத்துவப்பாடம் ஞானத்தை போதித்தது; ஆசையின் வழியில் சேர்க்கப்படும் உலக பொருட்களால் துன்பமே ஏற்படும் என்றும் அவை முக்திக்கு வழிவகுக்காமல் பல பிறப்புகளுக்கு வித்திடும் என்றும் ஆசையை துறந்து பற்றற்று கடமையாற்றும் போது முக்தி நிலை கிட்டும் என்பதனையும் உணர்த்தவே இந்த நாடகத்தை ஸ்ரீ கிருஷ்ணர் நிகழ்த்தியுள்ளார் என்பதனை புரிந்து கொண்டு அவரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி ஆசி பெற்றான் என்பது வரலாறு.
 
ஆனால் தற்கால மனிதர்களோ இதையெல்லாம் கருத்தில் கொள்ளாது நாம் விஞ்ஞான வளர்ச்சியடைந்த உலகில் வாழ்கிறோம் நாகரீகம் வளர்ந்து விட்டது இங்கு வந்து கடவுள், ஆன்மீகம் என்று கூறுகிறீர்களே இதனை நம்புவதற்கும் கடைப்பிடிப்பதற்கும் நாம் தயாரில்லை என்று பரிகசித்து அர்த்தமற்ற கேள்விகளை கேட்டுக் கொண்டும் அர்த்தமற்ற சடங்குகளில் காலத்தை கழித்துக் கொண்டும் இந்த மனித சமுதாயம் அழிவுப்பாதையின் இறுதி தருணத்தில் நின்று விழி பிதுங்கிக் கொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
 
இதற்கு உதாரணமாக மகா பாரத்தில் துரியோதனன் கூறுகிறான் என் பக்கம் இச்சை மரணத்தை வரமாக பெற்ற பீஷ்மாச்சாரியார், விஷ்ணு தனுசை பெற்ற விதுரர், குரு மார்களான துரோணர், கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன், கவச குண்டலங்களுடன் பிறந்த கர்ணன் என பல சக்தி பெற்றவர்கள் என் பக்கம் இருக்கும் போது எதற்கு நான் கண்ணணிடம் செல்ல வேண்டும் அவர் உதவியினை நாட வேண்டும் என்றும் என்னை எவராலும் வெல்ல முடியாது  என்றும் மார்தட்டினான்.
அன்று துரியோதனன் செய்த அதே தவறை இன்று இதே உலகமும் செய்து கொண்டிருக்கிறது; ஆன்மீகத்தின் பக்கம் ஒரு சிலரே வருவார்கள்  சிலர் வராமலேயே இறந்து விடுவார்கள் இந்த நிகழ்வும் அவரவர் பாவ புண்ணியங்களுக்கு அமைவாக நிகழ்கிறது அதாவது பூர்வ ஜென்ம வினைகளுக்கு அமைவாகவே அனைத்தும் நடக்கிறது எனலாம்; முன்னர் கூறியது போல காடொன்றுக்குள் சென்ற மனிதர்கள் சிலரை மிருகங்கள் கொன்று விட்டது சிலர் அவற்றிலிருந்து தப்பி ஓடி வந்து மருத்துவம் செய்து பிழைத்துக் கொண்டது போன்ற உதாரண நிகழ்வாக அமைகிறது.
 
இவ்வாறு தான் படைத்த பொருட்கள் அழிவின் விளிம்பில் நின்று திணறும் போதுதான் இறைவன் அவதரித்தார் இது யுகம் யுகமாக நிகழ்ந்து வரும் சம்பவம் ஆகிறது இது வெறும் கட்டுக்கதையோ சோடிக்கப்பட்ட சொற்களோ கிடையாது; இறைவன் மனிதர்களோடு மனிதர்களாக பிறந்து வளர்ந்து வாழ்ந்து காட்டி மனிதர்களை அவர்களது பூர்வ ஜென்ம வினைகளில் இருந்து விடுவித்தருள்வதற்காக குருவாக இருந்து போதிக்கின்றார் அவ்வாறு அவரின் போதனைகளை தவறாமல் சிரத்தையுடனும் பக்தியுடனும் பின்பற்றி வாழ்பவர்கள் பிறவிப் பெருங்கடலை நீந்தி கடந்து பிறவாப் பேரின்ப நிலையினை அடைகிறார்கள் ஏனையவர்கள் மரணத்தை தழுவி அடுத்த பிறவிக்கு தயாராகிறார்கள்.
இவ்வாறு நல்லவர்களை காப்பாற்றவும் தர்மத்தை நிலை நாட்டவும் காலத்துக்கு காலம் இறைவன் பூமியில் அவதரிக்கிறார் சிலர் அவ்வுண்மையினை உணர்ந்து அவர் காண்பிக்கும் இறை வழியில் தம்மை இணைத்துக் கொண்டு பயணிக்கிறார்கள் சிலரால் அதனைப் பின்பற்ற முடியாமல் காடுகளில் கொடிய விலங்குகளிடம் சிக்குண்டு மாண்டவர்களைப் போல உலக மாயையின் பிடியில் சிக்குண்டு மாண்டு போகிறார்கள் என்பதே உண்மை; இதே போன்றுதான் ஸ்ரீ கிருஷ்ணர் துரியோதனனை நாடி தர்மத்தின் பக்கம் வந்து சேர்ந்து விடு என்று பல முறை அழைப்பு விடுத்தார் ஆனால் அவன் உலக ஆசைகளின் பக்கம் தன்னை சாய்த்துக் கொண்டதன் காரணத்தால் தன்னை நாடி வந்து அழைப்பவர் இறைவன் என்ற உண்மையினை அவனால் அறிய முடியாமல் போய் விட்டது.
 
இவ்வாறுதான் இறைவனும் காலத்துக்கு காலம் உலக அரங்கிலே மானிட வடிவம் தாங்கி அவதரித்தார் அவ்வப்போது இறை தூதர்களாக மகரிஷிகளும் அவதரித்து நல் மார்க்கங்கள் அமைத்து ஆன்மீக வழி காண்பித்து சென்றிருந்தார்கள் ஆனால் கரும வினைகளின் தாக்கத்தால் அந்த உண்மை இறைவனின் அவதாரத்தினையும் அவர் அருளும் உபதேசத்தினையும் வழிகாட்டலையும் மனிதர்களால் பின்பற்ற முடிவதில்லை இவ்வாறு இறை வழியை பின்பற்ற முடியாமைதான் கர்ம வினை எனப்படுகிறது. (தொடரும்)….
 

” வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”

 

ஸ்ரீ பேரின்பஞான பீடம்

பெரிய உப்போடை வீதி
இல.07
மட்டக்களப்பு
இலங்கை
T.P-0094652226801
 
- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -