HomeSpiritualகரும வினைகளை களைவோம் - பாகம் 05

கரும வினைகளை களைவோம் – பாகம் 05

மனித மனங்களில் ஏற்படும் துன்பங்களும் அதற்கான தீர்வுகளும்…..
கடந்த நான்கு தொடர்களின் மூலம் மனிதர்களின் கரும வினைகளுக்கான தீர்வுகளை மிகவும் இலகுவான முறையில் உலக மக்களின் நலமான வாழ்விற்காக ஆன்மீகக் குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளின் ஆன்மீக அருளுபதேசத்தினை தொகுத்து வழங்கி வருகின்றோம்; மென்மேலும் பல தலைப்பின் கீழே இவ் உபதேசத் தொடர் தொடரவிருக்கிறது அதனடிப்படையில் ஐந்தாவது தொடராக மனித மனங்களில் ஏற்படும் துன்பங்களும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலே அடுத்து தருகிறோம்.
106506603 2464723597159666 639413320889154536 o
மனிதர்கள் தமக்கு எழும் ஒவ்வொரு சிக்கல்களுக்கும், துன்பங்களுக்கும் தீர்வினை தேடி அலைகிறார்களே தவிர அந்த துன்பங்கள் எதனால், எப்படி, எந்த சந்தர்ப்பத்தில் ஏற்படுகிறது என்பதனை பற்றி ஆராய்வது கிடையாது அவ்வாறு ஆராய்ந்தால் அவர்களின் துன்பங்களுக்கான தீர்வுகள் அவர்கள் மனதிலே உதயமாகிவிடும் ஏனெனில் தன்னைப்பற்றிய சுயமான ஆராய்ச்சியே ஒவ்வொரு மனிதனின் வாழ்வினையும் மேம்படுத்துகிறது என்பதே ஞானிகளும், சித்தர்களும், ரிஷிகளும் போதித்து வந்துள்ள பேருண்மையாகும்.
ஆனால் மனிதர்கள் சித்தர்கள், ஞானிகள், மகரிஷிகள் காண்பித்த வழிகளையும் அவர்கள் உபதேசநெறிகளையும் கடைப்பிடித்து வாழ்வது மிக மிக அரிதாகவே காணப்படுகிறது; உண்மை வாழ்வை புறக்கணித்து பொய்யான வாழ்வினையும் வழிகாட்டல்களையும் உண்மையென நம்பி தமது அத்தனை இன்பங்களையும் தொலைத்து விடுகின்றனர் இவ்வாறு துன்பக்கடலில் மனிதர்கள் தத்தளிக்கும் போது இன்பக்கடலுக்குள் அழைத்துச் செல்லும் படகு போல ஞான குரு ஒருவரின் ஞான வழிகாட்டல்கள் தேவைப்படுகிறது. 
 
இவ்வாறு மனிதர்கள் துன்பத்தை அனுபவிக்கும் போது பிரபஞ்சத்தை படைத்த பரம்பொருளான இறைவனே மானிட ரூபம் தரித்து மண்ணுலகில் காலத்துக்கு காலம் யுகம் யுகமாக மனித சரீரம் தரித்து அவதரித்து வந்து மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து அவர்கள் படும் அத்தனை துன்பங்களையும் அனுபவித்து அத்துன்பங்களில் இருந்து விடுபட இறை பக்கம் சார்ந்து வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற்று வாழ்ந்து காட்டி பல ஆன்மீக போதனைகளை மக்களுக்கு வழங்கி அவர்கள் வாழ்வினையும் மேம்பட வைத்து துன்பக்கடலாம் இக்கரையில் இருந்து இன்பக்கடலாம் அக்கரைக்கு அழைத்துச் செல்லும் படகாக ஞான குருவாக இருந்து ஆன்ம வழிகாண்பித்து வந்திருக்கிறார்கள் என்னும் பேருண்மையினை விஞ்ஞான வளர்ச்சி அதனால் ஏற்பட்ட  நவ நாகரீக சிந்தனைகள் என அனைத்து விதமான சமூக கட்டமைப்புகளும் அதனை சீர்குலைத்து இறை எனும் உயிர்ச்சக்தி இவ்வுலகினை இயக்குகிறது என்பதனையும் மறைத்து விட்டது.
உண்மை குரு யார்? அவர் எங்கிருக்கிறார்? எப்படி அவரை அடையலாம்? என்னும் பேருண்மை மறைக்கப்பட்டு விட்டது ஞானிகளும் யோகிகளும் போதித்த உண்மைகளை மக்கள் மத்தியில் போய் சேர முடியாதவாறு போலி வேடதாரிகளின் செயல்கள் மக்களுக்கு வெறுப்பையும் நம்பிக்கையற்ற தன்மையினையும் ஏற்படுத்தி விட்டது உண்மை வழிகாட்டியினை இனங்காண்பதில் பெரும் குழப்பத்தினை எதிர்நோக்கி போலிகளின் வசப்பட்டு தம் வாழ்வினை சீரழித்து கொண்டே செல்கிறார்கள் இருந்தும் ஒரு சிலர் அவற்றில் இருந்து மீண்டு ஞான குருவினை தேடி அவர்களின் திருப்பாதகமலங்களில் தம்மை சரணடைய செய்து இன்ப வாழ்க்கை வாழ்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதர்களும் தம் வாழ்வில் மறுமலர்ச்சியினையே விரும்புகிறார்கள் அதனைநோக்கியே தம் வாழ்வினை செலுத்த முற்படுகிறார்கள் இருந்தும் மறுமலர்ச்சிக்கான ஒரேயொரு வழி உண்மை ஞானிகளின் வழி நின்று ஆன்மீக நெறியினை கடைப்பிடித்து வாழ்வதனை தவிர பிறிதொரு பாதையும் இல்லை என்பதனை ஆணித்தரமாக இவ்விடத்தில் கூறி வைக்கிறோம்.
காலனை எண்ணியெண்ணி கவலைப்படும் மனிதர்களும் காலத்தின் மீது பழி போடும் மனிதர்களும் ஒன்றை சிந்திக்க தவறி விடுகிறார்கள் அதாவது கால நிலைக்கேற்றவாறு தன் வாழ்க்கை முறையினை மாற்றியமைத்து அதன் தாக்கத்திலிருந்து தன்னை பாதுகாத்து வாழும் தன்மையினை உடைய மனிதன் தன்னுள் மறைந்துள்ள இறைத்தன்மையினை உணரமுடியாமல் இன்னொருவரின் உதவி கிடைக்கும் அவர் தருவார் இவர் தருவார் என்று பிற மனிதர்களை எதிர்பார்த்து எதிர்பார்த்தே தனக்குள் இருக்கும் இறை சக்தியினையும் அதன் பேராற்றலையும் மறந்து உயிர்ச்சக்தியான ஆன்ம சக்தியினை மழுங்கடித்து விடுகிறார்கள் ஈற்றில் தாம் எதிர்பார்த்த விடயம் கைகூடாமல் போகும் போது மிக இலகுவாக பிறரின் மீது பழியினை போட்டு விட்டு தாம் அதிலிருந்து தப்பித்து விட்டதாக கருதுகிறார்கள்.
இங்குதான் மனிதர்கள் தங்கள் மனத்தினை நல்வழி நடாத்தக்கூடிய ஞான குரு ஒருவரை நாடவேண்டிய தேவை ஏற்படுகிறது உதாரணத்திற்கு வாகனங்களோ இயந்திரங்களோ பழுதடையும் போது அதனை சரிசெய்யக்கூடிய திருத்துனர்களை நாம் நாடிச் சென்று அதனை சரி செய்து மீண்டும் இயங்க வைப்பதனைப் போல மனித மனங்களில் ஏற்படும் துன்பங்கள், வேதனைகள், அழுத்தங்கள் போன்றவற்றுக்கான தீர்வுகளை பெற்றிட மனதைக் கடந்து உணர்வு நிலையான ஆன்மா ஆன்மாவோடு ஐக்கியமான ஜீவப்பிரம்ம ஐக்கிய நிலையடைந்த ஞான குருவினைத் தவிர வேறு எவராலும் ஒரு கட்டத்திற்கு மேலே மனிதர்களின் துன்பங்களுக்கான தகுந்த தீர்வினை வழங்கிட இயலாது என்பதே உண்மை.
சாதாரணமாக மனிதர்களுக்கு ஏற்படும் சிறிய சிறிய நோய்களுக்கு அவர்கள் வாழும் சூழலிலேயே அதற்கான மருந்துகள் இயற்கையாகவே காணப்படும் அவை சில வேளை சமயலறையிலோ அல்லது சுற்றுப்புறச் சூழலில் மூலிகை செடிகளாகவோ காணப்படும் ஆனால் அவற்றை பற்றி அறியாத மனிதர்கள் சிறிது தலைவலி எடுத்தால் கூட பயந்து நடுங்கி வைத்தியசாலைக்கு ஓட்டம் பிடிக்கிறார்கள்  அதற்காக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் என்று பொருள் அல்ல மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான துன்பங்கள், வேதனைகள், சிக்கல்கள் என அனைத்திற்குமான தீர்வுகள் அவர்களுக்கு அருகிலேயே உள்ளது அதனை அறியாமல் எங்கெங்கெல்லாமோ அலைகிறார்கள் என்பதனை உணர்த்தவே பல உதாரணங்களை கூறுகிறோம் கையில் வெண்ணையினை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதனைப் போன்று விஞ்ஞான வளர்ச்சி அடைந்த நவ நாகரீக உலகில் மெய்ஞானம் மறைக்கப்பட்டு மனிதர்கள் அறிவீலிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.
ஓரறிவு முதல் ஐந்தறிவு படைத்த ஜீவன்களை காட்டிலும் ஆறறிவான பகுத்தறிவு எனும் பண்பு மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய வரப்பிரசாதம் அந்த ஆறாவது அறிவினை தூண்டி விடும் தூண்டிதான் ஞான குரு அவரே பரமாத்மா, அவரே அவதார புருஷர், அவரே காமதேனு, அவரே கற்பகவிருட்சம் அப்பேற்பட்ட குருவினை எவர் ஒருவர் சரணடைகிறாரோ அவரது கரும வினைகள் முற்றாக கரைக்கப்பட்டு விடும் மலைபோன்று வரும் துன்பமெல்லாம் பனிப்போல அகன்று விடும் கோழி தன் குஞ்சுகளை பருந்திடம் இருந்து தன் இறக்கையினுள் வைத்து அணைத்து காத்து வருவதனைப் போல தன்னை நாடிவரும் தன் பக்தர்களை இவ்வுலகில் ஏற்படும் எவ்விதமான துன்பங்களும் அணுகிடாதவாறு அணைத்து காத்தருள்பவரே ஞான குரு.
நல்லவர்களாக பிறந்தாலும் துன்பம் ஏன் சூழ்ந்து கொள்கிறது?
பிறக்கும் போது நல்வர்களாகத்தான் பிறக்கிறோம் ஆனால் வளர வளர துன்பங்கள் சூழ்ந்து கொள்கின்றன ஒரே குடும்பத்தில் பிறந்திருப்பார்கள் ஆனால் ஒவ்வொருவரும் வித்தியாசமான பண்புகளையும் செயல்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள் அவர்களிடம் நீங்கள் ஏன் துன்பப்படுகிறீர்கள் உங்கள் குடும்பமே நல்ல குடும்பம்தானே உங்கள் அண்ணன் தம்பி நன்றாக வாழ்கிறார்கள்தானே நீங்கள் மாத்திரம் ஏன் இப்படி துன்பப்படுகிறீர்கள் என்று கேட்டால் அது நான் செய்த கருமா என்பார்கள் இவ்வாறு வாழ்வில் வெற்றி காண இயலாமல் துன்பத்தை அனுபவிப்பவர்கள் அந்த கருமத்தை கடந்த ஞானிகளிடம் சென்று அதனை வெற்றி கொள்ளலாம்தானே உதாரணத்திற்கு தோசை செய்வதற்கென மாவினை தயார் செய்யும் போது அந்த பதத்திற்கு மேலதிகமாக நீர் சேர்க்கப்பட்டால் கொஞ்சம் மாவினை போட்டு சரி செய்து தோசை சுடுகிறோம் அப்படி தோசையின் பதத்திற்கு மா வராமல் போனால் ரொட்டி செய்யவும் முடியுமல்லவா!
 
இதே போல்தான் மனிதர்கள் தங்கள் கரும வினைகளை களைந்திட ஞானிகளை நாடும் போது அந்த ஞானிகளின் கிருபையினால் அவர்களின் ஞான வழிகாட்டுதலினால் நாம் செய்த கரும வினைகளை வெல்ல முடியும்தானே! உதாரணத்திற்கு ஆயுள் குறைவான குழந்தையாக பிறந்த மார்க்கண்டேயர் சிவனை தியானித்து இறை வாழ்வை கடைப்பிடித்து வரும்போது அவர் உயிரினை எமதர்மரால் கூட எடுக்க முடியாமல் போன வரலாறினை நாம் அறிவோம் அல்லவா! அவர் போன்று மனிதர்களும் இறைவாழ்வினை கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுப் படுவார்கள்தானே.
இவ்வுலகினை படைத்த இறைவன் அனைத்தையும் இணைத்தே படைத்துள்ளார் நல்லவை, கெட்டவை இணைந்ததுதான் கரும பூமி அறிவால் அவற்றை நல்லவை எது கெட்டவை எது என்று பிரித்து அறிந்து வாழ்வதற்கு பெயர்தான் ஆன்மீகம்; ஆன்மா அறிவு மயமான உணர்வுமயமான மகா சக்தி படைத்தது ஆனால் அது மனிதர்களின் எண்ணங்களுக்கேற்ப சக்தியினை வழங்கும் அதுவே அவர்கள் இறைவனை நினைத்து இறைவாழ்வை கடைப்பிடிக்கும் போது ஆன்மாவின் அபரிமிதமான சக்தி முழுமையாக அவர்களை வழிநடாத்தும் என்பதே உண்மை.
ஆனால் மனிதர்கள் தமது ஆன்மாவை பற்றி சிந்திக்க முடியாத அளவிற்கு இந்த கரும பூமியில் உள்ள கருமங்கள் அவர்களின் அறிவை திரையிட்டு மறைத்து வைத்துள்ளது இந்த உண்மையினை எவர் ஒருவர் உணரத் தலைப்படுகிறாரோ அவருக்கு ஆன்ம வழி காண்பிக்க ஞான குரு நிச்சயம் அவர்கள் வாழ்வில் வருவார் என்பது திண்ணம்… (தொடரும்)
106453742 2464711853827507 4581965029248604120 o
“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”


ஸ்ரீ பேரின்பஞான பீடம்
பெரிய உப்போடை வீதி
இல.07
மட்டக்களப்பு
இலங்கை
T.P-0094652226801

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -