HomeSportsபாகிஸ்தான் டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்; காரணம் இதுதான்!!

பாகிஸ்தான் டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்; காரணம் இதுதான்!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன் தினம் முதல் போட்டி நிறைவடைந்தது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து, த்ரில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று நிலையில் முன்னிலை வகிக்கிறது.

ஸ்டோக்ஸின் தந்தை கெட் ஸ்டோக்ஸுக்கு உடல்நிலை மோசமடைந்துள்ள காரணத்தால், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலிருந்து அவர் விலகுகிறார். கெட், முன்னதாக தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்த மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 37 நாட்களுக்குப் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், நியூசிலாந்துக்கு சென்று அங்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.

தன் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தாலும், முன்னதாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரிலும், பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் பங்கேற்று அசத்தினார் ஸ்டோக்ஸ். தென் ஆப்ரிக்கத் தொடரில் ஸ்டோக்ஸ்தான், தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.

தென் ஆப்ரிக்க மருத்துவமனையிலிருந்து கெட் ஸ்டோக்ஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது, அவருடன் புகைப்படம் எடுத்து பகிர்ந்த பென் ஸ்டோக்ஸ், “வலுவான மற்றும் விட்டுக் கொடுக்காத மனம் படைத்தவர் என் தந்தை” எனப் புகழ்ந்திருந்தார்.

இப்படியான சூழலில் பாகிஸ்தான் தொடரிலிருந்து ஸ்டோக்ஸ் விலகுவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், “இந்த வார பின் பகுதியில் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்துக்கு விடை பெறுகிறார். அடுத்ததாக ஆகஸ்ட் 13 மற்றும் 21 ஆம் தேதிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்கப் போவதில்லை. குடும்ப காரணங்களுக்காக ஸ்டோக்ஸ் விடைபெறுவதால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில், அவர்களுக்கு பிரைவசி வழங்குமாறு ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறோம்” என அறிக்கை வாயிலாக தகவல் தெரிவித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் பிறந்தவர். அவர் அப்பா கெட் ஸ்டோக்ஸ், நியூசிலாந்துக்காக ரக்பி போட்டிகளில் விளையாடியவர். பென் ஸ்டோக்ஸுக்கு 12 வயது ஆனபோது, அவர் தந்தைக்கு இங்கிலாந்தில் ரக்பி பயிற்சியாளர் பணி கிடைத்தது. அதனால் இங்கிலாந்து வந்தார். பின்னர் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். தொடர்ந்து இங்கிலாந்துக்காகவே சர்வதேச கிரிக்கெட் தளத்திலும் களமிறங்கினார்.

29 வயதாகும் பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். சென்ற ஆண்டு நடந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற துணை புரிந்தவர் ஸ்டோக்ஸ்தான். இறுதிப் போட்டியின் முடிவு சூப்பர் ஓவர் மூலம் நிர்ணயிக்க முடிவெடுக்கப்பட்ட பின்னர், இங்கிலாந்து சார்பில் களமிறங்கிய இருவரில் ஸ்டோக்ஸும் ஒருவர். கடைசி வரை பிரமாதமாக விளையாடி, தன் அணிக்கு வெற்றித் தேடித் தந்தார் ஸ்டோக்ஸ்.

சமீக காலமாக ஸ்டோக்ஸ், தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே வெஸ்ட் இண்டீஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அவர் பந்து வீசவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் 4 ஓவர்கள் மட்டுமே வீசினார்.

ஸ்டோக்ஸ் தற்போது தொடரிலிருந்து விலகியுள்ளதால், இங்கிலாந்து அணியின் ஓப்பனர்களில் ஒருவரான ஜாக் க்ராலி மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -