Home Sports யுஎஸ் ஓப்பன் நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் தொடரிலிருந்து விலகல்!

யுஎஸ் ஓப்பன் நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் தொடரிலிருந்து விலகல்!

யுஎஸ் ஓப்பன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக, நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் அறிவித்துள்ளார். 34 வயதாகும் நடால், கோவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் டென்னிஸ் போட்டிகளுக்கான அட்டவணைகளே தன் விலகலுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

தன் விலகல் முடிவு குறித்து ட்விட்டர் மூலம் தெரிவித்த நடால், “கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்தான பாதிப்புகள் உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இன்னும் அது கட்டுக்குள் வரவில்லை என்பது தெரிகிறது. எனவே, இந்த முறை யுஎஸ் ஒப்பன் தொடரில் நான் பங்கேற்கப் போவதில்லை.

இப்படிப்பட்ட முடிவை நான் எடுக்க விரும்பவில்லைதான். ஆனால், இந்த முறை என் மனதை பின் தொடர்ந்து இம்முடிவை எடுத்துள்ளேன்” என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஆரம்பிக்கும் யுஎஸ் ஓப்பன் டென்னிஸ் போட்டி, செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களில் பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டி ஆரம்பமாகும்.

“4 மாதங்களாக எந்த வித டென்னிஸ் போட்டிகளும் நடக்கவில்லை. அப்படியான சூழலில் தீடிரென இப்படி அட்டவணைகள் போடுவது காட்டுமிராண்டித்தனமாது” என்று டென்னிஸ் நிர்வாகங்களை சாடியுள்ளார் நடால்.

ரஃபேல் நடால் மட்டுமல்ல, முன்னதாக உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெரடரரும், டென்னிஸ் தொடர்களிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், அவர் மூட்டியில் செய்து கொண்ட அறுவை சிகிச்சையைக் காரணமாக சொல்லி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 19 கிராண்டு ஸ்லாம்களை வென்றுள்ளார் நடால். ஃபெடரர், 20 கிராண்டு ஸ்லாம்களைக் கைப்பற்றியுள்ளார். இந்த முறை யுஎஸ் ஓப்பனில் பங்கெடுத்திருந்தால், நடால் 20வது கிராண்டு ஸ்லாமை கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்றிருப்பார்.

யுஎஸ் ஓப்பனில் விளையாடுவது குறித்து நடால், முதலிலிருந்தே சந்தேகம் எழுப்பி வந்தார். அப்போதே அவர், “விளையாடுவதற்குப் பாதுகாப்பான சூழல் இல்லாத பட்சத்தில், ஓப்பன் தொடரில் பங்கேற்க மாட்டேன்” எனத் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

நடாலும் ஃபெடரரும் யுஎஸ் ஓப்பனிலிருந்து விலகியுள்ளதால், உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச், சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதுவரை 3 முறை யுஎஸ் ஓப்பன் சாம்பியனாக முடி சூடியுள்ளார் ஜோகோவிச்.

பெண்களுக்கான யுஎஸ் ஓப்பனைப் பொறுத்தவரையில், உலக நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்டி, தான் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். அவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலையே காரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே நேரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், யுஎஸ் ஓப்பனில் பங்கெடுப்பார் எனத் தெரிகிறது. இதுவரை 6 முறை யுஎஸ் ஓப்பன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள செரீனா, 7வது முறை அதைக் கைப்பற்ற முயல்வார் எனத் தெரிகிறது. அதேபோல தனது 24வது கிராண்டு ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்ற அவர் முனைப்போடு இருப்பார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -