2020 பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடம் நிறைவடைவதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள நிலையில் இதுவரை தங்களது விபரங்களை பதிவு செய்யாதவர்கள் இன்றைய தினத்திற்குள் அதனை பூர்த்தி செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சநிலைமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையத்தளமூடாக தங்களின் விபரங்களை பதிவு செய்வதற்கு அண்மையில் தீர்மானம் எட்டப்பட்டது.
இதன்பிரகாரம் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 9 ம் திகதி தொடக்கம் இணையத்தளமூடாக தங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்..
இந்த நிலையில் கடந்த 9 ஆம் திகதி தொடக்கம் நேற்றுவரையிலான காலப்பகுதியில் 190 உறுப்பினர்கள் மாத்திரமே தங்களின் விபரங்களை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்கள் இன்றைய தினத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.