Home Srilanka சர்வதேச விசாரணையில் மாற்றம் இல்லை! கருணா அம்பாறைக்குள் நுளைந்த காரணம்; கலையரசன்

சர்வதேச விசாரணையில் மாற்றம் இல்லை! கருணா அம்பாறைக்குள் நுளைந்த காரணம்; கலையரசன்

“நாட்டிலுள்ள இன ரீதியான அடக்குமுறையினால் கடந்த காலம் தொட்டு வடகிழக்கில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை தமிழ் மக்கள் மீது கடந்தகால தமிழ்மக்கள் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவில்லை என்பதை அம்பாறை தமிழ்மக்களின் வாக்குகள் கட்டியம் கூறி நிற்கின்றன.

நிச்சயமாக கூட்டமைப்பு வடகிழக்கில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது, கடந்த தேர்தல்களில் கிடைக்கப்பெற்ற ஆசனங்களை விட 2020, தேர்தலில் பெற்ற ஆசனங்கள் கணிசமாக குறைந்திருக்கின்றது.

அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அந்த அடிப்படையில் முற்று முழுதாக நாங்கள் மக்களிடமிருந்து தூக்கியெறியப்பட்டோம் என்று சொல்ல முடியாது. நாங்கள் மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

பொய்யான போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும், தமிழ்மக்கள் ஒன்பது ஆசனங்களை தெரிவு செய்திருக்கின்றார்கள்” என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான த.கலையரசன் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் கூறினார்.

அந்தச் செவ்வியின் முழு விவரம் வருமாறு;

கேள்வி :- வடகிழக்கில் கூட்டமைப்பு சார்பாக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கிடைத்ததை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

பதில்:- வடகிழக்கில், இலங்கை தமிழ் அரசுக்கட்சி சார்பில் ஒன்பது பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவுசெய்திருக்கின்றார்கள். கூட்டமைப்பு மாத்திரமல்ல ஐக்கிய தேசிய கட்சி போன்ற தேசிய கட்சிகளும் அதிகமான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறவில்லை என்பதை யாவருமறிவர்.

ஏறத்தாழ 95, 000 வாக்காளர்களை கொண்ட அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் பெரும்பான்மையாக கூட்டமைப்புக்கு பூரண ஆதரவினை வழங்கவில்லை என்பதை கடந்த 2020 பாராளுமன்ற பொதுத்தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டத்திற்கு தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதனை கருத்திற்கொண்டு தமிழ் தேசிய தலைவர்கள், அம்பாறைக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வழங்க வேண்டும் என்ற நல்ல சிந்தனையோடு, அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு சார்பாக எனக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

உண்மையிலேயே அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சார்பாக மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே தமிழ்மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்திசெய்யக்கூடிய வகையிலே எதிர்வரும் காலங்களில் செயற்படுவேன்.

கேள்வி :- வடகிழக்கில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆசனங்கள் சிதறுண்டது தொடர்பில் கூற விழைவது ?

பதில்:- நாட்டிலே இடம்பெற்ற தொடரான யுத்தமும், யுத்தம் நிறைவடைந்ததன் பிற்பாடு தமிழ்மக்களின் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை என்ற ஆதங்கமும், தமிழ் மக்களிடமிருந்து கூட்டமைப்பை பிரித்தெடுக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தந்திரோபாய கையாளுகைகளுமே கூட்டமைப்பின் வாக்கு வீழ்ச்சியடைய காலாயமைந்தது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் கட்சிக்காக புனிதமான பயணத்தை முன்னெடுத்தவர்கள். கட்சித் தலைவர்கள் வெறுமனே அரசியலில் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை மேற்கொண்டவர்களல்ல.

மக்களின் விடுதலையை நோக்கிய அபிவிருத்தி என்ற வகையில் செயற்பட்டவர்கள். அந்த அடிப்படையில் எங்களை தூக்கியெறிந்துவிட்டார்கள் என்று சொல்லவில்லை, திட்டமிட்டு சில சக்திகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் தோல்வியடைந்த நிலை தற்காலிக தோல்வியே தவிர நிரந்தரமானதல்ல. ஆகவே இவ்வாறான பிரித்தாளும் செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டி விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு, எங்களுடைய மக்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கக்கூடிய செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளோம்.

எந்த விடயத்தை எடுத்துப் பார்த்தாலும் நாங்கள் பொய்யை மக்கள் மத்தியில் திணிப்பவர்களல்ல. உண்மையான ஜனநாயக நீரோட்டத்திலே இணைந்து தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்கும் நோக்கிலேயே செயற்படுவோம்.

கேள்வி :- அவ்வாறாயின் வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சி, எதிர்வரும் காலங்களில் நீடித்து நிலைக்காது என கூறுகின்றீர்களா ?

பதில் :- பெரும்பான்மையின சிங்கள மக்களின் வாக்குகளால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள தலைவர் கோத்தபாய தெரிவு செய்யப்பட்டது போல 2020 பாராளுமன்ற தேர்தலிலும் பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை பெற்று பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுள்ளது. சிங்கள பெரும்பான்மையின துவேசத்தின் அடிப்படையில் நாட்டின் தலைமைத்துவங்கள் செயற்பட்டதனால் கடும்போக்கான தலைவர்கள்தான் எங்களை காப்பாற்றுவார்கள் என்ற அடிப்படையிலேயே பெரும்பான்மையின சிங்கள மக்கள் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்‌ஷவை ஆதரித்தது மாத்திரமல்லாது, பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் பொதுஜன பெரமுனவை அமோக வெற்றியீட்டச் செய்துள்ளனர்.

நாட்டிலுள்ள இன ரீதியான அடக்குமுறையினால் கடந்த காலம் தொட்டு வடகிழக்கில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை தமிழ்மக்கள் மீது கடந்தகால தமிழ்மக்கள் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவில்லை என்பதை அம்பாறை தமிழ்மக்களின் வாக்குகள் கட்டியம் கூறி நிற்கின்றன. நிச்சயமாக கூட்டமைப்பு வடகிழக்கில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது, கடந்த தேர்தல்களில் கிடைக்கப்பெற்ற ஆசனங்களை விட 2020, தேர்தலில் பெற்ற ஆசனங்கள் கணிசமாக குறைந்திருக்கின்றது, அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

அந்த அடிப்படையில் முற்று முழுதாக நாங்கள் மக்களிடமிருந்து தூக்கியெறியப்பட்டோம் என்று சொல்ல முடியாது, நாங்கள் மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கின்றோம். பொய்யான போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும், தமிழ்மக்கள் ஒன்பது ஆசனங்களை தெரிவு செய்திருக்கின்றார்கள்.

கேள்வி :- மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கம் கொண்டுள்ள நிலையில், தமிழ்மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதென்பது சாத்தியமானதா ?

பதில் :- அந்நியர் ஆட்சிக்காலத்தில் இருந்து இலங்கை சுதந்திரமடைய வேண்டும் என்று செயற்பட்ட வரலாறுகள் உண்டு. தமிழ் மக்களின் வாக்குகளை கவரக்கூடிய தேர்தல் விஞ்ஞாபனத்தை கட்டமைத்து ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ்மக்களை உதறித் தள்ளிய வரலாறுகளே அதிகம். கடந்த ஆட்சிக்காலங்களிலே செயற்பட்ட பெரும்பான்மையின தலைவர்கள் தமிழ்மக்களை உதாசீனப்படுத்தி அவர்களின் இருப்புகளை, கிடைக்க வேண்டிய உரிமைகளை மறுதலிக்கின்ற ஒரு நிலைமையில்தான் தீர்வு விடயம் மேலோங்கி விஸ்வரூப நிலையில், பல அழிவுகளை எதிர்கொண்டது.

கடந்த 2015, ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு சில விடயங்கள் நடந்தேறும் என்ற நம்பிக்கை தமிழ்மக்களிடத்தில் இருந்தது, அதனால்தான் ஆட்சிமாற்றமும் ஏற்பட்டது.

அடிப்படை உரிமை சார் விடயங்களை பெற வேண்டும் என்பதற்காக ஆட்சிக்காலம் முடியும் வரைக்கும் ஏதாவது பெற்றுவிடலாம் என்பதற்காகத்தான் இணைந்து பயணிக்க வேண்டிய தேவை கூட்டமைப்பிடம் இருந்தது.

பெரும்பான்மையின தலைவர்கள், அரசியல் அதிகாரம் மிக்கவர்களாக தமிழர்களை வாழ வைப்பார்களா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

எங்களுடைய தமிழ் மக்களின் நீண்டகால அரசியலுரிமை பிரச்சினையில் இருந்தும் கூட்டமைப்பு விடுபட முடியாது. எனவே தர்மசங்கடமான நிலையில் இருந்துதான் அரசியலை முன்னெடுக்க வேண்டிய நிலைப்பாடு கூட்டமைப்புக்கு ஏற்பட்டது. எந்த பெரும்பான்மையின தலைவர்களும் இதய சுத்தியோடு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்த சந்தர்ப்பங்களையும் எங்களுக்கு வழங்கவில்லை. தமிழ்மக்களின் நீண்டகால அடிப்படை பிரச்சினைக்கு தீர்வுகளை நிறைவேற்ற வேண்டிய தேவையும் பொறுப்பும் கூட்டமைப்புக்கு இருக்கிறது.

கடந்த காலங்களில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு 13 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் நிறைவேற்றதிகார முறையைக் குறைக்க 19 ஆவது திருத்தச்சட்டம் என்பன கொண்டு வரப்பட்டது. இப்பொழுது இந்த அரசாங்கம் 2/3 பெரும்பான்மையை பெற்றுக்கொண்டதோடு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ” ஜனநாயகமற்ற 19 ஆவது திருத்தச்சட்டத்தை அகற்ற வேண்டும்” என அறிக்கை விட்டுள்ளார். நிச்சயமாக அவ்வாறு அகற்றப்படும்போது சிறுபான்மை சமூகம் மாத்திரமல்ல நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா என்ற கேள்வியும் நிலவுகிறது.

19 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக இல்லாது செய்தால் நாட்டின் தலைவர், அதிகாரங்களை நினைத்தபடி செயற்படுத்துகின்ற ஒரு நிலைமை ஏற்படும். அவ்வாறு ஏற்படும்போது அதிகாரம், தனிப்பட்ட தலைவரிடம் செல்கின்ற நிலைமை இருக்கின்றது. அவ்வாறு 19 ஆவது திருத்தச்சட்டம் இல்லாமல் போகுமானால் ஒரு சர்வாதிகார நிலைப்பாடு நாட்டிலே உருவாகும். அதே போல 19 ஆவது திருத்தச்சட்டத்திலே இருக்கின்ற அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறுவது, சிறுபான்மை சமூகத்தை ஒடுக்குகின்ற செயற்பாடாகத்தான் இருக்கமுடியும். 13 ஆவது ,19 ஆவது திருத்தச்சட்டங்களில் இருக்கின்ற அதிகாரங்களை குறைத்தால் சிறுபான்மை சமூகத்திற்குரிய அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்குரிய முயற்சியாகவே பார்க்க முடியும்.

குறிப்பாக போராட்ட முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டபோது மாகாண சபை, 19 ஆவது திருத்தச்சட்டம் ஆகியவற்றின் ஊடாக மக்கள் நன்மை பெற்றார்களே தவிர வெறுமனே தமிழ்மக்கள் மாத்திரம் நன்மை பெறவில்லை. ஐக்கிய இலங்கையில் பிரஜை என்ற அடிப்படையில் ஜனநாயக நீரோட்டம் நிறைந்த தேசமாக இலங்கை திகழ வேண்டும். அதற்காக அனைவரும் ஒத்துழைப்பு செய்வதே நாட்டினதும் காலத்தினதும் தேவையாகும்.

கேள்வி :- அம்பாறை மாவட்டத்தில் பல சவால்களுக்கு மத்தியில் தேசிய பட்டியல் ஆசனத்தை தனதாக்கிக்கொண்ட தங்களது தேர்தல் கால வியூகங்கள் எவ்வாறு அமைந்திருந்தது ?

பதில் :- கடந்தகால யுத்தசூழலில் எல்லைக்கிராமங்களில் இருந்த தமிழர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடைய தேவைகள் நிறைவுசெய்யப்படவில்லை என்ற ஆதங்கமும் அவர்களுக்கு இருந்தது. மூவினங்களும் வாழ்கின்ற அம்பாறையில் சிங்கள, முஸ்லிம் இனங்கள் பெரும்பான்மையாக வாழுகின்றபோது இவ்விரண்டு சமூகங்களின் நெருக்குவாரங்களுக்குள் சிக்கல்படும் தமிழர்கள் பல தேவைகளை எதிர்கொண்டவர்களாகவும் இருந்தனர்.

அரசுடன் இணைந்து பயணித்து தேவைகளை பூர்த்தி செய்வார் என்ற அடிப்படையிலேயே மக்கள் கருணாவின் பின்னால் அணி திரண்டனர். இருந்தும் விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு காரணமானவர், தமிழர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்தவர், கிழக்கு மாகாண மட்டக்களப்பில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் களமிறக்கப்பட்டும் தோல்வியடைந்துள்ளார்.

தற்காலத்தில் தமிழர்களை கவரக்கூடிய வகையில் இன ரீதியான முரண்பாடுகளை மக்கள் மத்தியில் கூறுகின்றபோது இளைஞர்கள் சிலர் இதுதான் இக்காலத்துக்கு பொருத்தமான அரசியல் பேச்சு என்ற அடிப்படையில் ஒரு சில அரசியலாளர்களின் பின்னால் அணி திரண்டு தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு, தங்களின் கலை கலாசார தொல்பொருள் அடையாள இருப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் இருக்கிறது.

நிச்சயமாக 2020 பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவதில்லை என்ற முடிவோடுதான் இருந்தேன். இருந்தும் மக்களின் ஆதரவால் குறுகிய காலத்திற்குள் பிரசார பணிகளை ஆரம்பித்தபொழுது மக்கள் மத்தியில் இருந்த வினாக்கள் பெறுமதி மிக்கனவாகவும் அதிருப்தி கொள்ளும் வகையிலுமே அமைந்திருந்தது.

இவ்வாறான சவால்களுகளுக்கு மத்தியிலேயே தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுத்தேன். எஎதிர்வரும் காலங்களில் கூட்டமைப்பிலுள்ள மிக முக்கிய தொண்டர்களை அரவணைத்து அதனூடாக முழு நேர அரசியல் பணியை முன்னெடுத்து தமிழ்மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்குரிய முயற்சிகளை செய்வேன்.

கேள்வி :- கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்காக என்ன செய்தது என்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் தங்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கும் ?

பதில் :- சர்வதேச ரீதியான தமிழ் மக்களுடைய விசாரணை பொறுப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்திருக்கின்றார்கள். எங்களுடைய மக்கள் கொலை செய்யப்படுகின்ற போது மெளனிகளாக ஓடி மறைந்தவர்கள் இன்று குரல் எழுப்புகிறார்கள். இந்த நாட்டிலே இடம்பெற்ற கொடிய யுத்தம், தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விடயங்களை வெளியிலே கொண்டுவந்த சக்தியாக கூட்டமைப்பு திகழ்கிறது.

சர்வதேச விசாரணை, சட்டங்களின் பிரகாரம் நியாயத்தின் அடிப்படையில் கையாளப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் கூட்டமைப்பு செயற்படுகிறது. எம்மை மக்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்ற விடயத்திலேதான் இவ்வாறான கேள்விகள் மக்கள் முன்எழுகிறது. தமிழ் மக்களின் போராட்டத்தை முடக்கியவர் மக்கள் ஆதரவை பெறுவதென்பது, இலகுவான காரியமல்ல.

கூட்டமைப்பு சர்வதேச விசாரணையினை வலியுறுத்துகிறது. அரசு சர்வதேச விசாரணைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் சகல வேலைத்திட்டங்களும், எங்களுடைய நாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுகிறது. தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது இருக்கின்ற ஒரேயொரு சக்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே. தமிழ் மக்களிடமிருந்து எங்களை தள்ளி வைப்பதற்காக இல்லாமல் செய்வதற்காக ஒரு முன்னெடுப்பை அரசாங்கமும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற தமிழ் அரசியல்வாதிகளும் செயற்படுத்துகிறார்கள்.

தொழில் ரீதியான புறக்கணிப்பால் தமிழர்கள் இந்நாட்டில் புறக்கணிக்கப்பட்டதுடன், மோசமான போர்ச்சூழலில் உயிர் அச்சுறுத்தல் நிலைமையில் வாழ முடியாத ஒரு சூழலும் இருந்தது. வெறுமனே நாட்டிலே நடந்த யுத்தம், தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டிருந்த நில ஆக்கிரமிப்பு என்கின்ற விடயங்களையெல்லாம் புரியாதவர்களே கூட்டமைப்பு எதை செய்திருக்கின்றது என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

நான் நீண்ட காலமாக அரசியல் பணியை முன்னெடுப்பவன். நிச்சயமாக அரசியலிலே எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வை பெற்றுக்கொடுப்பேன். சிறு சிறு குக் கிராமங்களில் பரந்துபட்டு எல்லைப்புற பகுதிகளை பாதுகாத்து வாழ்ந்து வரும் கிராம மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்துவதற்காக மக்களுடன் இணைந்து நின்று பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவேன் என்பதை கூறிக்கொள்ள விழைகின்றேன்.

கேள்வி :- பாராளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு கூற விழைவது ?

பதில் :- கடந்த காலங்களில் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியிருந்தேன். அதே போன்று மாகாண சபையில் களமிறங்கி உறுப்பினராக தெரிவாகியிருந்தேன். மூன்று தடவை நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில் களமிறங்கி தவிசாளராக, உப தவிசாளராக பதவி வகித்திருக்கின்றேன். அதே போன்று கடந்த காலத்தில் எனது வெற்றிக்காக இணைந்துழைத்த இளைஞர்கள், தற்காலத்தில் சில மாற்றுத் தலைமைகளோடு இணைந்திருக்கின்றார்கள், அவர்களையெல்லாம் என்னுடன் இணைந்து கட்சிக்குள் பயணிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன். அவர்களையும் எங்களோடு அரவணைத்து கட்சியை மக்கள் மயப்படுத்தி அதன்பால் பயணித்து, மக்களுடைய விடுதலையை வென்று கொடுப்போம்.

கேள்வி :- கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுமா ?

பதில் :- கல்முனையில் இரண்டு சமூகங்கள் இணைந்து வாழ்வதனால் செயலக தரமுயர்த்தல் முன்னெடுக்கப்படும்போது தாமதங்கள் ஏற்படுகின்றன. அந்த அடிப்படையில் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுடன் இணைந்து பேசித்தான் தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் செயற்படுகின்றோம். முஸ்லிம்களை பொறுத்தமட்டில் அரசியல்வாதிகள் அவர்களுடைய இனம் சார்ந்த விடயத்தில் கண்ணியமாக செயற்படுகிறார்கள், அதே போன்று நாங்களும் இருக்கின்றோம், நாங்களும் தள்ளி நிற்பவர்களல்ல.

நிச்சயமாக கல்முனை பிரதேச செயலகம் தமிழர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம். செயலக தரமுயர்வு விரைந்து செயற்படுத்தக்கூடிய கருமமல்ல. கல்முனையில் முஸ்லிம் சமூகமும் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள், அதற்காக முஸ்லிம்களின் பிரதேசங்களை ஆக்கிரமிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எங்களுடைய தமிழ் பிரதேசங்கள் கல்முனை செயலகத்துடன் இணைந்த வகையில் நிர்வாக கட்டமைப்பினை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

நேர்காணல் :- பா. மோகனதாஸ்

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -