- Advertisement -
Home Srilanka "அடுத்த ஐந்து வருடங்களில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை"; ஊடகத்துறை அமைச்சர்!!

“அடுத்த ஐந்து வருடங்களில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை”; ஊடகத்துறை அமைச்சர்!!

- Advertisement -

வடக்கு கிழக்கு மக்கள் பாராளுமன்ற தேர்தல் ஊடாக அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வு என்பனவற்றுக்கு இரண்டாம் இடத்தையே கொடுத்துள்ளனர். அவர்கள் முதல் இடத்தை அபிவிருத்திக்கும் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவுமே ஆணை வழங்கியுள்ளனர் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

எனவே எமது அரசாங்கத்தை பொறுத்தவரை அடுத்து ஐந்து ஆண்டுகளில் அரசியல் தீர்வு என்பது இரண்டாம் பட்சமேயாகும். அபிவிருத்திக்கே முன்னுரிமை அளிப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பத்திகை ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சரவை பேச்சாளருடனான பிரத்தியேக செவ்வியின் விபரம் வருமாறு

கேள்வி- தேர்தலில் 150 ஆசனங்களை ஆளும் கட்சி பெற்றமை எவ்வாறு சாத்தியமானது?

பதில்- மக்கள் பாரிய கஷ்டங்களை எதிர்கொண்டிருந்தனர். 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு பொய்யான திரைப்படம் காட்டப்பட்டது. திருடர்களை பிடிக்கப்போவதாக கூறியே ஆட்சிக்கு வந்தனர். அவ்வாறு ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சிக்கு வந்தவர்கள் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி மத்திய வங்கியில் கொள்ளையடித்தனர். அதனை நியாயப்படுத்தி புத்தகங்களையும் எழுதினர். அன்றிலிருந்து அந்த அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கையிழந்தனர். அன்றிலிருந்து அரசாங்கம் நொண்டியடித்தே பயணித்தது. முன்னைய ஆட்சியாளர்களுக்கு அது தெரிந்தமையின் காரணமாகவே அவர்கள் எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருந்தனர். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றோம். நாடு மேலும் பலவீனமடைந்தது. அதனால் மக்கள் எம்மை தொகை தொகையாக வெற்றிபெறவைத்துவிட்டனர்.

கேள்வி- வடக்கு கிழக்குக்கு வெளியே அனைத்து பிரதேசங்களிலும் சகலரும் ஒரே வகையில் எவ்வாறு எண்ணலாம்?

பதில்- மக்கள் அந்தளவு விரக்தியில் இருந்தனர். சிங்கள பெளத்த அடிப்படையை காப்பாற்றவேண்டும் என்று மக்கள் நினைத்தனர். காரணம் சிங்கள பெளத்த அடிப்படையை முன்னைய அரசாங்கம் தாக்கியது.

கேள்வி- வடக்கு கிழக்கில் ஆளும் கூட்டணிக்கு அதிகளவு உறுப்பினர்கள் எவ்வாறு சாத்தியமானது ?

பதில்- இந்த இடத்தில் தமிழ் மக்கள் ஒரு விடயத்தை உணர்த்தியுள்ளனர். அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாங்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அரசியலிலும் சாதிக்கவில்லை. அபிவிருத்தியையும் செய்யவில்லை. அன்றாட வாழ்க்கையை முன்னேற்றவும் அந்த மக்களினால் முடியவில்லை. அதனால் நாம் அரசியல் அதிகாரத்தை பின்னர் பார்ப்போம் என்றும் தற்போது அரசாங்கத்தை ஆதரித்து அபிவிருத்தியையும் அன்றாட வாழ்வையும் பெறுவோம் என்று மக்கள் எண்ணியுள்ளனர். காரணம் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாங்கள் வடக்கு கிழக்கில் மெகா அபிவிருத்திகளை நாம் செய்தோம். பாடசாலை, மருத்துவமனை, யாழ்தேவி, மின்சாரம், விவசாயம், மீன்பிடி, போன்ற துறைகளில் பாரிய சேவையை ஆற்றினோம். ஆனால் 2015 இல் அரசியல் அதிகாரத்தை தருவதாக கூட்டமைப்பினர் கூறினர். ஆனால் என்ன நடந்தது? அதுதான் இம்முறை மக்கள் மாறிவிட்டனர்.

கேள்வி- தமிழ்க் கூட்டமைப்பின் ஆசனங்கள் 16 இலிருந்து 10 ஆக குறைய இதுவா காரணம்?

பதில்- தெளிவான முறையில் இதுவே காரணம். பிள்ளையான் இன்னும் 80 வாக்குகள் எடுத்திருந்தால் மற்றுமொரு ஆசனத்தை பெற்றிருப்பார். யாழில் அங்கஜன் முதலாம் இடத்தை பெற்றார்.

கேள்வி- இதன்மூலம் அரசாங்கம் பெற்ற செய்தி என்ன?

பதில்- அதாவது வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வு என்பனவற்றுக்கு மக்கள் இரண்டாம் இடத்தையே கொடுத்துள்ளனர். அவர்கள் முதல் இடத்தை அபிவிருத்திக்கும் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவுமே ஆணை வழங்கியுள்ளனர். உதாரணமாக பட்டதாரிகள் வேலை வாய்ப்பு வழங்குகின்றோம். சாதாரண தரம் சித்தியடையாத இளைஞர்கள் ஆட்டோ ஓட்டுகின்றனர். அவர்களுக்கு அரசாங்க தொழில் கனவாக இருக்கின்றது. அடுத்த மாதமளவில் அவ்வாறான ஒரு இலட்சம் பேருக்கு நாங்கள் தொழில் வழங்குவோம்.

கேள்வி- இந்த ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் வடக்கு கிழக்கு ஏதாவது அநீதி ஏற்பட்டுள்ளதா?

பதில்- அப்படி எதுவும் இல்லை. எமக்கு இதுவரை 61000 பேர் உள்ளனர். எனவே வடக்கு கிழக்கில் இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர்.

கேள்வி- அடுத்த ஐந்து வருடங்களில் அரசாங்கம் முன்னுரிமை வழங்குவது அரசியல் தீர்வுக்கு அல்ல அபிவிருத்திக்கேயாகும். நான் கூறுவது சரியா?

பதில்- நீங்கள் கூறுவது சரி. அரசியல் தீர்வு என்பது இரண்டாம் பட்சமே. அபிவிருத்திக்கே முன்னுரிமை அளிப்போம். அபிவிருத்தி என்பது வெறுமனே பெளதீக அபிவிருத்தி அல்ல. மனிதவளத்தையும் வலுவூட்டுவோம்.

கேள்வி- அப்படியானால் அங்கஜன் இராமநாதனுக்கு அமைச்சர் பதவி ஒன்றை வழங்கியிருக்கலாமே?

பதில்- அமைச்சு பதவி வழங்கியமைக்கு ஒரு முறைமை காணப்படுகின்றது. அதன்படியே பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கேள்வி- என்ன முறை அது?

பதில்- 2015 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியில் அதாவது எதிர்நீச்சல் போட்ட 53 பேருக்கே அமைச்சு பதவிகள் முன்னுரிமையுடன் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டத்திலேயே ஏனையவர்கள் பரிசீலிக்கப்பட்டனர்.

கேள்வி- நீங்கள் என்ன கூறினாலும் அங்கஜனுக்கு ஒரு விசேடமாக கவனித்திருக்கலாம் அல்லவா? ’

பதில்- அதனால்தான் குழுக்களின் பிரதி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அது பாராளுமன்றத்தில் பெரிய பதவியாகும்.

கேள்வி- எதிர்காலத்தில் அங்கஜனுக்கு அமைச்சு பதவி கிடைக்குமா?

பதில்- அமைச்சரவை அமைச்சர் ஒருவர் செய்கின்ற பணிக்கு சமமான பணியை அங்கஜன் ஆற்றுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதற்கு சமமான பின்னணி உருவாக்கிக்கொடுக்கப்படும்.

கேள்வி- அமைச்சரவை நியமனத்தில் சுதந்திரக் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்- நாங்கள் அவருக்கு மூன்று கொடுப்பதாக கூறினோம். அதனை செய்துள்ளோம்.

கேள்வி- பத்திக் அமைச்சு பாரிய விமர்சனத்துக்கு உட்படுகின்றதே?

பதில்- அது விடயம் தெரியாமல் முன்வைக்கப்படும் விடயம். 1976 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் பத்திக் வர்த்தகத்தில் இந்த நாட்டில் எத்தனை பேர் கோடிஸ்வர வர்த்தகர்களாகினர் என்று தெரியுமா? கொழும்பிலிருந்து மாரவில வரை கண்டிவரை நுவரெலியா வரை திஸ்ஸமகாராம வரை எத்தனை பத்திக் வேலைதளங்கள் இருந்தன தெரியுமா?

கேள்வி- அப்படியானால் தயாசிறிக்கு ஒரு வேலைத்திட்டமா கொடுக்கப்பட்டுள்ளது?

பதில்- அவருக்கு பாரிய இலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு உதாரணத்தை கூறுகின்றேன். அரச ஊழியர்களை வெள்ளிக்கிழமைகளில் முடியுமானவரை பத்திக் உடைகளை அணியுமாறு ஒரு கோரிக்கையை முன்வைத்தால் அந்த கைத்தொழிலின் நிலை என்ன?

கேள்வி- விஜேதாச ராஜபக்ஷ சுசில் பிரேம்ஜயந்த போன்றோர் ஏன் அமைச்சரவையில் உள்வாங்கப்படவில்லை?

பதில்- சிலருக்கு இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை மறுத்தனர்.

கேள்வி- நீங்கள் மீண்டும் ஊடகத்துறை அமைச்சராகவும் அமைச்சரவை பேச்சாளராகவும் வந்துள்ளமை குறித்து?

பதில்- எனது திறமைக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

கேள்வி- 19 ஆம் திருத்தம் நீக்கப்படவுள்ளது. அதற்கு பதிலாக வரப்போகின்ற 20 ஆம் திருத்தத்தில் 19 இல் உள்ள எந்த விடயங்கள் உள்ளடக்கப்படும்?

பதில்- தகவலறியும் சட்டம் 20 ஆம் திருத்தத்தில உள்ளடங்கும். ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் மற்றும் இரு தடவையே ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்ற விடயங்கள் 20 இலும் உள்ளடங்கும். அதிகமான சாதகமான விடயங்கள் உள்ளடக்கப்படும்.

கேள்வி- ஒரு வருடத்தில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியுமான ஏற்பாடு வருமா?

பதில்- அது தொடர்பில் இன்னும் பேச்சு நடத்தப்படவில்லை.

கேள்வி- அரசியலமைப்பு பேரவைக்கு என்ன நடக்கும்?

பதில்- அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக வேறு ஒரு முறை வரும். நியாயமான கருவி ஒன்று வரும்.

கேள்வி- சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு என்ன நடக்கும்?

பதில் சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமான முறையில் தனித்துவமாக உருவாக்கப்படும்.

கேள்வி- 19 ஐ நீக்கிய பின்னரா புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்?

பதில்- அப்படித்தான் திட்டமிட்டுள்ளோம்.

கேள்வி- மாகாண சபை முறை பயனற்றது என்று நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தீர்கள். புதிய அரசியலமைப்பு வரும்போது 13 க்கு என்ன நடக்கும்?

பதில்- அது தொடர்பில் தற்போது எதுவும் பேசப்படவில்லை.

கேள்வி- அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்- அரசாங்கம் அது தொடர்பில் இன்னும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

கேள்வி- 13 இல் ஏதாவது மாற்றங்களை செய்வதானால் இந்தியாவுடன் பேச்சு நடத்தவேண்டுமே?

பதில்- பூகோள அரசியலில் அனைவருடனும் இணைந்து செயற்படுவோம்.

கேள்வி- 13 இல் இருக்கின்ற பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் ?

பதில்- பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை ஒருபோதும் வழங்கமாட்டோம்.

கேள்வி- அது தொடர்பில் பேச்சு நடத்தவும் தயார் இல்லையா?

பதில்- பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் குறித்து பேச்சு நடத்தவும் அரசாங்கம் தயாரில்லை. அது முடியாத விடயமாகும்.

கேள்வி- எதிர்வரும் ஐந்து வருடங்கள் வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்துவிட்டு அடுத்த ஐந்து வருடங்களில் அரசியல் தீர்வு குறித்து பேசப்படுமா?

பதில்- வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதனை புரிந்துகொள்ளவேண்டும். உண்மையில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை அரசியல் பிரச்சினை எனின் அது தொடர்பில் சிந்திக்கலாம். எனக்கு தெரிந்த வகையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் பிரச்சினை இல்லை. சில அரசியல்வாதிகளுக்கே அரசியல் பிரச்சினை இருக்கின்றது.மக்களுக்கு அபிவிருத்தி பிரச்சினையே உள்ளது.

வடக்கு- கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் பகுதிகளை அபிவிருத்தி செய்ய நாம் சகல வசதிகளையும் வழங்கினால் அவர்களுக்கு வேறு என்ன தேவை?

கேள்வி- அப்படியானால் அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வு என்பன அடுத்த ஐந்து வருடங்களில் சாத்தியமாகாது?

பதில்- தெளிவான முறையில் சாத்தியமில்லை. கடந்த தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் அதிகாரப் பகிர்வை கேட்கவில்லை.

கேள்வி- உங்கள் தாய் கட்சி ஐக்கிய தேசிய கட்சிக்கு என்ன நடந்தது?

பதில்- சரியான நேரத்தில் தீர்மானம் எடுக்காமையின் விளைவாகும்.

கேள்வி- 2007 இல் நீங்கள் கட்சியைவிட்டு விலக எடுத்த முடிவு சரி அப்படியா?

பதில்- நிச்சயமாக சரியாகும். 2020 இல் என்ன நடக்கும் என்பதனை நான் அன்று கண்டேன்.

கேள்வி- ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணையிலிருந்து விலகிவிட்டோம். ஆனாலும் யுத்த குற்றச்சாட்டு அப்படியே உள்ளனவே?

பதில்- உள்ளக ரீதியில் நாங்கள் ஆராய்வோம். காணாமல் போனோர் தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும். உள்ளக பொறிமுறையை கொண்டுவரலாம். இழப்பீடு யாருக்கு வழங்கவேண்டும் என்பதனை பார்க்கவேண்டும்.

கேள்வி- காணாமல் போனோர் குறித்த அலுவலகத்துக்கு என்ன நடக்கும்?

பதில்- காணாமல் போனோர் அலுவலகம் நகைச்சுவையாகும். என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு என்னவெனில் அது தேவையில்லை என்பதாகும். அதனால் எந்த நன்மையும் இல்லை. ஐ.நா. மனித உரிமையை பேரவையை மகிழ்ச்சிப்படுத்தவே அது கொண்டுவரப்பட்டது. ஆனால் நாங்கள் பொய்யான வேலைகளை செய்யமாட்டோம்.

கேள்வி- வடக்கு புனர்வாழ்வு போன்ற விடயங்களுக்கு தனி அமைச்சு இல்லாதது ஏன்?

பதில்- அவ்வாறான இலக்குகள் உள்ளன. புனர்வாழ்வு அவசியம். ஆனால் அது நிரந்தரமாக தேவையில்லை. 12000 பேரை புனர்வாழ்வு அளித்து சமூகமயப்படுத்திவிட்டோம்.

கேள்வி- காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு காணப்படுமா?

பதில்- இராணுவத்தில் 4000 பேர் காணாமல் போயுள்ளனர். இராணுவத்தில் காணாமல் போனோர் என்பது செல்லுபடியான விடயம். பயங்கரவாதிகளை பொறுத்தவரை அவை செல்லுபடியற்றவையாகும். ஆனால் மனிதாபிமான ரீதியாக அந்த குடும்பங்கள் குறித்து சிந்திக்கலாம். ஆனால் அது உரிமையாகாது.

கேள்வி- காணாமல் போன தனது உறவுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிய ஒருவருக்கு உரிமை இல்லையா?

பதில்- உரிமை உள்ளது. ஆனால் அவர்கள் எவ்வாறு இழப்பீட்டை பெறுவார்கள் என்பதே சிக்கலுக்குரியதாகும். செல்லுபடியானவர்களுக்கே இழப்பீடு வழங்கலாம்.

கேள்வி- காணாமல் போனோர் தொடர்பில் 21000 முறைப்பாடுகள் உள்ளன. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை தேட அரசாங்கம் தயாரா? தெளிவான பதிலை சொல்லுங்கள்?

பதில்- அவர்கள் குறித்து தேட அரசாங்கம் தயார். ஆனால் அவர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புட்டவர்களாக இருப்பின் அவர்களுக்கான இழப்பீடு தொடர்பில் இரண்டு தடவை சிந்திக்கவேண்டிவரும். சிவில் மக்களாக இருப்பின் இழப்பீடு வழங்கலாம். இந்த 21000 இல் 15000 பேர் சிவிலி்யன்களாக இருந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கலாம். அதேபோன்றே காணாமல் போன இராணுவ வீரர்களுக்காகவும் இழப்பீடு வழங்கப்படும்.

கேள்வி- காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று அரசாங்கம் கருதுகின்றது?

பதில்- அவர்கள் இறந்திருக்கலாம் என்றே நாங்கள் எண்ணுகிறோம். அவர்கள் உயிருடன் இல்லை என்றே கருதுகின்றோம். ஆனால் அதனை உறுதியாக கூற முன்னர் கணக்கெடுப்பு ஒன்றை செய்யவேண்டும் என்பதனையும் இங்கு கூறி வைக்கின்றேன்.

கேள்வி- இது சர்ச்சைக்குரிய கருத்து?

பதில்- சில காணாமல் போனோர் எனக் கூறப்படுவோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். எனவே இது தொடர்பில் பரந்துபட்ட விசாரணை நடத்தப்படவேண்டும். தற்போது 11 வருடங்கள் கடந்துவிட்டன. 7 வருடங்களின் பின்னர் சான்றிதழ் வழங்கலாம்.

கேள்வி- எவ்வாறான சான்றிதழ்?

பதில்- 7 வருடங்களின் பின்னர் உயிரிழந்துவிட்டார் என்ற சான்றிதழை வழங்கலாம்.

கேள்வி- சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் பயணிப்பதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டுகிறது?

பதில்- சஜித் தரப்பு இதனை கூறுகிறது. நாங்கள் அவ்வாறு செயற்பட்டால் எமக்கு மக்கள் தேர்தலில் பதிலளிப்பார்கள். அதனை நாங்கள் ஏற்கனவே கண்டுள்ளோம். ஜே. ஆர். ஜயவர்த்தன காலத்திலும் அதனை கண்டிருக்கின்றோம்.

கேள்வி- இந்தியா சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான உறவு எவ்வாறு அமையும்?

பதில்- இந்தியான சீனா ஆகிய நாடுகள் எமது சகோதர நாடுகள். வர்த்தக தொடர்பை தாண்டிய ஒரு உறவு உள்ளது. அமெரிக்காவுடன் எங்களுக்கு அதிகம் வர்த்தக உறவே காணப்படுகின்றது. ஆனால் இந்தியா சீனா அன்றிலிருந்து எமக்கு உதவிய நாடுகள். சீனாவும் எமக்கு அதிகம் உதவி நாடு. இந்தியாவும் சகோதர நாடுதான்.முன்னாள் பிரதமர்களான சிறிமா மற்றும் இந்திரா ஆகியோர் சகோதரிகள் போன்று செயற்பட்டனர்.

கேள்வி- வடக்கு கிழக்கில் ஐந்து தமிழ் பிரதிநிதிகள் அரசுக்கு கிடைத்துள்ளனர். தமிழ் மக்களுக்கு என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

பதில்- தமிழ் மக்கள் மிகவும் இனிமையானவர்கள். எளிமையான எங்களுடன் பொருந்துகின்ற கலாசாரம் சமயம் என்பனவற்றுடன் பொருந்துகின்ற மக்கள். சிலரின் அரசியல் காரணமாக 99 வீதமான மக்கள் ஒரு இடத்தில் சிக்கிநிற்கின்றனர். எனது உறவினர் ஒருவர் தமிழர் சகோரர் இருக்கின்றார்.

கேள்வி- அடுத்த ஐந்து வருடங்களில் கூட்டமைப்புடன் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வு குறித்து பேசப்படாதா?

பதில்- அப்படி சொல்லவில்லை. ஆனால் பாராளுமன்றத்தில் முதல் அமர்வில் விக்கினேஸ்வரன் ஆற்றிய உரையை பார்த்தீர்களா? தீவிர போக்கு உரையாகும். விக்கினேஸ்வரன் பேசும்போது நான் அதிருப்தியடைந்துவிட்டேன். வேறு நாளாக இருந்திருந்தால் நான் சபையில் எழுந்திருப்பேன். விக்கினேஸ்வரனை மீண்டும் இந்த நாட்டில் ஒரு நோயாக மாறவேண்டாம் என்று நாங்கள் கூறுகின்றோம். அவரின் பேச்சு தொடர்பில் அதிருப்தியடைகிறோம். அவர் நீதியரசராக இருக்கலாம். ஆனால் யதார்த்த அரசியல் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

கலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...

பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here