Home Srilanka எ. ம. ச கட்சியின் தேசியப் பட்டியல் குறித்த இறுதித் தீர்மானம்!

எ. ம. ச கட்சியின் தேசியப் பட்டியல் குறித்த இறுதித் தீர்மானம்!

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் குறித்த இறுதித் தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசியப் பட்டியல் ஆசனம் குறித்த தமது முடிவை எங்கள் மக்கள் சக்தி கட்சி இதுவரை அறிவிக்காத நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இதனைக் கூறியுள்ளது.

எனினும், எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை தனக்கு பெற்றுக் கொள்வதற்காகவே, கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரரை அவர் ஒளித்துவைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரரின் இணைப்புச் செயலாளரான, ஹுனுபிட்டிய சந்திரசிறி தேரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில், எங்கள் மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் காணாமல் போயுள்ளதாக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பிலான விசாரணை நேற்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டது.

அத்துரலியே ரத்ன தேரர் கடந்த 19ஆம் திகதி, குறித்த முறைப்பாட்டை கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தார்.

எனினும், நேற்றைய விசாரணைகளுக்கு, ஹுனுபிட்டிய சந்திரசிறி தேரர் முன்னிலையாகியிருந்த போதிலும், அத்துரலியே ரத்ன தேரர் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஞானசார தேரரை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் எனும் தொனிப் பொருளிலேயே தமது கட்சியின் தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதாக, நுவரெலியா கவீஷ்வர தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தன்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுக்கும், அத்துரலியே ரத்ன தேரருக்காக மக்கள் வாக்களிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -