வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு உட்பட்ட குடும்பிமலை பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட மர கட்டிகளை கடத்திய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரம் மற்றும் வெட்டப்பட்ட மர கட்டிகள் என்பன திங்கட்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு உட்பட்ட குடும்பிமலை பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்பட்டு வியாபாரத்திற்கான துண்டுகளாக அறுவை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர், வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது வியாபாரத்திற்கான துண்டுகளாக அறுவை செய்யப்பட்ட மரக்கட்டிகளை கடத்தும் போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து ஐந்து இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான அறுவை செய்யப்பட்ட மரங்களும் மற்றும் மரங்கள் ஏற்றுவதற்கு பயன்படுத்திய உழவு இயந்திரம்; என்பன சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளதாக வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
குறித்த சுற்றிவளைப்பில் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்களான ஏ.ஐ.பத்திரன, பி.எஸ்.கருணாரத்ன, டி.எம்.சிறிவர்த்தன, ரி.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கைப்பற்றினர்.