Home Spiritual தியான வாழ்வும் பரிபூரணத்துவமும்!

தியான வாழ்வும் பரிபூரணத்துவமும்!

கடந்த பல வருடங்களாக உலக மக்களின் நல் வாழ்வு கருதி ஆன்மீகக்குரு மகா யோகி ஸ்ரீ புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் உவந்தளிக்கப்பட்ட ஆன்மீக வாழ்வு பற்றி பல உபதேச தொகுப்புகளை நாம் தொடர்ந்தும் தொகுத்து  வழங்கியுள்ளோம்.

மேலும் மேலும் மக்கள் அனைவரும் விழிப்படைந்து வாழ்வை இனிமையாக்கி கொள்ள பாமர மக்களுக்கும் புரியும் விதத்தில் மிக ஆளமாகவும் கருத்து செறிந்ததுமான அன்றாட வாழ்வியலை அடிப்படையாகவும் அங்கே நிகழும் நிகழ்வுகளை உதாரணமாக கொண்டும் ஞான உபதேச தொகுப்பான “தியான வாழ்வும் பரிபூரணத்துவமும்” எனும் தலைப்பிலே மிக எளிய முறையிலே கீழே தருகிறோம்.

மனிதர்கள் இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட பொருட்களிலே மிகவும் முதன்மையானவர்கள் ஏனெனில் மனிதர்கள் இறை எனும் உணர்வினை அடைய கூடிய அல்லது உணரக்கூடிய அனைத்து விதமான அம்சங்களுடனும் இவ்வுலகில் பிறந்துள்ளார்கள் அதனால்தான் மனிதன் மாத்திரம் ஆறவு படைத்தவன் பிற உயிரினங்கள் எல்லாம் மனிதனை விட குறைந்த அறிவுடனே படைக்கப்பட்டுள்ளன என்று நாம் அறிவோம்.

ஆனால் மனிதர்கள் தமது ஆறாவது அறிவினை பயன்படுத்த தவறியமையின் விளைவே இன்று உலகம் அழிவுப் பாதையினை நோக்கி மிக மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது எனலாம்.

உலகில் எங்கு பார்த்தாலும் பயங்கர நோய், கொடூர விபத்துகள், கொலை, கொள்ளை, பசி, பஞ்சம், பட்டினி என அதர்மம் தலைவிரித்தாடுகிறது தர்மம் குன்றி விட்டது மக்கள் தம்மை படைத்த பரம்பொருளை மறந்து விட்டார்கள் அர்த்தமற்ற சடங்குகள், களியாட்டங்கள் என அனைத்திலும் தமது நேரத்தை, பணத்தை வீண் விரயம் செய்வது மாத்திரமல்லாமல் தன் சார்ந்த சமூகத்தையும் சீர் குலைக்கும் செயலில் ஈடுபடத்துவங்கி விட்டார்கள்.

இங்கு தாம் எவ்வாறு இவ்வுலகில் பிறந்தோம் என்பதனை மனிதர்கள் மறந்து விட்டார்கள் அதனை ஞாபகம் ஊட்டவே சித்தர்கள், மகான்கள், ஞானிகள், யோகிகள், இறை தூதர்களாக என காலத்துக்கு காலம் இவ்வுலகில் இறைவனால் அனுப்பப்படுகிறார்கள் சில சந்தர்ப்பத்தில் பிரபஞ்சத்தை படைத்த இறைவனே மனித உடல் தரித்து இவ்வுலகில் அவதரிக்கிறார்.

ஆனால் மாயை எனும் சுழலில் அகப்பட்ட மானிடர்களுக்கு மாயையின் தோற்றமானது பெரும் சுகத்தை தரும் பிம்பத்தை தோற்றுவித்து ஈற்றில் எதையெதையெல்லாம் இன்பம் என நினைத்து மனிதர்கள் ஈடுபட்டார்களோ அந்த இன்பம் சிற்றின்பமே அது சிறிது காலமே நிலைத்திருக்கும் எனும் பாடத்தினை புகட்டுகிறது.

ஆனால் அதை வென்று பேரின்பத்திற்குள் மூழ்கிட மனிதர்கள் நினைத்திடும் தறுவாயில் ஒன்று முதுமையினை அடைந்திருப்பார்கள் அல்லது தீராத நோயின் பிடியில் அகப்பட்டிருப்பார்கள் அல்லது தாம் சேர்த்து வைத்திருந்த பொன்,  பொருள், நிலம், சொத்துக்கள் அத்தனையினையும் இழந்திருப்பார்கள்.

இவ்வாறான நிலையில் அவர்களுக்கு படைத்தவனின் எண்ணம் வந்தாலும் அவர்களால் மனதை ஒரு நிலைப்படுத்தி அந்த இறைவனை வழிபடும் தன்மை அற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.

உதாரணத்திற்கு கடும் பசியுடன் வரும் ஒருவருக்கு இறைவனைப் பற்றியோ தியானத்தை பற்றியோ போதித்தால் அவரது பசி முடிவுக்கு வராது முதலில் அவருடைய பசிக்கு உணவை வழங்கி அவரது பசியினை போக்கிய பின்னர் இனி வரும் காலங்களில் யாசகம் செய்யாமல் அந்த பசியினை பூர்த்தி செய்திடும் வழி முறைகளை அவருக்கு உரைக்கும் போது அவர் உடலாலும் உள்ளத்தாலும் திருப்தி நிலையடைந்து நிரந்தரமாக பசியாறிடும் வழிமுறைகளை பின்பற்ற தொடங்குவார் அல்லவா!

அதனால்தான் எடுத்த எடுப்பிலே கண்களை மூடுங்கள் தியானம் செய்யுங்கள் என்று கூறுவதால் உடனடியாக எவராலும் அதனை புரிந்து கொள்ளவோ பின்பற்றவோ இயலாமல் போகிறது.

ஆனால் தீர்வு காண இயலாது என்று மனிதர்கள் எண்ணியிருக்கும் விடயங்கள் அனைத்திற்கும் ஒரேயொரு தீர்வுதான் அதுவும் மிக மிக இலகுவானது ஆனால் அதனை தகுந்த குருவினை சரணடைந்து செயல்படுத்துவதே சாலச் சிறந்தது.

ஏனெனில் இவ்வுலகில் பலதரப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள் அவர்கள் ஒவ்வொருவரது எண்ணங்களும் சிந்தனைகளும் வெவ்வேறு பட்டதாக காணப்படும் ஒவ்வொருவரும் பல்வேறு விதமான செயல்களை செய்து கொண்டிருப்பார்கள் ஆக இப்படியான மனிதர்களை ஒரே நேர்கோட்டில் நிறுத்துவது கடினமே அவ்வாறிருக்கும் போது பலர் தம் வயிற்றுக்காவும் வாழ்விற்காகவும் ஆன்மீகத்தை கேடயமாக்கிக் கொண்டு தனக்கு என்ன தோன்றுகிறதோ அதனை மக்களுக்கு கூறி தானும் தெளிவடையாமல் மக்களையும் குழப்பமடையச் செய்து கொண்டும் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் அவர்கள் பூண்டுள்ள வேடம் கலையும் தருணத்தில் மக்கள் போலிகளை இனங்கண்டு கொள்கிறார்கள் அதனால் ஏற்பட்ட ஏமாற்றமும் தோல்விகளும் மக்களுக்கு உண்மையான ஆன்மீக வழிகாட்டிகளை இனங்கண்டு கொள்வதற்கு பெரும் தடையாக காணப்படுகிறது.

ஆனால் பல விதமான உருவங்களில் பலவிதமான எண்ணங்களுடன் பல்வேறுபட்ட மனிதர்களை ஒரே நேர் கோட்டில் நிறுத்திட அவர்களை படைத்தவர் இவ்வுலகில் அவதரித்தால் மாத்திரமே அது சாத்தியமாகும்.

ஏனெனில் படைத்தவருக்குத்தான் தன்னால் படைக்கப்பட்ட பொருட்களில் எந்த இடத்தில் என்ன விடயங்கள் உள்ளன அதனை நேர் செய்ய எந்த உத்தியினை கையாள வேண்டும் என்று அவருக்கு மாத்திரமே தெரியும் இதனையே பிரபஞ்ச இரகசியம் என்கிறார்கள் படைப்பின் இரகசியமான இதனை உணர்ந்தவர்கள் ஞானிகளாக, யோகிகளாக, சித்த புருஷர்களாக, பெரும் தபசுகளாக இவ்வுலகில் வாழும் மக்களின் நல் வாழ்வு கருதி தாம் அடைந்த அந்த ஆன்ம நிலையினை அம்மக்களுக்கு ஆங்காங்கே ஆசிரமங்கள் அமைத்து போதித்து வருகிறார்கள்.

அவ்வாறு குரு பரம்பரையில் என்றென்றும் மூல குருவாக விளங்கும் அகத்திய பெருமானின் நேரடி சீரடாக விளங்கிய ஸ்ரீ கண்ணையா யோகீஸ்வரரும் அவரை தம் ஆத்ம குருவாக ஏற்று அவரின் நேரடி வழிநடாத்தலில் காயத்திரி சித்தி பெற்று காயத்திரி சித்தராக இவ்வுலகில் அவதரித்த மகா அவதார புருஷர் பகவான் முருகேசு சுவாமிகளின் அன்புக்கு பாத்திரமான மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளால் தன் குருநாதர் எத்தகைய கைங்கரியத்தினை இவ்வுலகிற்கு ஆற்றிட அவதரித்தாரோ அவர்களின் சூட்சுமமான வழி நடாத்தலின் பேரில் இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவிலும் ஏனைய உலக நாடுகள் பலவற்றிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்புற வாழ்ந்திட ஞான வழி காண்பித்து வருகிறார்கள்.

சுமார்16 வருடங்களாக தான் பெற்ற அந்த பேரின்பத்தை உலகம் பூராகவும் வழங்கிட இனம், மதம், மொழி வேறுபாடின்றி யார் மூலமாவது கேள்வியுற்று தம்மை நாடிவரும் அடியவர்களுக்கு அடியவராக வீற்றிருந்து அவரவர் மன நிலைக்குத்தக அவரவர் சுவைக்குத்தக எதனைக் கண்டால் பற்றிப் பிடிப்பார்களோ அந்த தன்மையில் அவர்களுக்கு உபதேசித்து ஜெப  தியானத்தில் ஈடுபடுத்தி நல் வாழ்க்கை வாழ்வதற்கு வழி காண்பித்து வருகிறார்.

அதன் அடிப்படையில் உலகத்தில் சிறந்த மந்திரமாக போற்றப்படுகின்ற, அனைத்து ஞானிகளும் யோகிகளும் போற்றி துதித்து சித்தியடைந்த மகா மந்திரமான காயத்திரி மந்திரத்தினை அதன் சாபம் நீக்கி அருட் சக்தியினை பாய்ச்சி பாராயணம் செய்ய வைத்து தியானத்தில் அமர்த்தி அவர்களது மனதினை அமைதியுறச் செய்வதன் விளைவாக மனம் ஒரு நிலைப்படுகிறது அதாவது ஐம் புலன்களின் மூலம் சிதறிய மனமானது குவிந்து விடும் போது அந்த குவிவு நிலையில் அவர்கள் கவனம் தன் மனதை நோக்கியதாக அமையும்.

அதாவது மனதை கவனிக்கும் நிலை ஏற்படும்; அந்த கவனிப்பானது நாளடைவில் சிறந்த பல நன்மைகளையும் ஆன்ம விசாரத்தினையும் நல்கும் இவ்வாறு ஆன்ம விசாரம் அதாவது தன்னைப்பற்றிய விசாரணைகளை அவர்கள் ஆரம்பிக்கும் போது தமது நிறை குறைகளை சுயமாகவே கணிப்பிடும் ஆற்றல் பெருகும் அதுவே தமது குறைபாடுகளை தானாகவே நிவர்த்திக்கும் தீர்வுகளை பிரபஞ்சத்தில் இருந்து ஈர்த்து வழங்கி விடும்.

இனி என்ன! தன் சார்ந்த சிக்கல்கள் நிறைவிற்கு வரும் போது அடுத்த கட்டமான தேடலும் தொடர ஆரம்பிக்கும் அது தன் ஆன்மா சார்ந்ததாகவும் அதன் இயக்கம் பற்றியுமான தேடலாக உயர்வடையும் இவ்வாறு படிப்படியாக மனிதர்கள் தாம் யார்? எதற்காக பிறந்துள்ளோம்? இவ்வுலகில் என்ன செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது எனும் பேரறிவு பிறக்கும் இதனையே ஆறாவது அறிவு என்பார்கள் இவ்வாறான நிலையினை அனைத்துலக மக்களையும் அடையச் செய்திடவே சுவாமிகள் தகுந்த வழியினை காண்பித்து வருகிறார் அவற்றில் மிக முக்கியமான சில பொதுவான வழிமுறைகளை கீழே தருகிறோம்.

1. தினமும் அதிகாலை 4:00 மணிக்கு நித்திரை விட்டு எழ வேண்டும்

2. காலைக் கடமைகளை முடித்து விட்டு சுவாமி அறையில் நல் மணம் கமழும் பத்திகளை வைத்து விட வேண்டும்.

3. தரையில் ஒரு துணியினையோ அல்லது பாயினையோ விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ள வேண்டும் (வெறும் தரையில் அமர்வதை தவிர்த்தல் வேண்டும்)

4. அமர்ந்த பின்னர் முதலில் இவ்வுலகிற்கு உங்களை கொண்டுவந்த தாய் தந்தையருக்கு வணக்கத்தை தெரிவித்து பின்னர் உங்கள் மனதிற்கு பிடித்தமான தெய்வத்தையோ அல்லது வழிகாட்டும் குருவினையோ நினைத்து காயத்திரி மந்திரத்தினை குருவின் வழி காட்டலின் பிரகாரம் 9 முறையோ அல்லது 21 முறையோ பாராயணம் செய்யுங்கள்.

5. மந்திர பாராயணம் முடிந்த பின்னர் குறைந்தது 10-15 நிமிடங்கள் மனம் எங்கு செல்கிறது என்று ஒரு பார்வையாளராக இருந்து கவனியுங்கள் அவ்வாறு கவனிக்க இயலாவிட்டால் உங்கள் சுவாசம் வெளியில் போவதனையும் உள்ளே வருவதனையும் கவனியுங்கள்.

6. அவ்வாறு கவனித்து வரும் போது மன ஓட்டம் மெல்ல மெல்ல குறைவடைந்து வருவதனை உங்களால் உணர முடியும்.

7. அதே போன்று மாலை வேளையிலும் குறிப்பிட்ட நேரம் ஒன்றினை ஒதுக்கி மேலே கூறப்பட்டது போன்று பிரார்த்தனையினையும் தியானத்தினையும் கடைப்பிடியுங்கள்.

8. எந்த சந்தர்ப்பத்திலும் குருவின் வழிகாட்டல் அற்ற எந்த வழிமுறைகளையும் முயற்சித்து பார்க்க முனையாதீர்கள்.

9. அன்றாட வாழ்வில் கடமை, கண்ணியம்,  சுய கட்டுப்பாடு போன்ற நல் விடயங்களை கடைப்பிடிக்க முயலுங்கள்.

10. வாழ்க்கை இனிமையானதாக மாறிவிட்டதை நீங்களே உணர்வீர்கள்.

இவற்றை எம்மால் கூறத்தான் இயலும் கடைப்பிடிப்பது அவரவர் பொறுப்பும் விருப்பும் உதாரணத்திற்கு ஓட்டப்பந்தயம் ஒன்றிலே உங்கள் உறவினரோ அல்லது குழந்தையோ பங்கு பற்றுகிறது என்றால் நீங்கள் மைதானத்திற்கு வெளியே நின்று அவர்களது பெயர்களை கூறி கரகோசம் செய்து ஆரவாரித்து உற்சாகம் வழங்கலாமே தவிர நீங்கள் அவர்களுக்கு பதிலாக ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள முடியாதல்லவா!

அதே போன்ற நிகழ்வுதான் தியானம் என்பதுவும் தியானத்தினை வாழ்வில் ஒரு அங்கமாக்கிக் கொண்டு அதிலே முன்னேற்ற பாதைக்கும் வெற்றி நிலையை அடைவதற்குமாக ஞான குருவினது அருள் உபதேசங்களை இலக்கினை அடைவதற்கு உற்சாகம் நல்கும் விடயமாக எடுத்துக் கொண்டு பல வழிகளில் அலை பாய்ந்து கொண்டிருக்கும் மனதினை ஒரே நேர் கோட்டில் பயணிக்க செய்திடுவோமாக.

“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -