Home Spiritual "தியானத்தின் மூலம்"- ஆன்மீக தொகுப்பு!!

“தியானத்தின் மூலம்”- ஆன்மீக தொகுப்பு!!

ஆன்மீகத்தை நேசிக்கும் ஆன்மீக வழியில் பயணிக்கும் அல்லது பயணித்திட திடம் பூண்டிருக்கும் பலருக்கும் “தியானத்தின் மூலம்” எனப்படும் தலைப்பிலே ஆன்மீகக் குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளின் ஞான வழி காண்பிக்கும் ஆன்மீக உபதேசத்தினை தொகுத்து வழங்கவிருக்கிறோம்.

இத் தொகுப்பினை அமைதியாக மன ஒருமைப்பாட்டோடு படித்து தெளிவடைந்து பின்பற்றுவதோடு ஏனையவர்களும் பயனடையும் விதத்தில் பகிர்ந்திடுங்கள்.

இவ்வுலகில் எந்தப் பொருளையோ அல்லது விடயத்தினையோ எடுத்துக் கொண்டாலும் அவற்றில் மிக முக்கியமாக மூலப்பகுதி அல்லது மையப் பகுதி அமைந்திருக்கும் அல்லது பொருத்தப் பட்டிருக்கும் அதனை கருப் பொருள் என்பார்கள் அல்லது கரு மையம் என்பார்கள் இவ்வாறான சொற்கள் அன்றாடம் மக்கள் சாதாரணமாக பயன்படுத்தும் சொற்களாக தென்பட்டாலும் அந்த சொல்லும் அது சுட்டி நிற்கும் கருத்தும் மிக மிக முக்கியமானது என்பதனை பலரும் ஆராய்ந்து அறிய முற்படவில்லை.

ஆனால் உலகின் இயக்கத்தின் கருப் பொருளினை ஆழ்ந்து நோக்கி நோக்கி அந்த நுணுக்கரிய நுண் உணர்வினை தமக்குள்ளேயே கண்டுணர்ந்து பரிபூரணத்துவம் பெற்று அதனை உலக மக்களும் அனுபவித்து தாம் பெற்ற இன்பத்தினை அந்த அனுபூதியினை காண்பித்திட அதனை அடையச் செய்திட காலத்திற்கு காலம் பல மகான்கள், சித்தர்கள், யோகிகள் என இவ்வுலகில் பலர் வாழ்ந்து காட்டி போதித்து சென்றார்கள்.

ஆனால் கலியினை அதிகமாக பற்றிக் கொண்ட மானிடர்களுக்கு ஞானிகள் காண்பித்து சென்ற நல் வழியினை கடைப்பிடித்து ஒழுகிட மனம் இடங் கொடுக்கவில்லை; இருந்தும் அப்படி கலி பீடித்த மனித மனங்களை ஆன்ம வழியில் திருப்பி அதன் உண்மை நிலையினை அவர்கள் உணர்த்திட செய்திட “தியானம்” என்ற ஒரு விடயத்தினை கடைப்பிடிக்குமாறு கூறுகிறார் சுவாமிகள்.

அலைபாயும் மனதினை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்திட தியானமே மூலமாக விளங்குகிறது

உதாரணத்திற்கு வேறொரு இடத்தில் பிறந்து வளர்ந்த மாடு ஒன்றினை கொள்வனவு செய்து புதிய இடமொன்றிற்கு கொண்டு வந்து அதனை கணுவொன்றிலே கட்டி வைத்து அந்த இடத்திற்கு ஏற்றவாறு பழக்கி பழக்கி வந்தால் கணுவுக்கும் கயிறுக்குமான இடைவெளியில் அந்த மாடானாது வேறு யாருடைய எல்லைக்குள்ளும் செல்லாமல் தன் எல்லைக்குள்ளேயே தன் செயற்பாட்டை செய்து கொண்டிருக்கும்.

அவ்வாறு மீறி செல்ல நினைத்தாலும் அடிக்கடி கணுவில் கட்டியுள்ள கயிறானது இழுத்து பிடித்து விடும் அப்போது அந்த கணுவினை அந்த மாடானது எண்ணிப் பார்க்கும் அந்த மாடானது முன்னர் வேறு சூழல் தன்மைகளுக்கு பழக்கப்பட்டிருந்தாலும் அடிக்கடி கணுவிலே கட்டப்பட்டு தற்போது வாழவேண்டிய சூழல் தன்மைகளுக்கு பழக்கப்பட்டவுடன் அது கணுவோடு  பிணைக்கப்பட்டிருந்த கயிற்றினை அவிழ்த்து விட்டாலும் அந்த மாடானது எல்லையினை மீறி செல்லாது அந்த கணுவினை சுற்றியே அதன் நடமாட்டம் இருக்கும் ஏனெனில் அதற்கு அந்த இடமே பாதுகாப்பு என்பதனை அது உணர்ந்து விடுகிறது.

உதாரணத்திற்கு தொழில் நிமித்தமாக குறித்த அலுவலகத்திற்கோ வேலைத் தளத்திற்கோ நாம் சென்றாலும் வேலை நிறைவடைந்ததும் மீண்டும் வீட்டுக்கு வருவதனைப் போல ஒரு நிகழ்வாக அமையும்; உலகில் எந்த கடமைகளை ஆற்றினாலும் அவை நம் இயல்பு வாழ்வினை பாதிக்காமல் இருப்பதற்கு தியானம் இன்றியமையாததாகிறது.

அது போலதான் பஞ்சேந்திரியங்களால் இயங்கும் மனித மனதினை ஞானேந்திரியங்களாக மாற்றுவதற்கு கணுவிலே கட்டப்பட்ட மாடு போல மையப்பகுதியான ஆன்மாவுடன்  மனதை இணைத்து விட்டால் மனமானது புலன் வழியில் செல்லாது ஆன்ம நிலையில் வீற்றிருந்து ஞான வழியில் தன்னை பயணப்படுத்திக் கொள்ளும் இவ்வாறு மன ஒருமைப்பாட்டுடன் ஆன்மாவினை நோக்கி மனதினை செலுத்திட மந்திர ஜெபங்கள், இறை தியான வழிபாடுகள், குரு வழிகாட்டல்கள் அவசியமாகிறது.

ஆனால் மனிதர்கள் தியானத்தின் தார்ப்பரியத்தினையும் அதன் காத்திர தன்மையினையும் உணராதவர்களாய் வாழ்வதால் அவர்களால் அவர்களின் சுயத்தினை உணர முடியாமல் போகிறது; குருவின் உபதேசங்கள் எப்படி ஒருவரை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்பதனை விளக்க ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் சீடர்களுக்கு அருளிய சிறு விடயத்தினை மேலும் தருகிறோம்.

அதாவது ஒரு ஞான குருவின் உபதேசம் அவர் வழிகாட்டல்கள் அவர் ஈடுபடுத்தும் பூஜைகள், இறை பிரார்த்தனைகள், வழிபாடுகள் என்பன மாடு ஒன்றினை மலை மேல் அமைந்துள்ள பெரும் புற் தரையை நோக்கி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்காக அந்த மாடு மேய்ப்பவரினால் அந்த மாட்டினை உற்சாகத்தோடு மலையின் உச்சிக்கு அழைத்து செல்வதற்காக அடிக்கடி அதன் கண்களுக்கு காண்பிக்கப்படும் புற்கட்டு போன்றது என்கிறார்.

அதாவது மனிதர்களது ஐந்து புலன்களையும் அந்த மாட்டுக்கு ஒப்பிட்டு ஆறாவது அறிவாக மலை உச்சியில் அமைந்திருக்கும் பரந்த புற் தரைக்கு ஒப்பிட்டும் அந்த ஆறாவது அறிவினை எட்ட புற் கட்டினை காண்பித்து காண்பித்து அழைத்து செல்பவரை வழிகாட்டியாக அதாவது ஞான குருவிற்கு ஒப்பிட்டும் அந்த கதை மூலம் பெரும் விடயத்தினை உணர்த்துகிறார் பஹவான்.

அதே போன்று ஒரு கையினால் உன் குருவினை பிடித்துக் கொண்டு மறு கையினால் உன் கடமையினை ஆற்று கடமை முடிந்ததும் இரு கரங்களினாலும் இறைவனை வழிபடு என்கிறார் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

ஆக பூஜைகள், இறைவழிபாடுகள், தியான ஜெபங்கள் அனைத்தும் மிக மிக அவசியமானவையே ஆனால் அடையப் போகும் இடமோ உருவமற்ற அருவ நிலையினைத்தான் அதுவே பூரணத்துவம் அடைந்த ஞானிகள் இறைவனை அருவமாக காண்கிறார்கள் இருந்தும் தம் உருவத்தினூடுதான் அதனை கண்டுணர்கிறார்கள் உருவமற்ற இறைவனை தரிசிக்க உருவ வழிபாடு இன்றியமையாதது என்கிறார்கள் உண்மை ஞானிகள்.

“சிக்கிமுக்கி கல் கற்ப கோடி காலம் தண்ணீருக்குள் கிடந்தாலும் வெளியில் அதனை எடுத்து இரும்பினால் தட்டும் போது அதன் அசல் தன்மை மாறாமல் உடனே தீப்பொறி எழும்பும்” என்கிறார் பகவான் அதாவது சிக்கிமுக்கி எனும் கல் இரும்பால் தட்டினால் தீப்பற்றக்கூடிய தன்மையினை உடையதாகிறது அது பல கோடிக்கணக்கான வருடங்கள் நீருக்கு அடியில் கிடந்தாலும் அதன் அசல் தன்மையான தீப்பற்றும் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும் ஆனால் அது வாழ்ந்த இடம் நீர் ஆனால் நீரின் தன்மை அதனை எவ்விதத்திலும் பாதித்திடவில்லை.

அது போலதான் ஆன்மாவானது மனித சரீரத்தினுள் வாழ்ந்தாலும் தகுந்த குருவின் ஞான உபதேசங்கள் கிடைக்கப் பெற்றதும் ஆன்மாவானது தன் அசல் தன்மையினை தான் எடுத்த உடலினை அடிப்படையாக கொண்டு ஆன்மாவில் நிலை பெற்று விடும் இதனையே ஆன்ம விழிப்பு என்கிறார்கள்.

மனிதர்கள் தங்கள் அசல் தன்மையினை மறந்து போலியான வாழ்க்கை வாழும் போது தியானத்தின் தன்மையினை எடுத்துரைத்து அவர்கள் தத்தமது அசல் தன்மையான ஆன்ம சொரூபத்தில் திளைத்திட செய்திட இவ்வாறு மகான்கள் ஞான உபதேங்களை நல்குகிறார்கள் தியானத்தின் மகத்துவத்தினை கூறுகிறார்கள்.

செல்வந்தர் ஒருவருக்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் சொத்துக்கள் கார்கள் பங்களாக்கள் உள்ளது போல தியானத்தின் மூலம் மனதை ஒரு நிலைப்படுத்தும் போது படைப்பாளியான இறைவனின் தொடர்பு கிட்டுகிறது அப்போது மேலே உதாரணமாக கூறப்பட்ட செல்வந்தர் கால நிலைக்கேற்றவாறு சில காலம் ஒரு பிரதேசத்திலும் வேறொரு கால நிலையில் வேறொரு பிரதேசத்திலும் தனது பங்களாவில் சென்று கால நிலை மாற்றமோ பொருளாதார மாற்றமோ அவர்களை தாக்கிடாதவாறு தாம் சேமித்து வைத்தவற்றை அனுபவித்து வாழ்வதனைப்போல இறை நிலையில் ஒரு மனிதன் தான் நினைத்த வாழ்க்கையினை நல்லது கெட்டது பிரித்தறிந்து வாழலாம் என்பது திண்ணம்.

பல யாத்திரைகள், பூசை வழிபாடுகள் என அனைத்தும் ஆன்மீகத்தின் ஆரம்ப படிகளே அவற்றினால் தற்காலிக தீர்வுகளே கிடைக்கப்பெறும் ஏனெனில் எத்தனை யாத்திரைகள் மேற் கொண்டாலும் பல பூசைகளை செய்தாலும் சில நாட்களுக்கே அவற்றின் மூலம் கிட்டும் சக்தி மனிதர்களை பாதுகாக்கும் ஏனெனில் ஒரு வாரம் யாத்திரை சென்று வந்து விட்டு பின்னர் தம் இயல்பு வாழ்வில் மாற்றத்தினை கொண்டுவர அவர்களால் இயல்வதில்லை மீண்டும் அதே கோபம், பொறாமை, வஞ்சக எண்ணங்களே அவர்களுக்குள் பரிணமிக்க ஆரம்பிக்கும் அதற்காகவே ஒரு ஞான குருவின் வழிகாட்டுதலின் கீழ் தியான ஜெபங்களில் ஈடுபடும் போது மனதில் பதிந்துள்ள பூர்வ ஜென்ம கருமாக்களின் வாசனைகள் அகன்று விடும்.

பெருங்காயம் ஒன்றினை ஒரு பாத்திரத்தில் இட்டு மூடி வைத்திருந்து விட்டு பின்னர் பெருங்காயத்தினை மாத்திரம் வெளியே எடுத்து வீசி விட்டாலும் அதன் வாசனை அந்தப் பாத்திரத்தினை விட்டு அகலாது பல நாட்கள் நீடித்து இருக்கும் அது போலதான் பல பிறவிகள் மனிதர்கள் பிறந்துள்ளார்கள் பெருங்காயத்தினை வெளியில் வீசி விடுவதனைப்போல வெவ்வேறு பல உடல்களை எடுத்து வந்தாலும் மனதில் பதிந்துள்ள வாசனையானது மாறாமல் அப்படியே உள்ள காரணத்தினால் மனிதர்களை பூர்வ ஜென்ம வினைகள் பற்றிக் கொண்டு தொடர்கின்றன.

இது ஒரு சூட்சும நிகழ்வு சூட்சுமத்தினை சூட்சுமத்தினால்தான் உணர இயலும் முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்பதனைப்போல உடலில் பதிந்துள்ள அழுக்குகளை நீக்கிட சவர்க்காரம் பயன்படுத்தி சுத்தம் செய்வதனைப் போல மனதில்  படிந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்திட ஞான குருவினது வழிகாட்டல்களும், மகா மந்திர ஜெபமும், தியானமும் மனிதர்களுக்கு மிக மிக அவசியமாகிறது.

“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”

இத்தொகுப்பின் இரண்டாவது பகுதியின் இணைப்பு கீழே…

“வார்த்தைகளின் சக்தி”- ஆன்மீக அருள் உபதேச தொகுப்பு..

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -