Home Spiritual "வார்த்தைகளின் சக்தி"- ஆன்மீக அருள் உபதேச தொகுப்பு!!

“வார்த்தைகளின் சக்தி”- ஆன்மீக அருள் உபதேச தொகுப்பு!!

நம் ஒவ்வொரு செயலுக்கும் அல்லது வார்த்தைகளுக்கும் பெரும் சக்தி உள்ளது அதனால்தான் நல்லனவற்றை எண்ணுங்கள், நல்லனவற்றை பேசுங்கள், நல்லனவற்றை காணுங்கள் என நல்லனவற்றையே ஞானிகள் போதிக்கிறார்கள்.

இதற்கு உதாரணமாக….  இந்த உபதேசத் தொகுப்பு எவ்வாறு ஒருவரது மனதில் மாற்றத்தினை கொண்டு வரும் என்று நீங்கள் கேட்கலாம் அதற்கு கீழே சிறு உதாரணம் ஒன்றை தருகிறோம்….

ஞானி ஒருவரிடம் அவருடைய சீடர் ஒருவர் கேட்டார் நீங்கள் போதிக்கும் விடயங்கள் எவ்வாறு அருட் சக்தியாக மாறி எவ்வாறு எனக்கு கிடைக்கும் என்று வினவினார் அமைதியாக இருந்த ஞானியானவர் சற்று நேரத்தின் பின்னர் கேள்வியினை தொடுத்த சீடனை நோக்கி மிகக் கடும் சொற்களால் வசைபாடினார் உடனே கோபம் கொண்ட சீடன் தடியொன்றை எடுத்து அவரை அடிப்பதற்கு ஓங்கினான்.

உடனே புன்முறுவலித்துக் கொண்டு அந்த சீடனை நோக்கி இப்போது நான் வசைபாடும் போது நீ தன்னிலை மறந்து கோபம் தலைக்கேறி என்னை அடிக்க தடியினை ஓங்கிக் கொண்டு வந்தாயோ அதே போன்றுதான் என்னால் போதிக்கப்படும் அருள் உபதேசங்களின் அதிர்வலைகள் உன் மனதினை தாக்கி உனது மாயை அகன்று தன்னிலை மறந்து பரவச நிலையடைவாய் அப்போது நீ யார்? என்பதனை உணர்ந்து கொள்வாய் என்றார்.

இதே போன்றுதான் மனிதர்களின் ஐம்புலன்கள் மூலமாக அவர்கள் பார்க்கும், கேட்கும், நுகரும், உணரும், சுவைக்கும் அனைத்து விடயங்களின் போதும் அவர்கள் மனம் அவற்றினை பார்க்கிறது, கேட்கிறது, நுகர்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது என மனதின் செயல்கள் ஐம்புலன்களின் மூலமாக இடம் பெறுகிறது.

இவ் உதாரணம் மூலம் நாம் புரிந்து கொள்வது என்ன? நாம் பிரயோகிக்கும் வார்த்தைகளின் சக்தியானது பல அதிர்வலைகளை ஏற்படுத்தவல்லது அதன்காரணமாகத்தான் சக்திவாய்ந்த சொற்களை இணைத்து அதனை மந்திரமாக்கி கலியில் சிக்கி மனம் மந்தம் அடைந்து தத்தளிக்கும் மானிடர்களின் மனதினை திறம் ஆக்கவென மகா மந்திரங்களை குரு வழியில் வாழையடி வாழையாக ஞானிகள் போதித்து வந்துள்ளார்கள்.

அதனை அடியொற்றியே காயத்திரி மகா மந்திரமானது உலகிலே ஞானிகளால் வழங்கப்பட்ட மந்திரங்களில் அதி உயர்ந்த நல்ல அதிர்வலைகளை வழங்கக்கூடியது என்று கூறப்பட்டு அது மகா மந்திரமாக போற்றப்படுகிறது அவ்வாறான மந்திரத்தினை பெறுவதற்காக விசுவாமித்திர மகரிஷி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கடும் தவமியற்றி இம் மகா மந்திரத்திரனை விண்ணிலிருந்து தம் தவ வலிமையினால் ஈர்த்து பெற்றெடுத்தார்.

அப்பேற் பட்ட மகா மந்திரத்தினை தீய எண்ணம் படைத்தவர்கள் தீய செயல்களை செய்பவர்களுக்கு கிடைத்திடாமல் அதனை மறைத்து வைத்து குரு வழியிலே போதித்து வந்தார்கள் மகரிஷிகள்.

அப்பேற்பட்ட மகா மந்திரத்தினை இவ்வுலகத்தினை கலியிலிருந்து மீட்டு சத்திய யுகத்திற்குள் மனிதர்களை அழைத்துச் செல்வதற்காக பகவானே மானிட ரூபம் தாங்கி காயத்திரி சித்தராக அவதரித்து இலங்கை புண்ணிய பூமியிலே தன் மாணவரான மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளுக்கு அதனை போதித்து தான் ஆற்ற வந்த அரிய பணியினை அவரிடம் கையளித்து அவருடனேயே சூட்சுமமாக வீற்றிருந்து இந்த தெய்வீக ஞானப்பணியினை ஆற்றி வருகிறார்கள்.

உருவ வழிபாடு ஏன் அவசியம்…

ஞானி ஒருவர் ஆன்மீக போதனைகளை நிகழ்த்தும் போது ஆன்மீகத்தில் உருவ வழிபாடு மிக மிக அவசியம் என்றார் அதன் பின்னர் எதிரே உள்ளவர்களை நோக்கி நீங்கள் ஏதாவது சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் கேழுங்கள் என்றார்.

அப்போது எதிரே அமர்ந்திருந்த ஒருவர் இறைவன் உருவமற்றவர்தானே அவர் எல்லையற்றவர்தானே அவரை எவ்வாறு உருவத்தில் வழிபடுவது சிறந்தது என்கிறீர்கள் என்று வினவினார் அந்த ஞானியோ சலனமற்றவராய் அந்த பக்தரைப் நோக்கி எனக்கு குடிப்பதற்கு சிறிது நீர் கொண்டு வாருங்கள் என்றார் உடனே பக்தரும் விரைந்து சென்று ஒரு குவளையில் நீரினை முகிழ்ந்து வந்து ஞானியின் முன் வைத்தார்.

உடனே ஞானி அந்த பக்தரை நோக்கி ” நான் நீர் மாத்திரம்தானே தங்களிடம் கேட்டேன் அதற்கு எதற்காக குவளையினையும் உடன் கொண்டு வந்தீர்கள்” என்றார் எதிர்பாராத ஞானியின் இக் கேள்வியினால் நிலை குலைந்து போன பக்தர் சுவாமி நீர் அருந்த குவளை முக்கியம்தானே அதை விடுத்து நீரை மாத்திரம் எவ்வாறு கொண்டு வருவது? என வினாவினார்.

உடனே ஞானி கேட்கிறார் அவ்வாறெனில் உருவமற்ற இறைவனை உருவமில்லாமல் எவ்வாறு காண்பது? என்கிறார் விடையறியாமல் முழி பிதுங்கி நின்றார் பக்தர் அப்போதுதான் ஞானி கூறுகிறார் ” நீ அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கிறாய் அதனால் நான் கூறும் எதனையும் ஏற்கும் நிலையில் நீ இல்லை அதனால்தான் இதனை செயல் முறையில் உமக்கு உணர்த்தினேன் இப்போது உனது கேள்விக்கான பதில் உன் மூலமாகவே உனக்கு வெளிப்பட்டு விட்டதல்லவா இதே போல்தான் உன் அனைத்து வினாக்களுக்குமான விடைகள் உனது உள்ளத்திலேயே பொதிந்து கிடக்கின்றன அதனை தூண்டி மேலே கொணர்வதற்கு எம்மை போன்ற குரு ஒருவரின் உதவி மனிதர்களுக்கு தேவைப்படுகிறது” என்று திருவாய் மலர்ந்தார்.

ஆக எந்த ஒரு மனிதனும் தன் வாழ்கையினை எந்தவொரு தடையுமில்லாமல் நேர் வழியில் பயணிக்க செய்திட முதலில் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க பழக வேண்டும் பின்னர் நிமிர்ந்திருந்து கண்களை மெதுவாக மூடி தன் மன ஓட்டத்தினை கவனிக்க வேண்டும் சரி அதுவும் கடினமெனில் உள்ளே இழுக்கும் சுவாசத்தினையும் வெளியே விடும் சுவாசத்தினையும் கவனிக்க வேண்டும் இது மிக மிக எளிய முறையிலான தியானம் ஆகும்.

மனதை கவனிக்கும் போது மனதில் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும் அதனையே பாவம் என்கிறார்கள் அந்த எண்ண ஓட்டம் கண்களை மூடி அடிக்கடி கவனிக்கும் போது எங்கோ ஓரிடத்தில் நின்று மனம் அமைதியடைந்து ஒரே புள்ளியில் குவிந்து விடும் அப்போது நீங்கள் நினைத்தவற்றை எந்த தடைகளுமில்லாமல் அடையும் நிலையினை எய்துவீர்கள் இது சாஸ்வதமான உண்மை.

தியானம் செய்ய ஆரம்பிக்கும் போது முதலாவதாக ஸ்தூல சரீரத்தில் இருக்கும் அனைத்து வியாதிகளும் சுத்திகரிக்கப்படும் பின்னர் கண்ணுக்கு தெரியும் இவ் உடலுக்குள் கண்ணுக்கு தெரியாத சூட்சும சரீரமான ஆன்ம சரீரம் முழுமை பெறும்; ஸ்தூலத்தில் நிகழும் மாற்றங்கள் சூட்சுமத்திலும் சூட்சுமத்தில் நிகழும் மாற்றங்கள் ஸ்தூலத்திலும் தாக்கம் செலுத்தும் மனதில் எது நிகழ்ந்தாலும் உடலுக்கு பாதிக்கும் உடலுக்கு எது நேர்ந்தாலும் மனதிற்கு பாதிக்கும் ஏனெனில் இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன.

இவ்வாறு சூட்சும சரீரம் சுத்திகரிக்கப்பட்டதும் உடலிலுள்ள ஏழு ஆதாரங்களும் அதாவது சக்தி பீடங்கள் அல்லது சக்கரங்கள் ஒவ்வொன்றாக சுத்திகரிக்கப்பட்டு அவை உடலில் செயற்பட ஆரம்பிக்கும் அவ்வாறு ஏழு ஆதாரங்களும் விழிப்படையும் போது சூட்சும சஞ்சாரங்கள் சூட்சுமப் பொருட்கள் சூட்சும உலகு பற்றிய பிரபஞ்ச அறிவு பிறக்கும் உதாரணத்திற்கு எது சம்மந்தமாக நாம் தேடுகிறோமோ அல்லது எதனை சார்ந்து வாழ்கிறோமோ அந்த நபர்களையோ அல்லது அந்த தொழில் பற்றியேதான் நமது வாழ்வும் சுழன்று கொண்டிருக்கும் அந்த தன்மையிலேயே நமது வாழ்வும் நகரும்.

அது போன்றுதான் ஆன்மீகத்தின் பால் நாட்டம் கொண்டு அதிலே மனதை செலுத்தும் போது தியானத்தில் அமரும் போது இறை சாம்ராஜ்யத்திற்குள் நாம் புகுந்து விடுவோம் அதன் பின்னர் சாம்ராஜ்ஜியத்தினுள்தான் நமது வாழ்வும் சுழலும் அதனால் இறை பற்றிய உண்மையும் நமக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பிக்கும்.

இவ்வாறு ஆன்மாவினை நினைத்து வாழும் வாழ்க்கையே ஆன்மீக வாழ்க்கை எனப்படுகிறது; ஒரு கட்டிடத்திற்கு அத்திவாரம் உறுதியாக இருந்தால்தான் அந்த கட்டிடம் பல காலங்களுக்கு நிலையாக உறுதியுடன் நிலைத்திருக்கும் அதே போன்று மனித சரீரமான கட்டிடம் நிலைத்திருக்க அத்திவாரமான ஆன்மாவினை பலமாக்குவதே தியானத்தின் மூலம் எனப்படுகிறது.

அதற்காகவே எந்த விதமான கட்டணங்களுமின்றி இலவசமாக இலங்கையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்து உலகிற்கு மிக மிக அவசியமான ஞானப் பொக்கிஷத்தினை தன்னை நாடி வருவோருக்கு மாத்திரமல்லாது நாடிவராது அல்லது வரமுடியாத மக்களுக்கும் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் வாரி வாரி வழங்கி கொண்டிருக்கிறார் உலகின் ஆன்மீகக்குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் என்றால் மிகையாகாது.

“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”

இத்தொகுப்பின் முதலாவது பகுதியின் இணைப்பு கீழே…

“தியானத்தின் மூலம்”- ஆன்மீக தொகுப்பு…

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -