மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் இதுவரை சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றாவிடின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் முகாமைத்துவம் வழங்கியுள்ள தகவல்களுக்கு அமைய சிறிய ஒரு தரப்பினர் மாத்திரமே சுகாதார பிரிவில் ஆஜராகவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த தகவல்களுடன் ஒப்பிடும் போது இன்னும் பலர் வர வேண்டிய உள்ளது. சிலவேளை அவர்கள் கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளில் வாழ்வதால் அவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஆஜராகியுள்ளனர்.
கிட்டத்தட்ட எல்லோரும் இப்போது வந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன் எவ்வாறாயினும் யாராவது தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி செயற்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் அவர்களின் அசையும் அல்லது அசையாத சொத்து முடக்கவும் தனிமைப்படுத்தல் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் கூறினார்.
இதேவேளை குறித்த ஆடைத் தொழிற்சாலையில் இருந்து ஏற்கனவே பல நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பலர் இப்போது தொற்றுக்குள்ளாகி வருவதாக தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதம தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கொவிட் 19 நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் பதிவாகிய நோயாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனனர்.
எனினும் அந்த கொத்தணியில் எவரெனும் இதுவரை பரிசோதனைக்கு உட்படாதவர்கள் சமூகத்தில் இருக்க முடியும் அதாவது பஸ்ஸிலும் ரயிலிலும் அலுவலகத்திலும் வீதிகளிலும் அல்லது எங்காவது அத்தகைய நோயாளியைக் அடையாளம் காண முடியும்.
இதனால் வேறு யாருக்காவது தொற்று ஏற்படலாம் எனவே அதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் அதாவது சமூகமயமாக்கப்பட்டதால் நிலைமை பாரதூரமாகும் என்றார்.