ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செய்திக் குறிப்பில், ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் – தலிபான்களுக்கும் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் உரிய தீர்வு எட்டப்படாத நிலையில் பயங்கரவாதிகள் தொடர்ந்தும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்றையதினம் காலையில் ஆப்கானிஸ்தானின் ஹெராத் – கந்தஹார் இடையேயான நெடுஞ்சாலையோரமும், ஹெல்மாண்ட் மாகாண கெரெஷ்க் மாவட்டத்தின் சாலையோரமும் அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல்களுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்க முன்வரவில்லை என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.