Home Spiritual "உன்னை உனக்குள் தேடு"- மகா யோகியின் ஞான உபதேசத் தொகுப்பு!

“உன்னை உனக்குள் தேடு”- மகா யோகியின் ஞான உபதேசத் தொகுப்பு!

பிரபஞ்சம் எப்போது சிருஷ்டிக்கப் பட்டதோ அன்றிலிருந்து இன்று வரையிலும் அதனைப் படைத்தவர் யார்? எனும் வினா அனைவர் மத்தியிலும் எழுப்பப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது ஆனாலும் ஒரு சிலரே அதற்கான விடையினை தமக்குள்ளேயே தேடி கண்டுணர்ந்து அதனை தம்மை சூழவுள்ள மக்களுக்கும் எடுத்துரைத்து வழிகாண்பித்தார்கள் அதனை சிலர் ஏற்றுக் கொண்டார்கள் சிலர் அவற்றை ஏற்க மறுத்தார்கள்.

ஆனாலும்  படைப்பின் இரகசியம் உணர்ந்தவர்கள் ஞானிகளாக, யோகிகளாக, சித்தபுருஷர்களாக இவ்வுலகில் நிலையாக வீற்றிருந்து மனிதர்களின் அறியாமை போக்கிட காலத்துக்கு காலம் இறை தூதர்களாக வந்து போதித்தார்கள் சில சந்தர்ப்பங்களில் பிரபஞ்சத்தினை சிருஷ்டி செய்த அந்த ஆதி சக்தியான மூல சக்தியே மனித சரீரம் எடுத்து இவ்வுலகில் அவதரித்து உலகில் சத்தியம் நிலைத்திட தர்மம் ஓங்கிட ஆன்மீக வாழ்வினையும் அதனை சரிவர கடைப்பிடித்து வாழ்ந்திட ஆன்ம போதனைகளையும் மக்களுக்கு வழங்கினார்கள் என்பது வரலாற்று உண்மை.DSC 0572 1 scaled

அதே போன்றுதான் சத்திய யுகமாக இருந்த உலகமானது தற்போது உலக மக்கள் தம்மை படைத்த இறைவனை மறந்து படைக்கப்பட்ட பொருட்களின் மீது அளவுக்கதிமான மோகத்தினையும், பற்றினையும், ஆசையினையும் அதிகரித்துக் கொண்டமையினால் சத்திய தர்மம் குன்றி கலியுகமாக மாற்றம் பெற்றுள்ளது அதன் விளைவாக கலியின் தன்மையான கோபம், குரோதம், பொறாமை, சூது, கொலை, கொள்ளை, அகால மரணங்கள், விபத்துகள், நோய்கள், பசி, பஞ்சம், பட்டினி போன்றவை மனிதர்களுக்கு மாத்திரமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் தீங்கு விளைவிக்ககூடியதாக மேலோங்கி நிற்கிறது.

ஆகவே இப்படி பல துன்பங்கள் சூழ்ந்த கலியில் இருந்து எவ்வாறு மனிதர்கள் தம்மை மீட்டு சத்திய யுகத்தில் காலடியெடுத்து வைத்து வாழ்வாங்கு வாழலாம் என்பதனை ஆதாரபூர்வமாக அணு அணுவாக ஞானத்தை ஞானத்தால் பகுத்துணர்ந்து அவ் வாழ்வினை வாழ்ந்து காட்டி போதித்தருளும் மகா யோகி ஆன்மீகக்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகளின் திருவாயால் உலக மக்களுக்காக அருளப்பட்ட உபதேசத்தினை ஜாதி, மத, இன, மொழி பேதங்களை கடந்து “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனும் திருவாக்கினை அடிப்படையாக கொண்டு “உன்னை உனக்குள் தேடு ஒரு தீங்கும் வாராது பாரு அன்பே சிவமென்பார் ஞானி அதில் ஆழ்ந்த பொருளுண்டாம் கேளீர்” என்பதற்கமைவாக அனைவரும் இலகுவாக புரிந்து கொள்ளும் விதத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

மனிதர்களுக்கு இயல்பாகவே எந்த விடயத்தினையும் கவனிக்கும் தன்மை உள்ளது ஆனாலும் அவர்கள் வாழும் சூழல் அதன் தன்மை அவர்களின் கவனிக்கும் தன்மையினை இருட்டடிப்பு செய்து விடுகிறது இதன் காரணமாகத்தான் மனிதர்கள் தாம் செய்யும் செயல்களினால் துன்பப்படுகிறார்கள் சாதாரணமாக எந்த விடயத்தினை எடுத்துக் கொண்டாலும் செயல் மீதான கவனம் சிதறும் சந்தர்ப்பத்தில் அதன் முழுமைத் தன்மை கிடைக்கப் பெறாது என்பது அனைவரும் அறிந்த விடயமே.

இங்கே செயலின் மீதான கவனத்தை சிதறச் செய்யும் அல்லது திசை திருப்பும் காரணிகளை அடையாளம் கண்டு கொள்வதற்கும் அந்த செயலினை முழுமைப் படுத்துவதற்கும் அந்த முழுமை நிலையினை அனுபவித்த அத்துறை சார்ந்து நிபுணத்துவம் பெற்றவரது வழிகாட்டுதல் அல்லது ஒத்தாசை எத் துறை சார்ந்த செயல்களுக்கும் தேவைப்படுகிறது.

உதாரணத்திற்கு ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைவது முதல் கொண்டு குழந்தை பிறந்து பாலூட்டி வளர்த்தெடுத்து அதன் தேவைகளை பூர்த்தி செய்து பின்னர் அக் குழந்தை கல்வி கற்று தேர்ச்சி பெற்று தொழில் புரிந்து உழைத்து வருமானம் பெற்று அதனை செலவு செய்து அதன் பின்னரான அவர்களும் இல்லற வாழ்வினை அனுபவித்து அவர்களுக்கும் குழந்தை பிறந்து அதை வளர்த்தெடுத்து தாம் முதுமை நிலையடைந்து மனித சரீரத்தின் இறுதி வாழ்விற்குள் சென்று மரணம் நிகழும் வரையிலும் இந்த சுழற்சி முறை மனித வாழ்விற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு வழிகாட்டி கண்டிப்பாக இருந்திருப்பார்கள் அவ்வாறு வழிகாட்டியின்றி எந்த ஜீவராசிகளாலும் இந்த பிரபஞ்சத்தில் தம் வாழ்வினை வாழ இயலாது என்பது தீர்க்கமான உண்மை.

எனவே இங்கு ஒரு உண்மை எமக்கு புலப்படுகிறது அதாவது எமது பிறப்பின் நோக்கத்தினை நிறைவேற்ற எமக்குள் இருக்கும் நோக்கு மனமான கவனிப்பு மனதின் செயற்பாட்டினை மேம்படுத்த அல்லது வலுவூட்ட அந்தந்த துறைசார்ந்து சித்தியடைந்தவர்களின் தேவை மனித வாழ்வின் ஒவ்வொரு படிமுறை வளர்ச்சியிலும் தேவைப்படுகிறதல்லவா! அனைத்து செயலுக்கும் வழிகாட்டியோடு பயணிக்கும் மனிதர்கள் தம் ஆன்மா சார்ந்த வாழ்விற்கு மாத்திரம் தகுந்த குருவினை சார்ந்து வாழ முற்படாமையினால் தமது பிறப்பின் முழுமை நிலையினை அவர்களால் எய்த இயலாமல் போகிறது ஏனெனில் நிறைவற்ற மனதோடுதான் அவர்கள் மரணமும் நிகழுகிறது.

எனவே தமது இலக்கினை அறிந்து அதன் நோக்கத்தினை புரிந்து கொண்டு அந்த இலக்கு நோக்கி முன்னேறுவதானது பிறப்பின் பயனை அடைய வைக்கும் மிக உயர்ந்த பாதையாகும் அதனைத்தான் ஆன்மீகம் என்கிறார்கள் ஞானிகள்.

ஆனாலும் தமது முழுமை நிலையினை அடைவதற்கும் அதனை அனுபவிக்கச் செய்வதற்குமான தமது செயலினை கவனிக்கும் மனம் செயலிழந்து காணப்படுவதனால் சலனமான மனதின் சலனமான செயல்கள் மேலோங்கி காணப்படுவதனாலும் மனிதர்கள் தாம் செய்யும் செயல்களில் அதன் முழுமைத் தன்மையினை அடைய இயலாமல் திணறுகிறார்கள்.DSC 0594 scaled

சலன மனத்தினை எப்படி வெல்வது?

கவனிப்பு மனதின் சக்தியினை அதிகரித்துக் கொள்வதற்கு முயற்சிக்கும் போது சலன மனமானது மேலெழுந்து அதற்கு தடையேற்படுத்தி விடுகிறது ஏனெனில் சலனத்தின் சக்தி மனதில் மேலோங்கியிருப்பதால் கவனிப்பு மனம் சக்தியிழந்து விடுகிறது  (அதனை பூர்வ ஜென்ம கருமம் என்றும் அந்த கருமத்தால் விளைந்த எண்ணங்கள் என்றும் வகைப்படுத்தலாம்) மனதில் கருமம் எனும் செயலின் மூலம் விதைக்கப்பட்ட விதைகளே ஈற்றில் விளைச்சலையும் செயலின் பலனான அறுவடையினையும் தருகிறது அது நற் கருமமாக இருந்தால் அதன் விளைச்சல் நற் பயனையும் தீய கருமமாக இருந்தால் அதன் விளைச்சல் தீ வினையாகவும் கிட்டும் என்பது நீதி ஆனாலும் பிறந்த சூழல் அதன் தன்மைகளின் தாக்கத்தினால் நற் செயல்களின் விளைச்சலினை அனுபவிக்க இயலாமல் திண்டாடும் மனிதர்கள் மிக மிக அவசியமான நோக்கு மனத்தின் பலத்தினை அதிகரிக்க செய்திட ஏதுவான ஆன்மீக வாழ்வினை மறந்து விடுகிறார்கள்.

அதனைப்பற்றி உபதேசிக்கும் ஞான குரு ஒருவரது வழி காட்டுதலில் தம்மை இணைத்துக் கொண்டு நோக்கு மனத்தின் பலத்தினை அதிகரிக்க அந்த குருவானவர் உபதேசிக்கும் உபதேச நெறி நின்று அவரால் நிகழ்த்தப்படும் பூஜை, ஜெபம், தியானம் எனப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் போன்ற அடிப்படை படிமுறைகளை பின்பற்றி அவர் தியானத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறும் வழி முறைகளான அதி காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுதல், மந்திர ஜெபம் செய்தல், நிமிர்ந்திருந்து கண்களை மூடி மனதை கவனித்தல் அல்லது உள்ளீர்க்கும் சுவாசத்தினையும் வெளி விடும் சுவாசத்தினையும் அவதானித்தல் அல்லது குருவினை நினைத்து தியானித்தல் அல்லது இஷ்ட தெய்வத்தினை நினைத்து தியானித்தல் என குரு எதனை கடைப்பிடிக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்துகிறாறோ அதனை மாத்திரம் முறையாக கடைப்பிடிக்கும் போது ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தாலும் இடைவிடாது முயற்சிக்கும் போது சலன மனத்தின் செயல் மெல்ல மெல்ல குறைவடைந்து கவனிப்பு மனமான நோக்கு மனத்தின் சக்தி மேலோங்க ஆரம்பிக்கும்.

இவ்வாறு அடிக்கடி நோக்கு மனதால் சலன மனத்தினை கவனிக்கும் போதோ அல்லது குரு அருளிய விடயங்களை கடைப்பிடித்து அதன் பிரகாரம் சுவாசத்தை கவனித்தோ அல்லது உலகிற்கும் உங்களிற்கும் நன்மை தரும் விடயத்தினை மனதில் நினைத்துக் கொண்டோ பயிற்சி மேற்கொள்ளும் போது சலன மனதின் தாக்கம் நோக்கு மனத்தின் பூரணமான கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் இவ்வாறு சலன மனதினை நோக்கு மனதின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திடவேதான் ஞானிகள் பூஜைகள், இறைவழிபாடுகள், மந்திர ஜெபங்கள், யாகங்கள், தியான வழிபாடுகள், ஆன்மீக உபதேசங்கள் போன்ற நன்மை தரும் விடயங்களை மனித குலத்திற்கு உவந்தளித்தார்கள்.

நோக்கு மனதின் சக்தி அதிகம் உள்ளவர்கள் சாதாரணமாக தம் வாழ்விலே வெற்றியாளர்களாக இருப்பார்கள் இதுவே சலன மனம் உடையவர்கள் வாழ்விலே தோல்வியுற்று அல்லலுறுகிறார்கள்; இதற்கெல்லாம் மேலாக குரு பக்தி இருந்தால் மாத்திரமே கவனிப்பு மனமான நோக்கு மனம் பலம் பெறும் அதாவது ஆசிரியர் கற்பிப்பதனை மாணவன் அந்த ஆசிரியரின் மீது பக்தி வைத்தால்தானே கவனிப்பு சீராக இடம் பெறும் அது பக்தி யோகம் ஆகிறது அதன் பின்னரான நோக்கு மனம் சக்தி பெற்றதும் சலன மனம் ஒடுங்கி விடும் அதன் போது அவரது கருமமான செயல் எந்த தடையுமில்லாமல் முழுமை பெற்று விடுகிறது இதுவே கரும யோகம் ஆகிறது கருமம் முழுமை பெற்றதும் அந்த முழுமைத் தன்மையால் கிடைக்கும் செல்வத்தை அனுபவித்துக் கொண்டு நோக்கு மனதின் பலம் குன்றாது அதனை பாதுகாத்து வரும் போது இராஜ யோகம் சித்திக்கிறது.

இங்கு நோக்கு மனத்தின் பலத்தினை அதிகரிப்பதற்காக பக்தி யோகத்தை கடைப்பிடிக்கிறோம் அதனால் நோக்கு மனம் சக்தி பெறுகிறது அதன் விளைவாக கருமம் செய்வதில் இருந்த தடை விலகும் போது கரும யோகம் சித்திக்கிறது கரும யோகத்தின் பயனாக செல்வம் பெருகுவதற்கு தடையாக இருந்த சலன மனதின் பலம் நிர்மூலமாக்கப்படுவதால் அங்கே ராஜ யோகம் நிலை பெறுகிறது.

அங்கே அவர் ராஜாவாக இருந்தாலும் யோகியாகத்தான் வாழுவார் ஏனெனில் சலன மனதினை பக்தி யோகத்தால் வென்று கருமம் செய்து அதனை யோகமாக மாற்றி அதாவது செய்யும் செயலில் தடையில்லாமல் வேகமாகவும் விவேகமாகவும் செய்யும் ஆற்றல் பெற்று விடுவதனால் அதன் மூலம் பெருகும் செல்வத்தினால் ராஜாவாக அவர் பரிணமிப்பார் அது அவரை ராஜயோகத்தில் நிலை நிறுத்துகிறது.

ராமாயணத்தில் சீதாதேவியின் தகப்பனாரான ஜனகமகாராஜா போல் ராஜாவாக இருந்தாலும் யோகியாக வாழ்வார் ஏனெனில் அவர் ராஜா என்பதனை பெரிதாக கொள்ளாமல் யோகத்தின் பால் முழுமையாக ஈடுபட்டதனால் ராஜா எனும் மகுடம் அவரை அலங்கரித்தது.

எந்த சலனமும் இன்றி நான் ராஜா எனும் அகங்காரம் அற்று கடமையாற்றும் நிலை முழுமை பெறும் போது ஞான யோகம் சித்திக்கிறது  அவர் ஞானம் பெற்று ஞானியாகி உலகிற்கு ஒளி பரப்புவார்.

கரும யோகம் சிறந்து எனினும் அதில் ஞான யோகமே உயர்ந்தது என்று மக்களுக்கு உரைக்கிறார் மகா யோகி.

இவ்வுலகில் உள்ள அனைத்து செயல்களும் தடையில்லாமல் அதாவது சலனமற்று ஆற்றப்படும் போது அங்கு திருப்தி எனப்படும் முழுமைத் தன்மை ஏற்படுகிறது அதாவது இன்பம் கிட்டுகிறது உதாரணத்திற்கு காரியாலயம் ஒன்றில் மேலதிகாரியால் ஒருவருக்கு வழங்கப்பட்ட பணிகளை அவர் குறைவின்றி முழுமையாக செய்து முடிக்கும் போது அந்த உயர் அதிகாரியினால் பாராட்டு கிடைக்கும் அல்லவா அதன்போது அவருக்குள் ஏற்படும் மகிழ்ச்சி, அது போல ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை பரீட்சையில் சித்தியடையும் போது ஏற்படும் மகிழ்ச்சி, விவசாயம் செய்யும்போது அந்த விவசாயிக்கு பெரும் விளைச்சல் கிட்டும் போது ஏற்படும் மகிழ்ச்சி, உழைத்து பொருளீட்டி ஒரு கார் கொள்வனவு செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சி அதனை ஓட்டும் போது ஏற்படும் மகிழ்ச்சி இவ்வாறு செயல்கள் எந்தத்தடைகளுமின்றி முழுமையடையும் போது உண்டாகும் இன்பங்கள் சிறிய இன்பங்களே இவை நிலையற்ற இன்பம் சிறிது காலங்களே நிலைத்து நிற்கும் இன்பங்கள்.

இவ்வாறு மனிதர்களால் ஆற்றப்படும் செயல்கள் அத்தனைக்குள்ளும் இருந்து வெளிப்படும் இன்பத்தின் முழுமைதான் பேரின்பம் ஏனெனில் அந்த சிற்றின்பங்களை படைத்தவர்தான் பேரின்பமாக நிலைத்து நிற்கிறார் உதாரணத்திற்கு கூறப் போனால் மின்சாரம் ஒன்றுதான் ஆனால் அந்த மின்சாரத்தினை பல பொருட்கள் மூலம் மின்குமிழ் வெளிச்சமாக, மின் சுழலி மூலம் காற்றாக, குளிர்சாதனப் பெட்டி மூலமாக பல அன்றாட தேவைகளுக்கு பல பொருட்களின் மூலம் ஒவ்வொரு விடயத்தை அனுபவிக்கிறோமல்லவா ஆனாலும் அவற்றிற்கு மூலம் மின்சாரமல்லவா அந்த மின்சாரத்தின் மூலமாகத்தானே அந்த பொருட்கள் மூலம் வழங்கப்படும் செயல்களின் முழுமைத் தன்மையான இன்பத்தினை அனுபவிக்கிறோம்.

எனவே செய்யும் செயல் முழுமை அடையும் போது அதன் மூலம் கிடைக்கும் இன்பம் யோகம் ஆகிறது.

இதனைத்தான் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா பகவத் கீதையில் மிக விளக்கமாக உரைக்கிறார் எந்த பிரதி பலனையும் எதிர்பாராது எந்த அகங்காரங்களும் இன்றி கடமையாற்றும் போது அது யோகமாக மாறும் அப்பா என்கிறார்.

மேலும் இதனை விரிவாக நோக்குவதானால்….

ஒரு கடமை முழுமை  பெறும் போது அங்கு கிடைக்கும் இன்பம் நெடு நாட்கள் நீடிப்பதில்லை மீண்டும் மனம் இன்னுமொரு இன்பத்தினை நாடி கடமையாற்றும் இவ்வாறு மாறி மாறி நிலையற்ற இன்பத்தை நாடுவதால் பயனேதுமில்லை ஆதலால் முழுமையாக நீ என்னை சரணடைந்து விடு அந்த சரணடைதல் மூலம் உன் கடமைகள் யோகமாக மாறும் அந்த யோகத்தின் மூலம் முழுமை நிலையான பேரின்ப நிலையான பேரானந்த சுகம் உனக்கு கிட்டும் அந்த பேரானந்தமே நான் அந்த நிலையில் நான் வேறு நீ வேறல்ல நானும் நீயும் ஒன்றே ஆதலால் நீ கொல்வதுமில்லை அவர்கள் கொலை செய்யப்படுவதும் இல்லை அவர்களது ஆணவம், கன்மம், மாயை போன்றவைகள் அறுக்கப்பட்டு அவர்களுக்கும் முக்தியெனப்படும் பேரானந்த நிலையான சச்சுதானந்த நிலையான பரமபதத்தினை வழங்குகிறேன் அரிச்சுனா என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதனைப்போல சுவாமி சிவானந்தரும் “கடமையைச் சரிவர செய்பவன் திருப்தியுடன் உண்பான் அவன் யாராலும் மதிக்கத்தக்கவனாக வாழ்வான்” என்கிறார்.

ஆக எவர் ஒருவர் தன் கடமைகளை சரியாக எந்த தடையுமின்றி இவ்வுலகில் ஆற்றுகிறாரோ அவர் யோகியாக வாழ்கிறார் அங்கு ஏற்படும் திருப்திதான் இன்பம் இச் சிறிய இன்பம் திருப்தியின் போது முழுமை பெறுவதால் யோகமாகிறது அதுவே பேரின்ப நிலை சச்சுதானந்த நிலை முக்தி நிலை ஆகிறது ஏனெனில் அவரது கடமைகளில் எந்த தடைகளும் தாக்கம் புரிவது கிடையாது ஆதலால் அவர் திருப்தியுடன் எந்த சலனமும் இன்றி வாழ்வார் அவரை இவ்வுலகம் போற்றித் துதிக்கிறது கடமையை சரிவர செய்வதனையே யோகம் என்கிறார் சுவாமிகள்.

இதனை மாறாத திகட்டாத பேரின்பம் என பகவான் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளும் தேன் ததும்ப தித்திக்குமாறு கூறுகிறார்

பதஞ்சலி யோகத்தில் “சித்த விருத்தி நிரோதம்” என்கிறார் பதஞ்சலி முனிவர் அதாவது யோகத்தால் சித்தத்தில் பதிந்துள்ள அல்லது விருத்தி பெற்ற பாவங்களை அழித்து விடுதல் என்கிறார்.

அதாவது நோக்கு மனம் சக்தி பெற்ற ஒருவர் அதன் மூலமாக தனது கடமையை சரிவர ஆற்றுகிறார் அந்த கடமை மூலம் கிடைக்கும் இன்பத்தினை அனுபவிக்கிறார் ஆனாலும் அதனை யோகமாக மாற்றி பேரின்ப நிலையான முழுமையான இன்பத்தினை அனுவித்திட அவர் தன் செயலுக்கு பயன்படுத்திய பொருட்கள் மேல் அளவுகடந்த மோகம் அல்லது ஆசை அல்லது பற்று வைத்திருப்பதனால் அவர்கள் மறுபடியும் சிற்றின்ப சுழற்சியிலே சிக்கித் தவிக்கிறார்கள் உதாரணத்திற்கு ஒருவருக்கு பட்டியாக மாடுகள் உள்ளது அவற்றிலே பசுக்களின் மூலம் பாலினை பெறுகிறார் அது போல பல நன்மைகளை பெறுகிறார் அங்குள்ள காளை மாடுகள் மூலம் வயல் உழுகிறார் வண்டில் கரத்தை இழுக்க செய்கிறார் ஆனால் அவற்றின் செயல் மூலம் கிடைக்கும் அனைத்து இன்பத்தினையும் அவர் பெற்றுக் கொண்டாலும் அவர் அந்த மாடுகளுடன் சென்று உறங்குவதோ உண்பதோ கிடையாதுதானே அது போல கடமையின் முழுமையை (பலனை) மாத்திரம் அனுபவித்துக் கொண்டு வாழும் வாழ்க்கை யோகமாக மாறுகிறது.

அதுவே அவர் அந்த செயலின் முழுமைத் தன்மையினை அனுபவிக்கும் போது கரும யோகி ஆகிறார் கரும யோகத்தின் பயனாக ராஜ யோகியாக உயர்வடைந்து எந்த சுயநலனும் அற்று எந்த கர்வமும் இன்றி கடமையாற்றும் போது அவர் ஞான யோகி ஆகி உயர்ந்து நிற்கிறார் அவரே பிரபஞ்சத்தின் படைப்பாளி அவரே அவதார புருஷர் அவர்தான் ஞானிகளுக்கெல்லாம் மகா ஞானி.

உலகில் எண்ணற்ற சக்திகள் இருந்தாலும் அதனை விட மிகவும் உயர்வானது பேரானந்தம் எனும் பரம சுகம் அப்பேற்பட்ட பேரானந்த நிலையடைந்தவர்களை உலகில் இருக்கும் ஏனைய எண்ணற்ற சக்திகளான கோபம், குரோதம், பொறாமை, வஞ்சகம், சூதுவாது, கொலை, கொள்ளை, மரணம் போன்ற எந்த சக்திகளின் தாக்கமும் அவர்களை பாதிக்காது அவர்கள் தாமரை இலைத் தண்ணீர் போல இவ்வுலகில் ஒட்டியும் ஒட்டாதது போல் வாழ்வார்கள் ஏனெனில் சிறிய இன்பங்களுக்குள் இருக்கும் முழுமை நிலையான பேரின்பத்தினை அவர்கள் அடைந்து விட்டார்கள் அப்போது சிறிய இன்பங்களின் பலன்களை அனுபவித்துக் கொண்டு பேரின்ப நிலையில் சதா காலமும் வீற்றிருக்கிறார்கள் படைப்பின் ஆதிப் பரப்பிரம்மத்தோடு ஐக்கியமாகி விட்டார்கள் இதுவே யோக சித்தியான ஞான யோகம் இதுவே இறுதி நிலை.

அப்பேற்பட்ட பரமபதத்தினை அடைந்த ஞானிகளாகப்பட்டவர்களுக்கு ஜடாமுடி, தாடி, காவி போன்ற வேடங்கள் தேவையற்றது ஏனெனில் மனித உடல் எனும் வேடமேற்று வந்த தமக்கு இன்னுமின்னும் மேலதிக வேடங்கள் புனைவது போலியான விடயம் என்பதனை நன்கு உணர்ந்து விடுகிறார்கள் மனித சரீரம் எனும் வேடத்தினை கலைத்திடவே பெரும்பாடு பட்டவர்கள் அந்த மனித சரீரம் எனும் வேடத்திற்கு வேடம் பூண முனைவார்களா என்ன! எது தேவையோ அதை செய்வார்கள் எது நன்மை பயக்குமோ அதனை கடைப்பிடிப்பார்கள் உலகத்திற்கு ஏற்றால் போல் வாழப்பழகிக் கொள்வார்கள்.

இதற்கு உதாரணமாக ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்து காட்டி போதித்துள்ளார் படைத்தவன் என்ற அகங்காரமின்றி உலகக் கடமைகள் அத்தனையினையும் எந்த தடையுமின்றி செய்து முடித்தார் அதுதான் அரிச்சுனனை நோக்கி ஞான உபதேசத்தினை நல்குகிறார்.

“பாவமற்ற அரிச்சுனா…. நீ உன் மனத்தை சலனத்திற்குள் வைத்திருக்கிறாய் பீஷ்மர், துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் என உன் உறவுகள் உன் தாத்தா உன் குல குருமார் என அவர்கள் பக்கம் உன் மனத்தினை திசை திருப்பி சலனப்பட்டதால் களையிழந்து சோர்ந்து போய் காணப்படுகிறாய் உண்மையில் அவர்கள் உனது உறவுகள் குருமார்கள் எனில் அவர்கள் யுத்தகளத்தில் எதற்காக பாண்டவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ளார்கள்? அவர்கள் பாண்டவர் பக்கமல்லவா இருந்திருக்க வேண்டும் ஆகையால் சலனமான மனத்தில் இருந்து விடுபட்டு நோக்கு மனத்தால் என்னை சரணடைந்து சலன மனத்தினை வெற்றி கொள்ள என்னை நன்றாக உற்றுப் பார் அரிச்சுனா பிரபஞ்சத்தின் தோற்றமும் நானே அதன் முடிவும் நானே என தொடங்கி அனைத்திலும் நானே வீற்றிருக்கிறேன் செயல்களின் பலன்கள் நானே உன்னிலும் நானே பிறரிலும் நானே மரஞ்செடி கொடி அனைத்திலும் நானே என்று எத்தனை அழகாக அனைத்து படைப்பிற்குள்ளும் அவற்றின் செயல்களின் பேரின்ப நிலையான யோகம் எனும் முழுமையாக தான் வீற்றிருப்பதனை எடுத்துரைக்கிறார்.krishna arjuna Mahabharata Kurukshetra1

சூரியன் எங்கு சென்றாலும் உலகத்தின் அழுக்குகள் அதனை எதுவும் செய்து விடுவதில்லை ஏனெனில் அது சத்தியத்தின் படி வாழ்கிறது அது போல் சத்தியத்தின் படி வாழும் ஞானிகளை உலகில் ஏற்படும் எந்த விடயங்களும் தாக்குவதில்லை அதே போன்று அந்த ஞானிகளை சரணடைந்து அவர்கள் வழி நின்று பக்தி செலுத்துபவர்களையும் உலகில் தாக்கத்தினை உண்டு பண்ணும் பேரழிவுகளோ, இயற்கை சீற்றங்களோ, நோய்களோ, பசி, பஞ்சம், பட்டினி, வறுமை, சாக்காடு போன்றவைகள் ஒரு போதும் தாக்கத்தினை உண்டு பண்ணிடாது.

கரு மேகம் சூரியன் அருகில் சென்று என் இருளை நீக்கி விடு என்று கூறியதாம் அதற்கு சூரியன் மேகமே …. நீ என் அருகில் வந்ததும் தானாகவே உன் இருள் மறைந்து விட்டது என்று கூறியதனைப் போன்று மகா யோகியானவரின் திருப்பாத கமலங்களை சரணடையும் போது கரு மேகத்தின் இருள் விலகியதனைப் போன்று மானிட சமூகத்தின் அத்தனை துன்பங்களும் நீங்கப் பெறும் என்பது ஆன்மீக நீதியாகிறது இதுவே ஆன்மீகத்தின் முழுமையுமாகிறது.

“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”

SHRI PEERINPAGNANA PEETAM- No-07, Periyauppodai Rd, Batticaloa, Srilanka

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -