வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழைபெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்தது இருண்ட வானத்தால் சென்னை நகரமே இருள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்தது.
ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அண்ணாநகர், சைதாப்பேட்டை, நந்தனம், எழும்பூர், தேனாம்பேட்டை, தியாகராயநகர் உள்ளிட்ட பல இடங்களிலும் பலத்த மழை பெய்தது.