Home Spiritual தொடக்கும் மனிதன் தொடக்கூடாதவைகளும்- மகா யோகியின் ஆன்மீக உபதேசத் தொகுப்பு!

தொடக்கும் மனிதன் தொடக்கூடாதவைகளும்- மகா யோகியின் ஆன்மீக உபதேசத் தொகுப்பு!

உலகில் பல விதமான மனிதர்கள் வாழ்கிறார்கள் அவர்கள் வாழ்க்கை முறைகள், மொழி, கலாச்சாரம், நிறங்கள் என அனைத்திலுமே பல வேறுபாடுகள் காணப்படும் ஆனாலும் ஆன்மாவானது ஒன்றேயொன்றுதான் அதனை உயிர், ஜீவன் என்று பல பெயர்கள் கொண்டழைக்கிறார்கள்.

அதே போல மனிதர்கள் வாழும் வாழ்க்கையானது சூழல் தன்மைக்கேற்ப வேறு படுகின்றன அங்கே அவர்களது புலன்களினால் உள்வாங்கப்படும் பல விடயங்களை சார்ந்து அவர்கள் வாழ்வதனால் நல்லவர்கள் தீயவர்கள் எனும் இரு நிலை புரிதல்கள் ஏற்படுகின்றன.

மனிதன் எனும் தன்மையிலிருந்து வேறுபட்டு உடலினை மாத்திரமே மனிதனாக கணிப்பிடும் கணிப்பு தவறல்லவா! ஆக உடல் மாத்திரம் ஒரு மனிதனின் தன்மைகளை கணிப்பிடும்  அளவு கோல் அல்ல அவர்கள் மன நிலைகளே அவர்களை கணிப்பிடும் அளவு கோல் என்பதனை நம்மால் உணரக்கூடியதாக உள்ளதல்லவா! அளவீடு பற்றிய உணர்தலற்ற நிலையே மனிதர்களது துன்பமான வாழ்விற்கு காரணம் என்றும் அந்த துன்பமான வாழ்விலிருந்து நிரந்தரமாக விடுதலை பெற்று முழுமையான  இன்பமான வாழ்வினை எவ்வாறு வாழலாம் என்பதனைப்பற்றியும் சற்குருநாதர் மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் தன் ஞானத்தால் மிக நுணுக்கமாக ஆராய்ந்து அதன் முடிவுகளை துல்லியமாக பாமர மக்களுக்கும் இலகுவாக புரியும் விதத்தில் அருளிய ஞான உபதேசத்தினை சுவாமிகளின் ஆசியுடன் தொகுத்து வழங்குகிறோம்.DSCF8985 scaled

தொடக்கும் மனிதன் தொடக்கூடாதவைகளும்

மனதிற்கும் மனதால் உடலிற்கும் தீங்கு விளைவிக்க கூடிய விடயங்களை தொடலாகாது அல்லது தொடக்கூடாது என்பதனையே தொடக்கு என்று கூறி வைத்தார்கள் நம் மூதாதையர்கள் அவைகள் ஒரு விதத்தில் உடல் சுகாதாரத்தினையும் உளச் சுகாதாரத்தையும் பேணச் செய்வதற்கு அவர்கள் கையாண்ட யுக்தி என்றே கூறலாம்.

ஆனாலும் மனிதர்கள் அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமது வசதிக்கு ஏற்றால் போல் முன்னோர்கள் கூறிய விடயங்களை மாற்றியமைத்து கொண்டு வாழ முற்பட்டதன் விளைவாலும் தவறான புரிதலினாலும் அறியாமை இருளில் சிக்கி ஆசையின் பக்கம் மனதினை செலுத்தி திக்கற்று திசையறியாமல் திணறிப் போய் தவிக்கிறார்கள்.

ஏனெனில் மனித மனங்கள் தொடக்கூடாத அதாவது காம, மோக, கோப, குரோத, மத, மாத்சர்யம் எனும் தீங்கு விளைவிக்கவல்ல விடயங்களை  மனதில் குடிகொள்ள செய்து கொண்டு வாழ்க்கையினை வாழ முற்படுகின்ற போது வாழ்வில் எவ்வாறு புனிதத் தன்மையும் அதனால் வெற்றியும் கிட்டும் என்பதனை சற்று சிந்தித்து பார்ப்போமானால் மனங்களில் மனிதர்கள் தொடக்கினை வைத்துக் கொண்டு அதனை மூடி மறைத்துக் கொண்டும் சமூகத்தில் வாழ முற்படும் போது சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப அந்த தீய எண்ணங்களின் எண்ணப் பிரவாகம் அவர்களை மாத்திரமல்ல அவர்களை சார்ந்தவர்கள் அதன் மூலம் அவர்கள் வாழும் சமுதாயத்தினையே கெட வைத்து குட்டிச் சுவர் போலாக்கி விடும் என்பது யதார்த்த உண்மை.

மனிதர்கள் விடக்கூடிய சிறிய சிறிய தவறுகள் ஆரம்பத்திலேயே அவற்றை அவர்கள் கண்டும் காணாமல் விடுவதால் அதன் மூலம் பெரிய தவறுகள் உருவாகின்றன அவை மனித குலத்தினையே அழிக்கவல்ல பெரும் தீங்கினை உண்டாக்குகிறது.

இது எவ்வாறெனில் ஒரு துணியில் சிறிய துவாரம் வீழ்ந்து விடுகிறது அதனை சிறிய துவாரம்தானே என்று தைத்து சரி செய்யாமல் விட்டு விட்டால் அது சில நாட்களில் பெரிய கிழிசலாகி தைத்து சரி செய்து உடுக்க முடியாமல் போய் விடுமல்லவா கிழிசல் துணியினை அணிந்து கொள்ள யார்தான் விரும்புவார்கள் இதனை விளக்க சிறிய விடயமொன்றை பார்ப்போம்.

உதாரணத்திற்கு ஒருவருக்கு செல்வம் பெருகுவதனை பார்த்து அவரிடம் பணிசெய்யும் பணியாளருக்கோ அல்லது அயல் வீட்டாருக்கோ ஒரு பொறாமை எழுகிறது அந்தப் பொறாமையினை அதன் பாட்டுக்கு விட்டு விடும் போது அது மனதிலே மென்மேலும் வலுவடைந்து அவரைப் போல தானும் செல்வந்தனாக வேண்டும் என்பதற்காக பல குறுக்கு வழிகளை நாட மனம் துணிகிறது அதன் விளைவாக கொலை, கொள்ளை போன்ற சமூக சீர்கேடுகள் இடம் பெறுகின்றன இவ்வாறு சிறிய ஒரு கறை பெரும் சமூக கறையினை உண்டாக்குவதனைப் போல மனிதர்களது மனதிலே பல விதமான தீய எண்ணக் கறைகள் படிந்துள்ளன அவற்றினை இல்லாது செய்து மனிதர்கள் புனிதர்களாக வாழ்ந்திட பின்வருமாறு உரைக்கிறார் மகா யோகி.

ஆகாய கங்கையில் குளித்திட வேண்டும்

“மனிதர்கள் தம் உடலினை சுத்தம் செய்ய ஆற்றிலோ, குளத்திலோ, கிணற்றிலோ குளிப்பதனைப் போன்று மனதிலே குடி கொண்டிருக்கும் தீயவிடயங்கள் எனும் அழுக்கினை போக்கி புனிதர்களாகிட ஆகாய கங்கையில் குளித்திட வேண்டும் அந்த ஆகாய கங்கையில் குளித்திட ஒரே வழி தியானம் ஒன்றே அந்த தியானத்தின் மூலமே பரிபூரணத்துவத்தினை மனிதர்கள் அடைய முடியும்” என்கிறார் அதனால்தான் சுவாமிகள் மக்களிடம் தியான வாழ்வினை வலியுறுத்துகிறார்.

துன்பங்கள் நேரும் போது மனிதர்கள் தம் துன்பத்தினை போக்கவல்ல விடயங்களை நாடிச் செல்கிறார்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்வார்கள், யாத்திரை மேற் கொள்வார்கள், பூஜைகள் செய்வார்கள், ஆலய திருப்பணிகளை செய்வார்கள் சிலர் உண்மை வழியுரைக்கும் சற் குருவினை சரணடைவார்கள் அவர்கள் அடிக்கடி இடைவிடாமல் இறைவனை துதித்து தம் கடமைகளை ஆற்றி வருவார்கள்.

அவ்வாறு இறை வாழ்வினை கடைப்பிடிக்கும் போது இன்பத்தை அனுபவிக்க தடையாக இருந்த இன்பத்தின் சக்தி வலுவடைந்து வருகிறது மனப் பலம் அதிகரிக்கிறது நல்லனவற்றை மனம் நாடுகிறது அதனால் துன்பம் கலவாத இன்ப வாழ்வு கிட்டுகிறது ஆனாலும் அவ்வாறு இன்ப வாழ்வினை அனுபவித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் ஏற்கனவே ஏற்பட்ட துன்பத்தின் போது கடைப்பிடித்த இறை வாழ்விலிருந்து மெல்ல மெல்ல விலகிப் போகிறார்கள் அந்த விலகலுக்கான காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்ப்போமானால்.

ஒன்று அவர்கள் இன்பமாக வாழ தடையாக இருந்த விடயத்தின் தடையகன்று அது அளவிற்கு அதிகமாக கிடைத்திருக்கும் அது செல்வமாக இருக்கட்டும், கணவன் மனைவிக்கிடையேயான அன்னியோன்னியமாகட்டும், குழந்தைகளது கல்வியாகட்டும், அவர்களது தொழில் அல்லது உயர் பதவிகளாகட்டும் இவைகள் அனைத்தையும் பெறுவதற்கு எதனால் தடை ஏற்பட்டதோ அந்த தடைகள் ஒரு ஞான குருவினைச் சரணடைந்து நிறைந்த பக்தியோடு ஆன்மீக வாழ்க்கை வாழும் போது இல்லாமல் போகிறது ஆனாலும் துன்பத்தின் போது வைத்திருந்த பக்தி நிறைந்த ஆன்மீக வாழ்வும் அந்த இன்பத்தின் போது மறைந்து விடுகிறது அவ் இன்பம் எவ்வாறு தமக்கு உண்டாகியது என்பதனையும் மறந்து விடுகிறார்கள் அதனால் மீண்டும் துன்பத்தினை அனுபவிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

முன்பு போல் ஆலயத்திற்கு செல்வார்கள் அல்லது குருவிடம் செல்வார்கள் ஆனால் துன்பத்தின் போது மனதில் வைத்திருந்த பக்தியானது அறவே காணப்படாது மாறாக குறைகளையே பேசுவார்கள் நிறைவினை தேடி வந்தவர்கள் குறையினைப் பேசுவதால் நிறைவு கிட்டுமா? எதை நினைக்கிறார்களோ அதுவாக ஆகி விடுதலே தியானம் குறைகளை பேசிக் கொண்டும் மனதால் தொடக்கூடாத தீய விடயங்களை பற்றிக் கொண்டும் காவி உடுத்தாலென்ன, ருத்திராட்சம் அணிந்தாலென்ன, தீ மிதித்தாலென்ன, யாத்திரைகள் சென்றாலென்ன மனிதன் புனிதனாக வாழத்தான் இயலுமா? எனவே மனதில் ஏற்படக் கூடிய நற்காரியங்கள் சார்ந்த நாட்டமும் மாற்றமுமே அவர்களின் நல் வாழ்விற்கு உறுதுணையாக இருக்கும்.

இவற்றை விரிவாக ஆராய்ந்து பார்போமானால் மனிதர்கள் தம் மனதில் சலனத்தோடு ஆற்றும் செயலின் பயனாக உண்டாகும்  பலன்களும் துன்பங்கள் நிறைந்ததாகவே வெளிப்படும் இவ்விடயம் தனிமனித வாழ்விலிருந்து தாவி சமூக வாழ்விலே பரம்பலடைந்து அதாவது ஒரு தொற்று நோய் போல ஒட்டு மொத்த மனித குலத்திற்கே தீங்கு விளைவித்து விடுகிறது.

இருந்தும் மனம் சக்தி படைத்த மனிதர்கள் அதாவது சலனமற்ற மனதினை உடையவர்கள் மனித குலத்திற்கு கேடு விளைவிக்கும் இவ்வாறான சமூகப்பரம்பலில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் அது நோயாக இருக்கட்டும் அல்லது வெவ்வேறு வழிகளில் ஏற்படும் துன்பங்களாக இருக்கட்டும் அவைகள் ஏற்படுத்தப்படும் வழிகள் வேறாக இருந்தாலும் அதனால் உண்டாகுவது மனிதனுக்கு தீங்கான விடயமாகவே காணப்படுகிறது.

அவ்வாறு தப்பித்துக் கொள்ளும் மனிதர்களது தன்மைகளை ஆராய்ந்து பார்ப்போமானால்

இறை பக்தி மிக்கவர்களாக இருப்பார்கள்

தர்ம சிந்தனை மேலோங்கியவர்களாக விளங்குவார்கள்

நேர்மை, தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருப்பார்கள்

தத்தம் கடமையினை சரியாக செய்பவர்களாக இருப்பார்கள்

தமது ஆன்மீக வழிகாட்டியாக ஞான குரு ஒருவரிடம் தன்னை சரணடைய செய்து அவர் காண்பிக்கும் இறை வழியினை தவறாமல் கடைப்பிடித்து வருபவர்கள் இவற்றையெல்லாம் விட மிக மிக மேன்மையானவர்களாக மேலே குறிப்பிட்ட அத்தனை பண்புகளும் ஒருங்கே அமையப்பெற்றவராக வாழ்வார்கள்

இவர்களை மனித சமூகத்தினை சீர்கெடச் செய்திடும் துன்பத்தினை வழங்கிடும் தீய விடயங்கள் ஒரு போதும் பாதிப்பது கிடையாது அவற்றை அவர்கள் மனதில் உள்வாங்கவும் மாட்டார்கள் ஏனெனில் துன்பம் ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களை அவர்கள் சரணடைந்த ஞான குருவானவர் ஆன்மீக உபதேசங்களின் மூலம் உணரச் செய்து விடுகிறார் அந்த உணர்தல் அவர்களின் மனதினை சலனத்திலிருந்து மீட்டு நல் வாழ்வினை வாழ கற்றுக் கொடுக்கிறது.

ஞான குருவினது ஞான உபதேசங்களும் வழி காட்டல்களும்
தெளிவினை உண்டு பண்ணி விடுவதால் தெளிவான ஒரு விடயத்தினுள் சலனம் ஏற்படும் போது அது இலகுவாக உணரப்பட்டு விடுகிறது அந்த உணர்வானது தெளிவாக நிலையாக வீற்றிருந்து சலனம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தினையும்  காரணத்தினையும் அலசி ஆராய்வதன் மூலம் கண்டறிந்து அதற்கான தீர்வினை அல்லது மாற்று நடவடிக்கையினை அது தானாகவே மேற் கொண்டு விடுகிறது ஏனெனில் சலனத்தில்  இருந்து முழுமையாக விடு பட்ட எவரும் மீண்டும் அந்த கலக்கத்திற்குள் செல்ல எத்தனிக்கமாட்டார்கள் அவ்வாறு சலனம் ஏற்பட்டாலும் நிதானமாக ஆராய்ந்து  அதனை நிவர்த்திப்பதற்கான வழியினையே தேடுவார்கள்.

ஆனால் மனிதர்களோ துன்பம் ஏற்படும் போது பதறியடித்துக் கொண்டு ஆலயங்களுக்கு செல்வதுவும் நேர்த்திக்கடன்கள் வைப்பதுவும், தேங்காய்களை உடைப்பதிலும்,  காவடி எடுப்பதிலும், அலகிடுவதிலும், தீ மிதிப்பதிலும் என அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட பல விடயங்களே அதற்கு பரிகாரங்களென எண்ணி அவற்றையெல்லாம் செய்கிறார்கள் ஆனாலும் அவற்றினால் சில நாட்களே நிம்மதியும் இன்பமும் கிட்டுகிறது அவ்வின்பங்கள் நிரந்தரமாக நீடிப்பது கிடையாது.

யாத்திரைகள் மேற் கொள்ளும் போது மாத்திரம் இறை பக்தர்களாக பக்திமான்களாக காணப்படுகிறார்கள் யாத்திரைகள் ஆலய திருவிழாக்கள் நிறைவடைந்ததும் எந்த மாற்றமும் அவர்களில் உண்டாவதாக தெரிவதில்லை மீண்டும் தாம் எந்த செயலினை செய்தார்களோ அதே செயலினை எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறார்கள் அதே கோபம், பொறாமை, வஞ்சகம் என மனதால் தொடக்கூடாத தொடக்கான விடயங்களை மனதிலே ஏற்றி வைத்துள்ளார்கள்.

இவ்வாறான தீய விடயங்களே மனித சமுதாயத்தின் வளமான வாழ்விற்கு எதிரான மனிதர்கள் தம் மனங்களால் தொடக்கூடாத மிகப் பெரிய தொடக்கு ஆகிறது இவற்றினை மனித சமுதாயம் சற்றே சிந்தித்து தம்மை தாமே அலசி ஆராய்ந்து பார்த்திட வேண்டும் என்கிறார் மகா யோகி.

மேலே கூறியபடி மனதிலே தீய விடயங்களை புகுத்தி வைத்துக் கொண்டு யாத்திரை, விரதம், திருவிழா, பூசைகள், நேர்த்திகள் போன்றவற்றை கடைப்பிடித்தாலும் அவற்றால் தற்காலிக மகிழ்வே கிட்டும் ஆனால் அந்த மகிழ்ச்சியும் மன அமைதியும் நீடிக்கும் அளவிற்கு மனம் பண்படவில்லை காரணம் மனதில் குடிகொண்டுள்ள தீய எண்ணங்களான தொடக்கான எண்ணங்களை நாம் விலக்கவில்லை அல்லவா! இது மனிதர்களின் தவறல்ல அவர்களுக்கு இதன் தார்ப்பரியத்தினை உணர்த்தக்கூடிய வழிகாட்டி இதுவரையில் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

ஆனாலும் காலத்திற்கு காலம் இவற்றிலிருந்து விடுதலையடைந்து மனிதன் தனது வாழ்விலே முழுமை பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாக பூஜிக்கப்படுவதற்குமான ஆன்மீக வழியினை போதிப்பதற்காக பல மகான்கள் தோற்றம் பெற்றார்கள் ஆங்காங்கே யோக ஆஷ்ரமங்கள் அமைத்து ஞான உபதேசத்தினை நல்கினார்கள் ஆனால் மக்களோ நடமாடும் கடவுளர்களின் அருமையும் பெருமையும் மகிமையும் அறியாதவர்களாய் மாயைக்குள் சிக்குண்டு வாழ்கிறார்கள்.

ஒரு பொருள் உற்பத்தியாளன் தன் படைப்பிற்கு பங்கம் உண்டாகுமிடத்து அதனை நிவர்த்திப்பதற்காக ஆங்காங்கே திருத்துமிடங்கள், உதிரிப்பாக கடைகள், திருத்துனர்கள் என்று வைத்திருப்பதனைப்போல இந்த பிரபஞ்சத்தினையும் அதனை படைத்தவருமான இறைவன் தன் படைப்பினை பாதுகாக்க அவ்வாறானவர்களை அனுப்பியிருக்க மாட்டாரா என்ன! அதற்காவேதான் சித்தர்கள் யோகிகள் ஞானிகள் போன்றோரை  காலத்துக்கு காலம் அனுப்பி வைக்கிறார் சில சந்தர்ப்பங்களில் இப்பிரபஞ்சத்தினை படைத்த ஆதி சக்தியான படைத்தவரே மனித சரீரமெடுத்து அவதரித்து குருவாக வந்து மனித சமுதாயத்தின் பிழைகளை உணர்த்தி அவைகளை திருத்தி தர்மத்தை நிலை நாட்டி செல்கிறார்.

படைப்பென்ற ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது அவ்வாறெனில் அவற்றை படைத்தவன் ஒருவன் இருக்கத்தானே வேண்டும் அவ்வாறில்லையேல் படைப்பே நிகழ வாய்ப்பில்லையே எனவே மனிதர்கள் படைத்தவனிடத்தில்தான் தம் வாழ்வின் முழுமைத் தன்மை உள்ளது அந்த முழுமைத் தன்மையினை பெற்றிட தம்மால் மனதில் புகுத்தப்பட்ட தீய விடயங்களை சுத்தம் செய்து தம் அசல் தன்மையினை பெறுவதற்கு எந்த வழிகாட்டியினை அணுகலாம் என்னும் தெளிவு பிறந்து விட்டாலே போதுமானது அவர்களுக்கான வழிகாட்டி அல்லது திருத்துனர் ஏதோ ஒரு ரூபத்தில் அவர்களிடம் வருவார் அல்லது அவரிடம் செல்வதற்கான வழி யாரோ ஒருவர் மூலம் நிட்சயம் கிட்டும்.

உண்மை வழிகாட்டி யார்?

படைத்த பொருட்களுக்கும் அவற்றின் முழுமைத் தன்மைக்குமான வழிகாட்டி இவர்தான் என்பதனை எவ்வாறு மனிதர்களால் உணர முடியும்? ஏனெனில் பல போலியான வழிகாட்டிகளிடம் மனிதர்கள் சிக்கி அல்லலுற்று கொண்டிருக்கின்றார்கள் அவ்வாறு போலியானவர்களிடம் சிக்கிடாமல் உண்மையானவர்களை சென்றடைய வேண்டுமல்லவா அப்போதுதானே வாழ்வில் மகிழ்வு கிட்டும்.

நீங்கள் யாரை குருவாக ஏற்று சரணடைகிறீர்களோ அவரை ஒரு தடவையாவது நேரில் தரிசிக்கும் பாக்கியம் கிட்டினாலோ அல்லது அவரின் உபதேசங்களை கேட்கும் போதோ கீழே கூறப்படும் விடயங்களை உணர்ந்தீர்களானால் அவர்தான் உங்களுக்கு தகுந்த குரு.

யாரை குருவாக ஏற்கிறீர்களோ அவர் முன் நீங்கள் பெரும் மன அழுத்தத்தோடும் அமைதியின்மையோடும் மிகுந்த கலக்கத்தோடும் சென்று அமர்ந்திருந்தாலும் சில நிமிடங்களிலேயே இனம்புரியாத அமைதியும் ஆனந்தத்தினையும் உணர்வீர்களானால் அவர்தான் உங்கள் ஞான குரு  அல்லது அவரைப் பற்றி கூறும் போதோ பேசும் போதோ மனம் அமைதி பெறுகிறதெனில் அவர்தான் உண்மைக் குரு இவ்வாறு அந்த குருவின் முன்னால் சென்று அமர்ந்தவுடன் அல்லது அவர் உபதேசங்களை கேட்டவுடன் உங்கள் மனதிற்கு முழுமையான நிரந்தரமான அமைதி கிட்டுகிறதோ அவர்தான் உலகிற்கு ஞான வழி காண்பித்து தர்மத்தை நிலைநாட்டி உலகினை உய்வு பெற செய்திட வந்த அவதார புருஷர் பிரபஞ்சத்தின் நாயகன் என்பதனை காலப் போக்கில் உணர்ந்து கொள்வீர்கள்.DSCF9013 scaled

“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -