விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆம் சீசன் ஆர்ப்பாட்டமாக சென்று கொண்டிருக்கிறது.
கூச்சல், குழப்பம், அழுகை, மோதல், புகார் என பரபரப்புக்கும் இந்த நிகழ்ச்சியில் பஞ்சமில்லை.
விஜய் டிவி நிர்வாகம் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் விஷயங்களை வைத்து அழகான புரமோவை வெளியிட்டு வருகிறது. அது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இந்த வருட பிக்பாஸில் யாருக்கு காதல் பூக்கும் என்கிற ஆருடங்கள், அனல் பறக்கின்றன சோசியல் மீடியாவில்.
தமிழைப் போலவே தெலுங்கு பிக் பாஸ் 4 சீசனும் அமர்க்களப்பட்டு வருகிறது. நடிகர் நாகார்ஜுனா, இதை தொகுத்து வழங்குகிறார். நடிகை மோனல் கஜ்ஜார், அம்மா ராஜசேகர் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். ஆரம்பத்தில் மெதுவாக சென்ற இந்த நிகழ்ச்சி, இப்போது சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது
இயக்குனர் சூரிய கிரண் உள்பட சிலர் வெளியேறிய நிலையில், சிலர் புதிதாக வந்துள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக, நாகார்ஜுனா செல்ல இருப்பதாகவும் இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்கள் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்பட்டது.
அதன் படி, அவர் மணாலி சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே அவருக்குப் பதிலாக, நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. பிக் பாஸ் 3 சீசனின் போதும் ரம்யா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் இணைந்திருந்தார்.
பின்னர் நடிகை ரோஜா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்போது நாகார்ஜுனாவின் மருமகளும் நடிகையுமான சமந்தா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மா டிவி நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது.
அதற்கான புரமோ வீடியோவையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் நடிகை சமந்தா அமர்க்களமாக என்ட்ரியாகிறார். போட்டியாளர்களுடன் ஜாலி கேலியாக பேசுகிறார். நடிகை பாயல் ராஜ்புத்தின் நடனமும் இடம்பெறுகிறது. கூடவே நடிகை மோனல் கஜ்ஜார் உள்ளிட்டோரின் அழுகை என சென்டிமென்ட் ஏரியாவையும் டச் பண்ணுகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.