Home Breaking News ஈழத் தமிழரை நோக்கி தீட்டப்படும் கொடுவாள் 20ஆவது திருத்தச் சட்டம்

ஈழத் தமிழரை நோக்கி தீட்டப்படும் கொடுவாள் 20ஆவது திருத்தச் சட்டம்

இலங்கைத்தீவின் அரசியல் ஆனது இப்போது ஒரு பெரும் கொதிநிலை அடையத் தொடங்கியுள்ளது என தொல்லியல்த் துறை மூன்றாமாண்டு மாணவன் திபாகரன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையிலே இவ்வாறு கூறியுள்ளார்.

அக் கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச, பிராந்திய, அரசியற் போட்டி உள்நுழைவுகளும், உள்ளக அரசியல் முரண்பாடுகளும், சர்வாதிகார போக்குமாக மாறியிருக்கும் இலங்கையின் அரசியல் சூழமைவில் புதிதாக வருகின்ற 20ஆவது திருத்தச் சட்டம் மேலும் பல்வகைப்பட்ட வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று 2 /3இற்கும் அதிகமாக 156 வாக்குகளைப் பெற்று 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் இருந்து 20ஆவது திருத்தச் சட்டத்தின் உடனடித் தேவைதான் என்ன?

அரசியலினுள்ளே ஓர் எரிதணல் அரசியல் வேகமாக நகர்வதை இது கோடிட்டுக் காட்டுகிறது.

கொரோனாவுக்கு பின்னான சர்வதேச அரசியல், மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்களுக்கேற்ப தம்மைத் தயார்படுத்த சிங்களதேசம் கிளம்பிவிட்டது என்பதை ஈழத் தமிழர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

உண்மையில் இந்த 20ஆவது திருத்தச் சட்டத்தின் உள்நோக்கம்தான் என்ன என்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் குடும்ப அரசியலை தக்கவைக்கவும், சர்வதிகார ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்தவும், புவிசார் அரசியலை கையாளவும் இந்த 20ஆவது திருத்தச் சட்டம் ராஜபக்ச குடும்பத்திற்கு உடனடித் தேவையாக உள்ளது.

அத்தோடு யுத்த வெற்றியை தொடர்ந்து தக்கவைக்கவும் இது தேவையாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் இன்றைய அரசியல் சூழமைவு 1980களில் நிலவிய அரசியல் சூழலை ஒத்த தன்மையை வெளிக்காட்டுகிறது.

20ஆவது திருத்தச் சட்டத்தை கண்டு சிங்களத் தரப்பே அஞ்சுகின்றது என்றால் அது பற்றித் தமிழ்த் தரப்பு மேலும் சற்று ஆழமாக யோசிக்க வேண்டியது அவசியம்.

“விமல் வீரவன்ச எனது உடன் பிறவாச் சகோதரன்”என்று நாமல் ராஜபக்ச மேடையில் முழங்கி உரிமை கோரியிருந்தார். அதற்கேற்ப ஒட்டி உறவாடி ராஜபக்ச குடும்பத்தின் அடிவருடியாக வலம்வந்த விமல் வீரவன்சகூட இந்த திருத்தச் சட்டத்தை ஒரு கட்டம் வரை எதிர்த்தார் என்பதிலிருந்து சிங்களத் தரப்பின் அச்சத்தின் அளவு எந்த அளவிலானது என்பதை ஊகிக்க முடியும். இறுதியில் அவர் தனது சொந்த மந்திரி பதவிக்காக வாக்களித்தார் என்பது வேறு கதை. வாழ்த்துக்கள்.

ஜே.வி.பி கட்சியின் பிரச்சார பீரங்கியாக இருந்து பின் அந்த ஜே .வி. பி. கட்சியை இவர் காட்டிக்கொடுத்து மஹிந்த ராஜபக்சவின் அடிவருடியாக புதுப் பிறப்பெடுத்த விமல் வீரவன்சவுக்கு ராஜபக்சகளை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் அவர் தனது அடிவருடி அரசியலின் வெளிப்பாடாய் ராஜபக்சக்களுக்கு சாதகமாக வாக்களிப்பார் என்பது எல்லோரும் முன்கூட்டியே தெரிந்திருந்த உண்மையே.

அதே நேரத்தில் மேற்படி 20ஆவது திருத்தச் சட்டத்தின் மீதான விவாதத்தின் போது கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், ”இந்த அரசியல் யாப்பு திருத்தச் சட்டம் இரும்புக் கரம் கொண்டு தமிழர்களை நசுக்குவதற்கான உள்நோக்கம் கொண்டது” என 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

19ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கின்ற ஒரு ஜனாதிபதி இரண்டு தடவைகள்தான் பதவி வகிக்கலாம் என்பது 20ஆவது திருத்தத்திலும் அப்படியே இருக்கிறது. ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் 35 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டு அது 30 வயதெனக் குறைக்கப்படுகிறது. இம்மாற்றத்திற்கான காரணம்தான் என்ன?

பொதுவாக அரசியல் தலைவர்களுக்கு தமக்கு பின்னான அரசியல் தலைமைத்துவம் தம் பரம்பரைக்காக இருக்க வேண்டும் என்ற பெரும் கனவு எப்போதும் இருக்கும். இந்தக் கனவுக்கு ராஜபக்ச குடும்பமும் விதிவிலக்கல்ல.

இன்று இருக்கின்ற இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியல் நெருக்கடிகளில் இருந்தும் சரி , இயற்கையாக நிகழக்கூடிய நோய் மற்றும் விபத்துக்களாலாயினும் சரி ஜனாதிபதிக்கோ அல்லது எந்தப் பெரும் தலைவர்களுக்கோ எப்போதும் மரணம் சம்பவிக்க முடியும் .

அவ்வாறான ஏதேனும் ஒரு சம்பவம் இலங்கையில் அரசுத் தலைவருக்கு ஏற்படுமாயின் அடுத்த அரசுத் தலைவர் யார் என்றால் அது இன்றைய அரசியலமைப்பின்படி பிரதமர் பதவியில் இருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு உரியது.

ஆனால் மூன்றாவது தடவையாக ஒருவர் மறுபடியும் பதவியில் இருக்க முடியாது என்ற நிலையில் அது ராஜபக்சவின் கையைவிட்டு நகர்ந்துவிடும். இந்நிலையில் ராஜபக்ச குடும்பத்தின் இயல்பான தெரிவு அவர்களது குடும்ப வாரிசான நாமல் ராஜபக்சவுக்கு உரியதாகும்.

மஹிந்த ராஜபக்சவின் இரு புதல்வர்களான நாமல் ராஜபக்ச, ரோகித ராஜபக்ச ஆகிய இருவரும் 35 வயதிற்குட்பட்டவர்கள். எனவேதான் தனது குடும்ப ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்கவும் குறிப்பாக நாமல் மற்றும் ரோகிதவை கருத்தில் கொண்டே அரசு தலைவருக்கான வயதெல்லை 30 வயது எனக் குறைத்து நாமல் ராஜபக்ச, ரோகித ராஜபக்ச இளவல்களுக்கு வழி திறக்கும் ஏற்பாடு இந்த வயதுக் குறைப்பின் மூலமாக செய்யப்பபட்டிருக்கிறது.

அதே நேரத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடவோ, அமைச்சுப் பதவியேற்கவோ முடியாது என்று 19ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்த அரசியலமைப்பு ஏற்பாட்டை 20ஆவது திருத்தச் சட்டம் இல்லாதொழித்து இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் பங்குபற்றலாம், அமைச்சுப் பதவி வகிக்கலாம் என்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஏற்பாடானது பசில் ராஜபக்சவை கருத்திற் கொண்டே மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில் ராஜபக்ச குடும்பத்தின் மூளைப் பலம், என்பது பசில் ராஜபக்சதான். எனவே அவரை ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாப்பு அரணாக வடிவமைக்க முயற்சித்தார்கள். அதில் வென்றும் விட்டார்கள்.

அதாவது இந்த 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மஹிந்த ராஜபக்ச தனது இரண்டு மகன்களையும் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு உரிய வரிசையில் நிறுத்திவிட்டார். அதேபோல பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் ஆக்கக்கூடிய ஏற்பாட்டையும் நிறைவேற்றி விட்டார்கள்.

அடுத்து ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் பற்றிய விடயத்தில் ஜே.ஆர் ஜெயவர்த்தன காலத்தில் இருந்ததைவிடவும் கூடுதலான அதிகாரங்களை வழங்கி சர்வ வல்லமை வாய்ந்த சர்வாதிகாரியாக கோட்டாபய ராஜபக்சவை மாற்றியிருக்கிறார்கள். இது ஒருவகையில் இன்று சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு தேவையாகவும் உள்ளது.

கொரோனாவுக்கு பின்னான சர்வதேச அரசியல் ஒழுங்கிலும் சரி , புவிசார் அரசியலும் சரி சடுதியான மாற்றங்கள் அடுத்து வரும் ஆண்டில் நிகழ்வதற்கான சூழ்நிலைகள் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பன்நாட்டு ஆளுகை முரண்பாடுகள் முற்றி கொதிநிலை அடைந்திருக்கிறது.

எனவே இந்து சமுத்திரத்தின் கேந்திர பகுதியில் உள்ள இலங்கையை பாதுகாக்கவும் தம்மை நோக்கி வீச இருக்கும் ஊழிப் பெருங்காற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் அதன் பெயரால் தமிழர்களை அடக்கி ஒடுக்கவும் , இந்தியாவை கையாளுவதற்கும் மட்டற்ற அதிகாரம் படைத்த ஒரு தலைவன் தேவைப்படுகிறான். எனவேதான் சிங்களதேசம் அதற்கேற்ப இவ்வாறு தன்னைத் தயார் ஆகிறது.

கடந்த காலத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்து கொண்டுதான் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை கட்டமைப்பு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று தமிழர்களின் கிளர்ச்சிகளையும், போராட்டங்களையும் ஒடுக்கவும் வெளிநாட்டு தலையீடுகளை குறிப்பாக இந்தியாவின் உள்நுழைவை தடுக்கவும் ஒரு பலமான தலைவன் தேவை என பௌத்த மகாசங்கங்கமும், பேரினவாத சிந்தனையாளர் குழாமும், ராஜபக்ச குடும்ப அனுதாபிகளும் கருதுகின்றனர்.

இதனடிப்படையில் இந்த 20ஆம் திருத்தச் சட்டமானது இந்திய, ஈழத் தமிழர் எதிர்ப்பில் மையங் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மட்டற்ற அதிகாரத்தை சிங்கள மக்கள் மீது பயன்படுத்துவார்களா? இல்லையா? என்பதற்கு அப்பால் நிச்சயமாக தமிழர்கள் மீது கட்டாயம் பிரயோகிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இன்று இருக்கின்ற அரசியல் கொதிநிலையில் இலங்கைத்தீவு அடுத்து வரும் ஆண்டுகளில் அமைதியாக இருக்கும் என்று அரசறிவியல் அறிந்த யாரும் கற்பனைகூடப் பண்ணமாட்டார்.

எனவே எதிர்வரும் காலங்களில் ஈழத் தமிழர் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டங்கள் ஆகும். ஈழத் தமிழர்களின் கழுத்தை நோக்கி கூரிய கொடுவாள் ஒன்று இதன் மூலம் தீட்டப்படுகிறது. இந்த கூரிய கொடுவாள் ஈழத் தமிழர்களின் கழுத்தை பதம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இலங்கைத் தீவையும் இரண்டாக வெட்டிப் பிளப்பதும் தவிர்க்க முடியாத வரலாற்றுப் போக்காய் அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -