மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நேற்று சபையில் மேலதிக எட்டு வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச சபையின் வரவு செலவு திட்டத்தினை அங்கீகரிப்பதற்கான அமர்வு நேற்று 26/10/2020 தவிசாளர் யோ. ரஜனி தலமையில் 2 நிமிட மௌன இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது தவிசாளரினால் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பான உரை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அதனை குறித்த வரவு செலவு திட்டத்தினை ஏற்றுக்கொள்வதாக பிரதேச சபை உறுப்பினர் சிதம்பரபிள்ளை இராமகிருஷ்னன் முன்மொழிய அதனை உறுப்பினர் தவராசா தயாழினி வழிமொழிந்துள்ளார்.
இதன்போது குறித்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக சில உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் சு.விக்கினேஸ்வரன் , சுயேட்சைக்குழு உறுப்பினர் நா.இந்திரநாதன் ஆகியோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்உறுப்பினரான ம.சுகிகரன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் கோ.ராசு நான்கு பேர் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
17 பேர் சபையில் உறுப்பினராக உள்ளபோதிலும் இன்று 16 பேரே சபை அமர்வுக்கு வருகை தந்திருந்தனர். வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 12 உறுப்பினர்களும், 4 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
சபை அமர்வானது மேலதிக எட்டு பெருபான்மை வாக்குகளால் வரவு செலவுத்திட்டம் நிறைவேறியுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச சபையின் அமர்வு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையிலும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சுகிகரன் வாக்களித்திருந்தார்.
நேற்றைய சபை அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமும் பார்வையாளராக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.