முதல் படத்தில் இருந்து தனது உதவியாளராக இருப்பவருக்கு பிரபல நடிகை, கார் பரிசளித்து இருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
பிரபல இந்தி ஹீரோயின் ஜாக்குலின் பெர்னாண்டஸ். பாலிவுட்டின் ஸ்மைல் குயின் என்கிறார்கள் இவரை.
இலங்கையை சேர்ந்த இவர், இந்திப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அமிதாப் பச்சன், சஞ்சய் தத், ரிதேஷ் தேஷ்முக் நடித்த அலாதீன் என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ஜாக்குலின் பெர்ணான்டஸ். தொடர்ந்து, இம்ரான் ஹாஸ்மியின் மர்டர் 2, அக்ஷய் குமாருடன் ஹவுஸ்புல் 2, டிஷூம், ஜூத்வா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடியிருக்கிறார்.
பிரபாஸ், ஷ்ரத்தா தாஸ் நடிப்பில் உருவான சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். நெட்பிளிக்ஸ் படங்களான டிரைவ், மிசஸ் சீரியல் கில்லர் படங்களிலும் நடித்திருந்த ஜாக்குலின், அடுத்து, அட்டாக் என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் நேரத்தில் சல்மான் கானின் பண்ணை வீட்டில் அவர் வசித்து வந்தார்.
சமீபத்தில் இவருடைய, இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் 46 மில்லியனை தாண்டியது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி சொன்ன நடிகை ஜாக்குலின், உடலை பூக்களால் மறைத்து, டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த போட்டோஸ் வைரலானது.
இந்நிலையில், விஜயதசமியை முன்னிட்டு, தனது உதவியாளருக்கு அவர் ஸ்வான்கி காரை நேற்று பரிசளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், கார் முன்பு பூஜை செய்யப்படுகிறது. தேங்காய் உடைக்கப்படுகிறது.பின்னர், அவர் சாவியை வழங்குகிறார்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கைதட்டுகின்றனர். மும்பை டிராபிக் போலீஸ் டிரெஸ்சில் ஜாக்குலின் படப்பிடிப்பில் இருந்து அப்படியே வந்து புதிய காரை கொடுத்துள்ளார். நடிகை ஜாக்குலினுடைய முதல் படத்தில் இருந்து அவருடன் இருக்கும் உதவியாளருக்கு இந்த காரை அவர் வழங்கி இருக்கிறார்
இதையடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில், இதுக்கெல்லாம், நல்ல மனசு வேணுங்க என்று அவரை பாராட்டி உள்ளனர். நடிகை ஜாக்குலின். உதவியாளருக்கு கார் வழங்குவது ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே தனது மேக்கப் மேனுக்கு அவர் கார் வழங்கி இருந்தார்.