நாடாளுமன்றத்தில் அண்மையில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாளைய தினம் கையெழுத்திடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் கையெழுத்திட்டதும் சட்டமூலமாக நிறைவேற்றப்படவுள்ளது.
கடந்த மாதம் 22ஆம் திகதி நீதியமைச்சர் அலி சப்ரியினால் 20ஆவது திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இந்த திருத்தச் சட்ட யோசனைக்கு எதிராக 39 மனுக்கள் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையின் நிறைவில் உச்சநீதிமன்றம் வியாக்கியானம் வழங்கிய பின் திருத்தப்பட வேண்டிய யோசனைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு இரண்டுநாள் முழுவிவாதமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இம்மாதம் 22ஆம் திகதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 156 வாக்குகள் ஆதரவாகவும் 65 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் 20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனையை நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமூலங்கள் சபாநாயகரின் கையெழுத்தின் பின்னரே அமுலுக்குவரும் சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.