ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் தங்கள் நாட்டினர், பாஸ்போர்ட்களில் அங்கிருக்கும் முகவரியை இணைத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக இங்கு இந்தியர்கள் அதிகம் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், அந்நாட்டில் வசிக்கும் முகவரியை பாஸ்போர்ட்களில் பதிவு செய்து கொள்ளலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, துபாயில் உள்ள இந்திய துாதரக அதிகாரி கூறுகையில், ஐக்கிய அரபு நாடுகளில் பணியாற்றும் பலருக்கும், நம் நாட்டில் நிரந்தர மற்றும் செல்லத்தக்க முகவரி இல்லை என, தெரிகிறது. இதனால் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் முகவரியை, அவர்களின் பாஸ்போர்ட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.
தற்போது பயன்பாட்டில் உள்ள பாஸ்போர்ட்டில், வெளிநாட்டு முகவரியை சேர்க்க இயலாது. அதை மாற்றம் செய்து புதிதாக பெறும்போது, முகவரியை இணைத்துக் கொள்ளலாம்.
இதற்கு, அவர்கள் வசிக்கும் வாடகை, சொந்த வீடு தொடர்பான ஆவணங்கள் அல்லது உரிய இருப்பிடச்சான்று தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.