Home Srilanka கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை மீட்டுத் தர வேண்டும் என சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில் அவர்கள் தெரிவிக்கையில், “உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக பல நாடுகளும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலைமையை நாம் அனைவரும் அவதானித்து வருகிறோம்.

நம் நாட்டில் கொரோனா பரவல் தற்போது தீவிரமடைந்துள்ளதுடன், மரண வீதமும் அதிகரித்து வருகின்றது இந்தக் கடிதம் எழுதப்படும் வரை 19 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கும் நிலை நம் நாட்டில் உருவாகியுள்ளது. இதுவரை மரணித்தவர்கள் அனைவரும் எரிக்கப்பட்டுள்ளார்கள்.

உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்றில் உயிரிழப்போரை அடக்கவும் எரிக்கவும் அனுமதித்துள்ளன அவரவர் மத அனுஷ்டானங்களின் அடிப்படையில் செய்து கொள்வதற்கான உரிமையை வழங்கியுள்ளன.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் என அனைத்தும் கொரோனாவில் உயிரிழந்தவர்களை அடக்க அனுமதி வழங்கியுள்ளன.

நம் அண்டை நாடான இந்தியாவில் கூட அடக்கம் செய்வதற்கு பூரண அனுமதி வழங்கப்பட்டுள்ளதை எம்மைவிட தெளிவாக நீங்கள் அறிவீர்கள்.

ஆனால், நம் நாட்டில் அடக்கம் செய்வதற்கு உரிமை மறுக்கப்பட்டு, கொரோனாவில் உயிரிழப்பவர்கள் எரிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இந்த நடைமுறை இஸ்லாமியர்களாகிய எம்மை மனதளவில் மிக ஆழமாக பாதித்துள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.

இலங்கையில் தற்போது 20வது அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியாக தாங்கள் மாறியுள்ள நிலையில், இஸ்லாமிய சமூகத்தின் மத உரிமையையும் முஸ்லிம்களின் மனநிலையையும் முழுமையாக கவனத்தில் கொண்டு ஜனாதிபதிக்குள்ள தனித்த நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி மரணித்தவர்களை அடக்குவதற்கான உரிமையை மீட்டுத் தர வேண்டும் என உங்களை அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.

தம் உறவுகள் கொரோனாவில் மரணிக்கின்ற நிலையில் அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவது என்பது எம் சமூகத்தை மனதளவில் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

உங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உரிமையை மீட்டுத் தரும் போது இந்த சமூகம் உங்களுக்கு நன்றியுள்ளதாக இருக்கும் என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்” என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.Jama th 2 02 1 1

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -