நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையின் அடிப்படையில், எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான செயற்குழுவின் இன்றைய கூட்டத்தின்போது இது குறித்து ஆராயப்படவுள்ளதாக, நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஷான் விஜேதுங்க எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த கலந்துரையாடலில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் கட்சித் தலைவர்கள் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் வாரத்தின் நான்கு நாட்களும் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, திருத்தங்களை மேற்பார்வை செய்வதற்காக அனுப்பப்பட்டிருந்த அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இன்றையதினம் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்படவுள்ளது.
இதனை அடுத்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றையதினம் அதனை கையெழுத்திட்டு உறுதிப்படுத்தவுள்ளதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் கடந்த 22ஆம் திகதி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.