இலங்கையின் பிரபல ஆங்கில வாராந்த பத்திரிகையின் பாராளுமன்ற செய்தியாளர் ஒருவருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த பத்திரிகை நிறுவனம் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய உடனடியாக நடவடிக்கைகளை கையாண்டுள்ளதுடன், குறித்த ஊடகவியலாளர் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர், 20 ஆம் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட தினம் செய்தி சேகரிப்பிற்காக பாராளுமன்றத்துக்கு சென்றுள்ள நிலையில் அன்றைய தினம் பாராளுமன்றதிற்கு வருகை தந்த ஊடகவியலாளர்களையும் கவனத்தில் கொள்ளுமாறு பாராளுமன்ற அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த ஊடகவியலாளர் தனக்கான இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையை செய்யுமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ள போதிலும் அதற்கான நடவடிக்கைகளை இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த ஊடகவியலாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவருடன் நெருக்கமான ஊடகவியலாளர்கள், ஒன்றாக பயணித்த ஏனைய ஊடகவியலாளர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் இன்றைய தினம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.