பிரபல பாலிவுட் நடிகை அமிஷா படேல் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், அவருக்கு கொலை மற்றும் கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக புகார் அளித்துள்ளார்.
பீகாரில் சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளன. லோக் ஜனசக்தி கட்சிக்காக பிரச்சாரத்திற்கு போன அமிஷா பட்டேல், தற்போது அந்த கட்சி வேட்பாளர் குறித்தே புகார் கொடுத்திருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
பாலிவுட் நடிகையான அமிஷா படேல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பீகார் தேர்தல்
பீகாரில் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன் முதல் கட்ட தேர்தல் இன்று காலை நடைபெற்றது. பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சி செய்து வரும் நிலையில், அடுத்த முதல்வர் யார் என்கிற தேர்தல் அரசியல் களத்தில் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், பாலிவுட் நடிகையின் பரபரப்பு குற்றச்சாட்டு பீகார் தேர்தலில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கொலை மிரட்டல்
பிரபல பாலிவுட் நடிகை அமிஷா படேல், பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தி வேட்பாளர் பிரகாஷ் சந்திராவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தாவுத் நகரில் ரோட் ஷோ சென்றிருந்தார். ஆனால், நடிகை அமிஷா படேலிடம் பிரகாஷ் சந்திரா தவறான முறையில் நடந்து கொண்டதாகவும், இது தொடர்பாக வெளியே பேசினால், தன்னை காலி செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார் என புகார் அளித்துள்ளார்.
பாலியல் புகார்
கடந்த ஒரு வாரமாக பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன் என்றும், கொலை செய்து விடுவேன் என்றும் அவர் தன்னை மிரட்டுகிறார் என்றும், தனக்கும் தனது குழுவினருக்கும் இதனால், உயிர் பாதுகாப்பு இல்லை ரொம்பவே பயமா இருக்கு என நடிகை அமிஷா படேல் கொடுத்துள்ள புகார் பீகார் அரசியல் களத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
பொய் சொல்கிறார்
நடிகை அமிஷா படேல் சொல்வதில் எந்த ஒரு உண்மையும் இல்லை. அவர் கூறுவது முற்றிலும் பொய், தான் அப்படி அவரிடம் தவறாக நடக்கவும் இல்லை. அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கவில்லை என லோக் ஜனசக்தி வேட்பாளர் பிரகாஷ் சந்திரா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
எதிர்கட்சிக்காக வேலை செய்றாங்க
மக்கள் சக்தியால் நான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். என்னுடைய உறவினர் ஒருவர் தான் அந்த நடிகையை ரோட் ஷோவுக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், அவரோ எனது எதிர்க்கட்சியான ஜன அதிகார கட்சி தலைவர் பப்பு யாதவிடம் பணம் பெற்றுக் கொண்டு எனக்கு எதிராக இந்த வேலையை செய்கிறார் என அமிஷா மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
விஜய் பட நடிகை
2003ம் ஆண்டு இயக்குநர் கே.பி. ஜகன் இயக்கத்தில் விஜய், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் இரண்டாவது நாயகியாக அமிஷா படேல் நடித்து இருந்தார். பாலிவுட் நடிகையான இவர், அமீர்கானின் மங்கள் பாண்டே, சல்மான் கானின் ஹே ஹாய் ஜல்வா உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.