ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் ஆரம்பப்புள்ளி தொடர்பான தகவல்கள் உரிய வகையில் – விரைவில் வெளியிடப்படும் என இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்த புலனாய்வு விசாரணைகள் தொடர்வதாக தெரிவித்துள்ள அவர், விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.
அண்மையில், துருக்கியில் இருந்து ஸ்ரீலங்கா வந்த உக்ரைன் விமான ஊழியர்களாலேயே கொரோனா வைரஸ் மீண்டும் பரவியது எனவும், இதுவே 2ஆம் அலையின் ஆரம்பப்புள்ளி எனவும் சிங்கள தேசிய நாளிதழொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
இதன் உண்மை தன்மை எவ்வாறு என்ற சந்தேகம் பல தரப்பிலிருந்தும் எழுந்துள்ள நிலையில், கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவரான இவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் ஆரம்பப்புள்ளி தொடர்பான புலனாய்வு விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை. அது தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போதுதான் துருக்கியில் இருந்து வந்தவர்கள் தங்கிய ஹோட்டல் தொடர்பான தகவல் கிடைத்தது.
இதன் ஊடாகவே வைரஸ் பரவியிருக்கும் என 80 வீதம் நம்புகின்றோம். மினுவாங்கொடவுக்கும், இதற்கும் தொடர்பு இருக்கின்றது. ஆனால் அதுவே இறுதி முடிவு அல்ல.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஊடாகவே தொற்று பரவியிருக்கும் என நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். வான்வழி மற்றும் கடல்வழி என இரண்டிலும் வெளிநாட்டு தொடர்பு இருக்கின்றது. ஆகவே, நாலா புறங்களிலும் புலன் விசாரணைகள் தொடர்கின்றன.
விரைவில் ஆரம்பப்புள்ளி தொடர்பான தகவல்கள் உரிய வகையில் வெளியிடப்படும். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் ஆரம்பப்புள்ளி தொடர்பான அறிக்கை இன்னும் கையளிக்கப்படவில்லை. விசாரணைகள் நிறைவடைந்திருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் அந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம் என்றார்.