திருகோணமலை- உவர்மலை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட 40க்கும் மேற்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
இன்று (31) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேல் மாகாணத்திலிருந்து திருகோணமலைக்கு திருமண விருந்துபசாரம் ஒன்றிற்கு வருகை தந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு பொலிசாருடன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சென்றிருந்தனர்.
இந்நிலையில் இந்நிகழ்விற்கு மேல் மாகாணத்திலிருந்து வருகைதந்த சிலருடன் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் சிலர் விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து தனிமைப்படுத்தும் சட்டத்தின்கீழ் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட 40க்கும் மேற்பட்ட நபர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி உள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.