உலக மக்கள் இன்புற்று வாழ்ந்திடவும் மக்களைப் பீடித்துள்ள நோய்ப்பிணி, பசிப்பிணி தீர்ந்திடவும் ஆன்மீகக்குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் கடந்த 16 வருடங்களுக்கும் மேலாக உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் ஆன்மீகம் சார்ந்த வாழ்கையின் தேவை பற்றி மிகவும் தெளிவாக பல உபதேசங்களை அருளிக் கொண்டிருக்கிறார் அவ்வாறான ஆன்மீக உபதேசங்களை தொடர்ந்தும் தொகுத்து வழங்கி வருகிறோம் அந்த வகையில் “இயற்கையும் அதனைச் சார்ந்து வாழும் மனிதர்களும்” எனும் விடயம் பற்றியதாக இத் தொகுப்பு அமைகிறது.
நிலத்தினை போன்றது மனிதர்களது மனம் அதுவே மனிதனின் மையப்பகுதியாக இருந்து மனித உடலினை இயக்குகிறது; மனித மனங்களில் ஏற்படும் மாற்றம் அவர்கள் உடலிலும் தாக்கத்தினை உண்டு பண்ணுகிறது இவ்வாறு மனிதர்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் காரணிகள் அவர்கள் வாழும் சூழல் அந்த சமூகம் என்று அனைத்திலுமே பாதிப்பினை உண்டுபண்ணுகிறது.
ஏனெனில் இயற்கையோடு ஒன்றியே மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள் இயற்கைக்கும் மனிதனுக்கும் பல தொடர்புகள் காணப்படுகின்றன அதனால் மனிதர்கள் எந்த செயலை செய்தாலும் அந்த செயலின் தாக்கம் இயற்கையிலும் மாற்றத்தினை உண்டாக்கும் ஏனெனில் மனிதர்கள் இயற்கையினை விட்டு தனித்து அவற்றின் உதவியின்றி வாழவில்லைதானே காற்றினை சுவாசிக்கிறார்கள், குடிப்பதற்கு நீரினைப் பெறுகிறார்கள், உணவினை உற்பத்தி செய்ய நிலத்தினையும் அதன் மூலம் உணவினையும் பெறுகிறார்கள் அதே போன்றுதான் மனித உடலும் நிலத்தால், நீரால், நெருப்பால் (உஷ்ணம்), ஆகாயத்தால், காற்றால் என ஐம்பூத தத்துவத்தினையும் தன்னகத்தே கொண்டுள்ளது இவற்றைப் போலவே உற்றார் உறவினர்களுடைய தொடர்பும் உள்ளது உதாரணத்திற்கு ஒருவரைப்பார்த்து சிலர் கூறுவார்கள் “அவர் பாட்டனைப்போலவே கண்களும் மூக்கும் இவருக்கும் உள்ளது” என்று ஆக ஏதோ ஒரு வகையில் உறவு எனும் பந்தத்தின் தொடர்பு அங்கு இனங்காணப்படுகிறதல்லவா.
இப்படி உறவுகளின் தொடர்பின் மூலம் அவர்கள் பரம்பரை குணங்களும் தொடருமல்லவா இதனை கர்மா என்பார்கள் அது செயல் என்றும் பொருள்படும் அந்த செயல் நல்லதாக இருக்கலாம் அல்லது தீயதாக இருக்கலாம் அதற்காகத்தான் மூதாதையர்களது கர்மாக்கள் நம்மை தொடராத வண்ணம் பிதிர்கடன்களை செய்யும் முறையினை கொண்டு வந்தார்கள்.
மரபணுவானது அவர்கள் பரம்பரையிலும் தொடர்கிறது
அவர்கள் இவ் உலகினை விட்டு சென்றிருந்தாலும் அவர்களது மரபணுவானது அவர்கள் பரம்பரையிலும் தொடர்கிறது என்றால் அவர்கள் செய்த கருமாக்களும் அவர்களது வம்சத்தினை தொடருமல்லவா; நான் நன்றாக வாழ்கிறேன் என்று பலர் கூறினாலும் மூதாதையருக்கான பிதிர் கடன்களை செய்யாதவிடத்து அவர்கள் மனம் நோகும் போது அந்த நோவானது பிதிர் தோஷம் ஆகி பின்னாளில் துன்பத்தை தருகிறது அதுவே அவர்களுக்கான பிதிர் கடன்களை நிறைவேற்றும் போது அவர்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சி அந்த பரம்பரைக்கும் உண்டாகும்.
இது எவ்வாறெனில் உதாரணத்திற்கு குடும்பஸ்தர் ஒருவர் தான் அதிகமாக பற்று வைத்திருக்கும் தன் குழந்தை பாலின்றி பசியால் அழும் போது அவரால் சலனமின்றி தன் கடமைகளை ஆற்ற இயலாமல் போகிறதுதானே அங்கே அவரது கடமைக்கு தடையேற்படுகிறது இங்கே அந்த சலனத்தால் விளைந்த தடையானது தோஷமாக வெளிப்பட்டு அவர்கள் கடமைகள் பாதிக்கப்படுவதனைப் போல மூதாதையர்களின் துன்பங்கள் தோஷமாக இருந்து அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கின்றது.
ஏனெனில் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்காமல் செல்வதால் உண்டாகும் மனக் குழப்பம் அதனால் உண்டாகும் தடை கண்களுக்கு புலப்படும் தோஷமாகிறது இதுவே மூதாதையர்களின் துன்பங்கள் கண்களுக்கு புலப்படாத சூட்சும நிகழ்வாகிறது அதனை நிவர்த்திக்காமல் விடுவதனால் குடும்பத்தில் திருமண நிகழ்வுகள் தடைப்பட்டு போதல் போன்ற நற் காரியங்கள் எதுவும் நடக்கவில்லை அனைத்திலும் தடையேற்படுகிறது என்றால் அதற்கு கண்ணுக்கு தெரியாத பிதிர்தோஷமே காரணமாகிறது.
எனவேதான் அனைத்து தோஷங்களிலும் பார்க்க பெரிய தோஷமாக பிதிர் தோஷம் காணப்படுகிறது கடன் பட்ட ஒருவரால் தன் கடன்களை திருப்பி செலுத்த இயலாமல் போகும் போது மன உறுத்தலும் உழைச்சலும் ஏற்படுமல்லவா அதுவே தோஷம் ஆகிறது இந்த தோஷத்தால் கடமைகளில் தடையுண்டாகிறது.
இவ்வாறு பிதிர் கடனைப் போல மனிதர்கள் தாம் அறியாமல் செய்த பல பாவங்கள் தோஷமாக மாறி அவர்களது கடமைகளுக்கு பல தடைகளை உண்டாக்குகின்றன அவற்றை நிவர்த்திப்பதற்கு தானமும் தர்மமும் தவமும் செய்ய வேண்டும்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் பல ஏழைக் குடும்பங்கள் தம் வாழ்வாதாரத்தினை இழந்து தவிக்கிறார்கள் அப்பேற்பட்டவர்களை செல்வம் படைத்த பெரும் தனவந்தர்கள் அணுகி அவர்களுக்கு உணவளித்து தர்மத்தினை தான தர்மத்தினை செய்தால் அந்த தோஷங்கள் நீங்கப் பெறும் அவ்வாறு வழங்குமளவிற்கு வசதியற்ற மக்கள் வீட்டிலே இருந்து தியானத்தினை மேற் கொண்டு வந்தால் அவர்களது தோஷமும் நீங்கி மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று வழியுரைக்கிறார் சுவாமிகள் இவ்வாறுதான் காலத்திற்கு காலம் மகான்கள் அவதரித்து மக்கள் துன்பம் நீங்கி இன்பமாக வாழ வழியுரைத்துச் சென்றார்கள்.
“உன்னைத் திருத்திக் கொள் உலகம் தானாக திருந்தி விடும்”
எனவே மனிதர்கள் நல்லனவற்றை எண்ணிக் கொண்டு கருமமாற்றும் போது அந்த எண்ணத்தின் வழியே அந்த கருமம் முழுமை பெறும் அங்கே நல்ல பலன்களை அது தருவிக்கும் அப்பலன்கள் மனிதர்களுக்கு மகிழ்வினை உண்டாக்குவது போல இயற்கையினையும் இயற்கை சார்ந்து வாழும் அனைத்திற்கும் மகிழ்ச்சியினையும், இன்பத்தினையும் நல்கும் அல்லவா அதுவே கலக்கமுடனும் மன குழப்பத்துடனும் கடமையாற்றும் போது நற்பலன்கள் கிட்டுமா? துன்பம் அல்லவோ கிட்டும்.
ஆகவே மனிதர்கள் தமது சுய அறிவினை கொண்டு வாழ்வினை நல்ல முறையில் முன்னெடுத்து சென்றால்தான் அவர்கள் சார்ந்து வாழும் இயற்கையும் அவர்களை சார்ந்து வாழ்பவர்களும் வளமாக வாழ்வார்கள் ஏனெனில் மனிதர்கள் பல வழிகளிலும் இயற்கையோடும் சமூகத்தோடும் தொடர்புடையவர்களாக காணப்படுகின்றனர் அதையேதான்
“உன்னைத் திருத்திக் கொள் உலகம் தானாக திருந்தி விடும்” என்று கூறி வைத்துள்ளார்கள்.
எங்கு பார்த்தாலும் அதர்மம் தலை விரித்தாடுகிறது மனிதனை மனிதன் பார்த்து பயந்து நடுங்குகிறான்….
இவ்வாறு ஒவ்வொருவரும் தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் போது உலகிற்கு தீங்கு விளைவிக்கவல்ல கொடிய தொற்று நோய்களோ அல்லது இயற்கை சீற்றங்களோ பசி பஞ்சம் பட்டினி போன்ற பிணிகளோ மனிதர்களை எவ்வாறு தாக்க இயலும்! அவை ஏற்படவும் அல்லது உருவாகவும் வாய்ப்பினையும் சந்தர்ப்பத்தினையும் ஏற்படுத்திக் கொடுக்கும் மனிதர்கள் தம்மைத்தானே திருத்திக் கொண்டால் துன்பம் எனும் சொல்லுக்கு இங்கே இடமேது ஏனெனில் தீங்கானது மனிதனின் மனத்தின் மூலமே உருவாகலாமே தவிர அது உருவாகுவற்கான வேறு எந்த விதமான காரணிகளும், சந்தர்ப்பங்களும் கிடையவே கிடையாது.
எனவே மனிதர்களின் மனதில் நச்சு எண்ணங்கள் அகற்றப்படும் போது உலகம் நச்சுத்தன்மை அற்றதாக பொலிவு பெற்று விடும் ஆனால் மனிதர்கள் நச்சு எண்ணங்களை கொண்டவர்களாக வலம் வருகிறார்கள் என்பதனை உணர்த்த சுவாமிகளின் குருநாதர் பகவான் முருகேசு சுவாமிகள் கூறிய விடயமொன்றினை இங்கே பதிகிறோம் ” எங்கு பார்த்தாலும் அதர்மம் தலை விரித்தாடுகிறது மனிதனை மனிதன் பார்த்து பயந்து நடுங்குகிறான் அவன் உபயோகப்படுத்தும் பொருட்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு விலங்குகளின் உருவத்தினை பொறித்து அடையாளப்படுத்தியுள்ளான்.
உதாரணத்திற்கு முதலைமார்க் மண்வெட்டி, மான் மார்க் குடை, சங்கு மார்க் சாறன் என அனைத்திற்கும் விலங்குகளின் உருவத்தினை பொறித்து வைத்து விட்டு தனது அடையாளமாக மண்டையோட்டினையும் எலும்புக் கூட்டினையும் அபாயக் குறியீடாகவும் நஞ்சு போத்தல்களிலும் பதித்துள்ளான் ஆக மனிதன் மனித உருவில் நடமாடும் கடவுளாக வாழ வேண்டியவன் இன்று மனித உருவில் நடமாடும் பிராணிகளாக வாழுகிறான் எனக் கூறியுள்ளார்.
வியாதியினை குணப்படுத்தும் மருந்து…
எனவே இவ்வுலகில் ஒரு மனிதன் விஷ எண்ணம் விஷப் புத்தியுடன் வாழ்வானேயாகில் அவனால் ஒட்டு மொத்த சமூகமுமே பாதிப்பிற்குள்ளாகும் இதனை “ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்” போதும் என்றும் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்றும் கூறுவார்கள் இதுவும் தொற்று நோய் போன்ற விடயம்தான் இது கண்ணுக்கு புலப்படாத சூட்சும விடயம் இதனை உள் முகமாக சென்று நம்மை நாமே சுய ஆராய்ச்சி செய்து பார்த்தால் மேலே கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் புலனாகும்.
இவ் உண்மைகளை போதித்து மக்களை தெளிவிக்கவே மகான்கள் இவ்வுலகில் அவதரித்தார்கள் இயேசுநாதர் வந்தார் அவரை பின்பற்றி பல இலட்சம் மக்கள் திருந்தினார்கள் முகம்மது நபிகள் வந்தார் அவரை பின்பற்றி பல இலட்சம் மக்கள் திருந்தினார்கள் அதே போன்று புத்த பகவான் வந்தார் அவரைப் பின்பற்றி பல இலட்சம் மக்கள் திருந்தினார்கள் இராமபிரான், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வந்தார்கள் பல கோடி மக்கள் திருந்தினார்கள் இவ்வாறு பல மகான்கள் காலத்திற்கு காலம் இவ்வுலகிற்கு வரும் போதெல்லாம் பல கோடி மக்கள் அவர்களை பின்பற்றி நற்கதியடைந்தார்கள்தானே இதுவும் ஒரு தொற்றுதான் ஆனால் வியாதி அல்ல வியாதியினை குணப்படுத்தும் மருந்து அவ்வளவே.
எனவேதான் எமக்கும் நாம் வாழும் உலகிற்கும் பயனுண்டாகும் காரியங்களை செய்யவேண்டும் மனிதர்கள் அவரவர் செய்த வினைகளுக்கேற்ப அவர்களுக்கு துன்பம் விளைகிறது இவை அனைத்தும் மனிதன் தன் மனதிலே விதைத்துள்ள தீய எண்ணங்களின் பிரவாகத்தால் அவர்களது உயிர்ச் சக்தி குன்றியுள்ளமையே துன்பத்திற்கான மூல காரணியாக காணப்படுகிறது அதன் காரணமாகத்தான் தற்போது ஒருவரைத் தொடர்ந்து ஒருவராக சமுதாயத்திற்குள் பரம்பலடைந்து தற்போது உலகெங்குமாக பரவி நிற்கிறது தொற்று நோய் எனும் பயங்கர உயிர்க் கொல்லி நோய் இது தனி மனிதனில் இருந்து பரவி சமூகத்திற்குள் ஊடுருவி விட்டது.
உதாரணத்திற்கு மனிதர்கள் ஆரோக்கியமான சத்து நிறைந்த உணவினை உட் கொள்ள வேண்டுமானால் அங்கே பலரின் ஆரோக்கியம் பேணப்படல் அவசியமாகிறது உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமெனில் அவ்வுணவினை தரும் செடியானது ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டும் அந்த செடி ஆரோக்கியமாக இருப்பதற்கு அந்த செடியினை உண்டாக்குபவரின் மனமும் அது பயிராகிய நிலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் இவ்வாறு நிலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் நிலத்தில் வாழும் பூச்சி புழுக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பூச்சி புழுக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் நீர் வேண்டும் அந்த நீர் ஆரோக்கியமாக தடையின்றி வானில் இருந்து கிடைக்க வேண்டுமெனில் நிலத்தில் இயற்கை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் அதாவது மரம் செடி கொடிகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் இவ்வாறு ஆரோக்கியம் எனும் விடயத்தில் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளன .
எனவே சத்துள்ள உணவினை மனிதன் உண்ண வேண்டுமெனில் அது தொடர்புள்ள அனைத்தும் ஆரோக்கியமாக அமைந்தாலே தவிர அவர்கள் உண்ணும் உணவு மூலம் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான உயிர்ச்சத்து கிட்டாது எனவே சத்தினை தரவல்ல இயற்கையினை அழித்து விட்டு சத்தில்லை சத்தில்லை என்பதால் ஏது பயன்.
மன நிலைகளை பொறுத்தே செயல்களின் பலன்களும் உண்டாகிறது
ஐந்து பேரிடம் ஒரே விதமான கறியினை சமைக்கச் சொல்லி ஒரே விதமான ஒரே அளவான பொருட்கள் வழங்கப்படுகிறது ஆனால் அவர்களது கறியின் சுவைகளில் வித்தியாசம் தெரியுமல்லவா அதே போன்றுதான் ஐந்து பேரிடம் விவசாயத்திற்கென ஒரே பகுதியில் ஒரே அளவான வயலை பங்கிட்டு கொடுத்து ஒரே இன விதைகளை வழங்கி அதற்கான உர வகைகள் போன்றவற்றை சம அளவில் பகிர்ந்து கொடுத்தும் விளைச்சலின் போது ஆளாளுக்கு விளைச்சலின் விகிதாசாரம் கூடிக் குறைந்து காணப்படுமல்லவா! இது அவர்களின் மன நிலைகளை பொறுத்தே செயல்களின் பலன்களும் உண்டாகிறது என்பதனை காட்டுகிறது.
அன்று வாழ்ந்த மனிதர்கள் இயற்கையினை போற்றி வணங்கினார்கள் அதனை பாதுகாத்தார்கள் ஏனெனில் தான் சத்துள்ள ஆரோக்கியமான உணவினை உட்கொண்டால் மாத்திரமே உயிர்ச்சக்தி மேலோங்கும் அதனால் உலகில் எந்த பாதிப்புமின்றி வாழலாம் எனும் சூட்சுமத்தினை உணர்ந்த முன்னோர்கள் இயற்கையினை பாதுகாத்தார்கள் அதனால் இயற்கையும் அவர்களை பாதுகாக்க நல்ல ஆரோக்கியமான உணவினை வழங்கியது மாசற்ற காற்றினை வழங்கியது சுத்தமான நீரினை வழங்கியது இவ்வாறு மனிதன் சுகமாக வாழ எவையெவையெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் அவர்களுக்கு வழங்கி அவர்களை பாதுகாத்தது.
“தனி மனிதனொருவன் தவறிழைக்கும் போது அது முழு உலகினையுமே பாதிக்க செய்து விடும் அவ்வாறு உலகம் பாதிப்பிற்குள்ளாகினால் அது அவனையும் பாதிக்கும் உலகம் நன்றாக இருந்தால் அவனும் நன்றாக வாழ்வான்” ஆகவே இயற்கையினை பாதுகாத்தால் இயற்கையும் நம் அனைவரையும் பாதுகாக்கும் அல்லவா இங்கே இயற்கைக்கு ஊறு விளைவிப்பது மிருகங்களா? பறவைகளா? மரஞ்செடி கொடிகளா? என்பதனை ஆராய்ந்து பாருங்கள் மனிதன்தானே தன் சுயநலத்திற்காக இயற்கையினை நாசம் செய்கிறான் இப்படி அனைத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டு உலகிற்கே தீங்கினை உண்டு பண்ணிவிட்டு அதனால் அவனும் அந்த துன்பத்தினை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
தர்மம் செய்ய வேண்டும்..
அதற்காவேதான் மன நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு தர்மம் செய்ய வேண்டும் ஆனால் மனிதர்கள் தர்மம் செய்யக்கூடிய மன நிலையில் தற்போது இல்லை அவர்கள் தர்மத்தினை விட்டு வெளியே வந்து விட்டார்கள் ஏனெனில் அவர்கள் மனமானது பலவீனமாகி விட்டது அதனால் பாவத்தின் பக்கம் மனதினை திருப்பி பெரும் பாவத்தினையும் அகம்பாவத்தினையும் சம்பாதித்து வைத்துள்ளார்கள் எனவே அவை ஆக்கச் செயலை தடுத்து அழிவுச் செயலை செய்திடவே தூண்டும்.
அது அளவுக்கதிகமான ஆசையினை உண்டாக்கி அளவுக்கதிகமான பொருட்களை வாங்க வைத்து பல அடுக்கு மாடி வீடுகளை கட்ட வைத்து மனதையும் உடலையும் பலவீனப்படுத்தி ஈற்றில் வைத்தியசாலையில் நோயாளியாக கிடத்தி விடும் எனவே தர்ம சிந்தனை வருவதற்கு தியானம் ஒன்றே மனிதர்களுக்கு சிறந்த வழி என்கிறார் சுவாமிகள்.
தியானம் ஒன்றே மனிதர்களுக்கு சிறந்த வழி…
தியானம் செய்து முதலில் உயிர் சக்தியினை அதிகரித்த பின்னர்தான் இயற்கையினை பாதுகாக்கும் எண்ணம் ஏனைய தர்ம சிந்தனைகளை கொண்டு வர இயலும் இவ்வாறு இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்கு தியானத்தின் மூலம் தன்னை தயார்ப்படுத்தும் போது மனிதன் தன் சுய தன்மையினை உணர ஆரம்பிப்பான் இயற்கைதான் தன்னுள் இருக்கும் ஆன்மா என்பதனை மெல்ல மெல்ல உணரும் தன்மை ஏற்படும் இங்கே இயற்கை எனப்படுவதனை மரஞ் செடி கொடி என அவற்றை உருவங்களாகவும் காட்சிகளாகவுமே மனிதர்கள் எண்ணுகின்றனர் உண்மையில் அவற்றினுள் உயிர் சக்தியாக வீற்றிருக்கும் ஆன்மாவே இயற்கை என அழைக்கப்படுகிறது இப்போது புரிகிறதல்லவா ஒரே ஆன்மாதான் வெவ்வேறு உருவங்களாக இருந்து வெவ்வேறு செயல்களை ஆற்றிக் கொண்டிருக்கின்றன என்று.
இப் பிரபஞ்சத்தினை படைத்து காத்து அழித்து அருளும் மகா சக்திதான் இயற்கை அதற்கு ஒரு போதும் அழிவு கிடையாது அது எப்போதும் எங்குமே பரந்து விரிந்து நிலைத்து நிற்கிறது இதற்கு மறு பெயர்களாக தர்மம், சத்தியம், பிரம்மம், ஓங்காரம், கடவுள் என்று பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்.
ஆக அந்த ஆன்மாவான சக்தியோடு தொடர்பு கொண்டால் மாத்திரமே நாம் இயற்கையோடு இணைந்து வாழலாம் ஆனால் ஆன்மாவான இயற்கையோடு தொடர்பு கொண்டு வாழும் அளவிற்கு மனிதர்கள் இல்லை இப்படியே மனிதர்கள் வாழ்வார்களேயானால் இன்னுமின்னும் பல இன்னல்களை மனிதர்கள் சந்தித்தே ஆக வேண்டியேற்படும் எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும் தற்போது யாராவது சந்தோசமாக இருக்கிறார்களா என்று கேட்டுப் பாருங்கள் அவ்வாறு எவருமே இல்லையென்றே பதில் கிடைக்கும் ஏனெனில் மனிதன் இயற்கை சார்ந்து வாழவில்லை ஆனால் இயற்கைதான் ஆனந்தமானது நித்தியமானது எங்குமே நிறைந்துள்ளது எனவே அதனை சார்ந்து வாழாத போது அதனை ரசிக்கத்தான் இயலுமா?.
அதுதான் நேரமில்லை நேரமில்லை என்று தன் வாழ்வினை கெடுக்கும் உலக விடயங்களை மனிதர்கள் நாடியோடுகிறார்கள் எனவே இந்த மனிதர்கள் சற்று நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டால் இந்த துன்பத்திற்கான காரணத்தினை புரிந்து விடுவார்கள் மேலும் துன்பத்தினை தரவல்ல விடயங்களை செய்யமாட்டார்கள்.
தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ள கட்டாயமாக தியானத்தினை கடைப்பிடிக்க வேண்டும்…
எனவே மனிதர்கள் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ள கட்டாயமாக தியானத்தினை கடைப்பிடிக்க வேண்டும் குறைந்தது அரைமணி நேரமாவது இருந்து பழக வேண்டும் அவ்வாறு இருத்தலை தாரணை என்று கூறுவார்கள் அதன் போது பிராணயாமம் என்பார்கள் அமர்ந்திருந்து தனது சுவாச ஓட்டத்தினை கவனித்தலே பிராணயாமம் எனப்படுகிறது இதனை ஆனா பானா சதி என்கிறார் புத்த பகவான் அதாவது உள்வரும் சுவாசத்திற்கு ஆனா என்றும் வெளிவிடும் சுவாசத்திற்கு பானா என்றும் இவற்றை சாதாரணமாக கவனித்தலை சதி என்று வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்.
மனிதர்கள் வெளியில் பார்த்துப் பார்த்து அதனை நோக்கி ஓடி ஓடி உயிர்ச்சக்தியிழந்து சோர்வடைந்து விட்டார்கள் எனவே உள்முகமாக பார்வையினை செலுத்தி பிராணனை கவனித்து வரும் போது உயிர்ச்சக்தி அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தி பலமடைந்து விடும் அதனால் நோய் நொடி துன்பமில்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழலாம் என்பதனை ஞானிகள் உள்முகமாக தம் தேடலை திருப்பி இவ்வுண்மையினை கண்டுணர்ந்து தாமும் வாழ்ந்து அதனை மக்களுக்கும் வழங்கி அதனை பின்பற்றி வாழுமாறு வலியுறுத்தி வருகின்றார்கள்.
உங்களுக்குள்ளே தேட வேண்டும்…
இவ்வாறு மனிதர்கள் உலக விடயங்களில் ஈடுபட்டு தம் ஆன்ம சக்தியான உயிர்ச் சக்தியினை குறைத்துக் கொண்ட காரணத்தினால் அவர்கள் எத்தனை மருந்து மாத்திரைகள் உட் கொண்டாலும் தற்காலிக தீர்வுகளே கிட்டுகிறதே தவிர நிரந்தர தீர்வினை பெற இயலாமல் போகிறது என்பதனை இதுவரையில் கண்டுபிடிக்க இயலவில்லைதானே அதனால்தான் மனிதர்கள் எந்தப் பொருளை சேர்த்தாலும் அவர்களால் அதைக் கொண்டு சந்தோசமாக வாழ இயலவில்லையென்பதனை தெளிவாக உணரமுடிகிறது.
இதற்கெல்லாம் மூலதனமான பொருளை வெளியிலே தேடியலைவதால் பயனேதுமில்லை உங்களுக்குள்ளே தேட வேண்டும் தியானத்தின் மூலமே அந்த தேடலுக்கான பதிலும் கிட்டும் அதற்காக ஆரம்பத்தில் குறைந்தது அரைமணி நேரமாவது அதிகாலை மற்றும் மாலை வேளை என இரு வேளை அமர்ந்திருந்து சுவாசத்தினை கவனிக்கப் பழக வேண்டும் போகப்போக தியானத்தினது நேரத்தினை ஒரு மணி நேரமாக அதிகரித்துக் கொள்ளலாம்.
சுவாசம்தான் மனிதனது மூலதனம்…
இவ்வாறு சுவாசத்தினை கவனித்து வரும் போது உங்கள் சுய சக்தியாகிய இயற்கை சக்தியான ஆன்ம சக்தி அதிகரித்து மன நிலையில் மாற்றம் வரும் போது வெளி நிலையிலும் மாற்றம் ஏற்படும் இவ்வளவு இலகுவான மாபெரும் வழி முறையினை கைக்கொள்ள முனையாமல் மனிதர்கள் துன்பப்பட்டு துயரப்பட்டு எங்கெல்லாமோ அலைந்து திரிகிறார்கள் சுவாசம்தான் மனிதனது மூலதனம் அதனை கவனித்தலே அவர்கள் செய்யும் தியானமாகிறது இதனை வாழ்வில் என்றாவது கவனித்திருக்கிறோமா என்றால் இல்லவேயில்லை.
21 நாட்களுக்கு இடை விடாமல் கடைப்பிடித்து வாருங்கள்….
எத்தனை பெரிய ஞானத்தினை இதுவரையில் மனிதர்களை அறிய இயலாமல் தடை செய்து வைத்துள்ள விடயம் எது என்பது தெளிவாகுவதற்கு தியானத்தினை தொடர்ந்து 21 நாட்களுக்கு இடை விடாமல் கடைப்பிடித்து வாருங்கள் ஒரு மாற்றத்தினை நீங்கள் நிட்சயம் உணர்வீர்கள் காலப் போக்கில் அதனையே தினமும் மூன்று வேளை உணவு உண்பதனைப்போல மூன்று வேளை தியானத்தினை கைக் கொண்டால் மென்மேலும் இன்பமான வாழ்க்கை வாழலாம் அல்லவா செல்போன் சார்ஜ் குறையும் போது அதனை அவ்வப்போது சார்ஜ் செய்வதனைப் போல உலக விடயங்களில் ஈடுபட்டு சோர்வடைந்த மனதிற்கும் உடலிற்கும் சார்ஜ் ஏற்றுவது போன்றதுதான் தியானம் எனவே தொடர்ந்தும் இந்த தியான வழிமுறையினை கடைப்பிடியுங்கள் என்கிறார் சுவாமிகள்.
நாம் பிறக்கும் போது ஏழையாக பிறந்திருப்போம் அதனையே வளர்ந்த பிறகும் நான் ஏழையாக பிறந்து விட்டேன் என கூறிக் கொண்டிருப்பதில் பயனேது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான ஒரு வாழ்க்கை உள்ளதல்லவா அந்த வாழ்க்கையினை சரியாக பின்பற்றி நம் உள்ளத்திற்கும் உடலுக்கு தீங்கேற்படாத துறையில் கவனத்தினை செலுத்தி வாழும் போது நீங்கள் அந்த துன்பமான வாழ்வினை வெற்றியடைந்து விடலாம் என்கிறார் சுவாமிகள்.
ஆன்மீகம் என்றால் எதையும் விட்டு விட்டு செல்வதல்ல…
இறைவன் படைத்த விடயங்கள் அத்தனையிலும் ஒரு இன்பம் உள்ளது அந்த இன்பத்தினை முழுமையாக அனுபவித்து வாழவே மனிதனும் படைக்கப்பட்டுள்ளான் ஆனால் அந்த இன்பங்களை மனிதனால் முழுமையாக அனுபவிக்கத்தான் முடிகிறதா என்றால் இல்லையல்லவா ஆன்மீகம் என்றால் எதையும் விட்டு விட்டு செல்வதல்ல.
அவ்வாறு விட்டுச் செல்லும் பொருட்களை இறைவன் படைத்திருக்கவேமாட்டார் அவர் படைப்பில் அனைத்துமே சரியாகத்தான் இருக்கிறது அந்தப் படைப்பினுள் மறைந்துள்ள இரகசியத்தினை உன்னால் உணர முடியாத போது நீ அதனை வெறுத்து ஒதுக்குகிறாய் இவ்வாறு இறைவன் படைப்புகள் அனைத்திலும் மறைந்துள்ள இன்பத்தினை முழுமையாக அனுபவிக்கும் வழி உணராமல் அவற்றை வெறுத்து ஒதுக்குவதால் நீயும் இவ்வுலகில் இருந்து ஒதுக்கப்படுகிறாய் கடமையை முடிக்கவே பிறப்பெடுத்து வருகிறோம் வரும் போது யாருக்கும் தான் யாரென்று தெரிவதில்லை எனவே பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான வாழ்க்கையின் போதாவது தியானத்தினை கடைப்பிடித்து இறுதியில் எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்வதற்கான வழியினை அறிந்து விட்டால் துன்பமேது என்கிறார் சுவாமிகள்.
இப்படியெல்லாம் மனிதர்களை காப்பாற்றுவதற்கு மிக மிக எளிய முறையில் தியான வழியினை அருளி எந்த விதமான சுயநலமும் இன்றி மக்கள் தொண்டே மகேசனுக்கு செய்யும் தொண்டெனக் கருதி இடைவிடாது இவ்வாறு இவ்வுலக மக்களுக்கு போதித்து அவற்றை கடைப்பிடித்திடவும் வலியுறுத்தி வருகிறார் மகா யோகி.
மந்திரங்களில் நான் காயத்திரி…
எனவே மக்கள் அனைவரும் சுவாமிகள் உவந்தளிந்த ஞான உபதேசத்தினை கடைப்பிடித்து மந்திரங்களில் நான் காயத்திரி என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் சாஷ்வத வாக்களிக்கப்பட்ட காயத்திரி மகா மந்திரத்தினையும் மகா மிருத்தியுஞ்ஜெய மந்திரத்தினையும் தினமும் அதி காலை மாலை வேளைகளில் 21 தடவைகள் ஜெபித்து தியானித்து வாழும் போது அண்டத்தில் ஆதி சக்தியாகவும் பிண்டத்தில் ஆத்ம சக்தியாகவும் தியானத்தில் சமாதி நிலையாகவும் மந்திரங்களில் காயத்திரியாகவும் இருந்து நம்மையெல்லாம் அந்த பரம் பொருளான குருவானவர் நிட்சயம் காத்தருள்வார் என்பது திண்ணம்.
“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”