Home Srilanka "அதிகாரம் மிக்க பதவி என்னிடம்" - பகிரங்கமாக தெரிவித்த கருணா!

“அதிகாரம் மிக்க பதவி என்னிடம்” – பகிரங்கமாக தெரிவித்த கருணா!

நீண்டகாலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினை அம்பாறை மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து தனித்துவத்தைக் காட்டியுள்ளோம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(11) அம்பாறை – நாவிதன்வெளி பிரதேசத்தில் பிரதம அமைச்சரின் விசேட இணைப்பாளர் அலுவலகத்தை திறந்து வைத்த பின், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது பேசிய அவர்,

கடந்த காலத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விரட்டியடித்து நாம் தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளோம்.

குறிப்பாக கல்முனை பகுதியில் 89 வீதமான வாக்குகளை பெற்றமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எம்மை பாராட்டினார். இதற்காக கல்முனை தொகுதி மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இருந்த போதிலும் நாம் நாடாளுமன்ற அங்கத்துவத்தை இழந்த போதிலும் எமது பிரதமர் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பினை எனக்கு தந்துள்ளார்.

தேர்தலுக்காக மாத்திரம் நாம் மக்களை ஏமாற்றக் கூடாது. எனக்கு கிடைத்த அதிகாரம் மிக்க பதவி ஊடாக மக்களிற்கு உதவி செய்வேன். இதற்கு தற்போது தடையாக உள்ளது கொரோனா நோய். இந்த நோய் காரணமாக அமைச்சுக்கள் செயலிழந்து உள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்று தோல்வியடைந்த கலையரசனுக்கு நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை தேசிய பட்டியல் கொடுத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது குழப்பம் நிலவுகிறது. கலையரசனுக்கு பதவி வழங்கியதால் கூட்டமைப்பின் செயலாளரின் பதவி பறிபோனது. எங்கள் அம்பாறை மாவட்ட மக்களை எமது இதயத்தில் இருந்து பிரிக்க முடியாது. நானும் ஒருபோதும் கைவிட்டுப் போக மாட்டேன்.

அம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும். இதனை ஒரு இனவாதமாக எவரும் பார்க்க கூடாது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று எமது மக்கள் அவர்களுக்கு சாட்டை அடி கொடுத்துள்ளனர்.

எனவே தான் எதிர்வரும் தேர்தல்களில் எம்முடன் ஒரே சின்னத்தில் இணைந்து போட்டியிட கோடீஸ்வரன், கலையரசன் ஆகியோர் உணர்ந்து செயற்பட வேண்டுகோள் விடுக்கின்றேன்

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -