செ.துஜியந்தன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்தாளம் கட்டும் தொழிலில் ஈடுபட்டுவருபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத் தொழிலை நம்பி குடும்பசீவியத்தை நடத்துபவர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் பாரம்பரிய தொழிலான மத்தாளம் கட்டும் தொழிலில் சிலர் ஈடுபடடுவருகின்றனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக மத்தாளம் கட்டுவதற்குரிய மூலப்பொருட்களைப் பெறுவதிலும் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
‘நாங்க பரம்பரையாக இந்த மத்தளம்கட்டுற தொழில்தான் செஞசிட்டு இருக்கிறம். மத்தளம் செய்யிறத்துக்கு நல்ல பலாமரம் தேவை இல்லாவிட்டால் மஞ்சவண்ணா மரம் தேவைப்படும். எங்களுக்கு பிலாமரத்தில மத்தளம் செய்யிறதுதான் நல்ல பலமாக இருக்கும்.
இப்ப பிலா மரம் எடுக்கிறதும் கஸ்டமாக இருக்கிறது. ஒருமாதிரி மத்தளம் செய்ய மரம் கிடைச்சாலும் அதற்கு மான், மரை, குரங்கு போன்ற விலங்குகளின் தோலைப்பெற்றுக்கொள்வதில் சிரமமாக இருக்கிறது. காட்டில் இயற்கை மரணம் அடைகின்ற விலங்குகளின் தோலை எடுக்கிறத்துக்கும் சட்டம் இடம் கொடுக்குதில்லை. இதனால மத்தளம் கட்டும் தொழில் செய்யும் பலர் இந்த தொழிலை விட்டுட்டு வேறு கூலி தொழில்களுக்குப் போயிற்றாங்க.
இந்த அரசாங்கம் மத்தளம்கட்டும் எங்களப்போன்ற தொழிலாளர்களுக்கும் உதவுவதற்கு முன்வரவேண்டும். காட்டில் இயற்கை மரணம் அடைகின்ற குரங்கு, மான், மரை போன்றவற்றின் தோல்களை பெற்றுத்தருவதற்க்கு நடவடிக்கை எடுக்கவேணும்’ என்றார் மத்தளம் கட்டும் தொழிலில் ஈடுபடும் க.இராசலிங்கம் என்பர்.
அருகிவரும் இசைக்கருவிகளில் ஒன்றான மத்தளம் கட்டும் தொழிலை ஊக்குவிக்கவேண்டியது அனைவரதும் கடமையாகும். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் குறிப்பிட்ட சிலரால் முன்னெடுக்கப்பட்டுவரும் .இத் தொழிலை இன்றைய இளைய தலைமுறையினருக்கும் சொல்லிக்கொடுக்கவேண்டும்.
ஒரு பலாமரத்தின் அடிப்பகுதியை எடுத்து வெட்டி அதனை உருண்டையாக்கி குத்தி குடைய எடுக்கவேண்டும். பின்னர் இருபக்கமும் மிருகங்களின் தோலைக்கொண்டு கட்டவேண்டும். அதனை உச்சப்பகுதி, உடுக்கைப்பகுதி என்று சொல்கின்றார்கள். ஒரு மத்தளம் கட்டுவதற்க்கு ஒருவாரம் செல்கின்றது.
இதற்கான செலவும் கூடுதலாகும். புலாமரம் அடிப்பகுதி ஒன்று வெட்டி வீட்டுக்கு கொண்டு சேர்க்கும் வரை அதன் கூலி 10000ரூபா செலவாகிறது. பின்னர் மரத்தை தோண்டும் கூலி 6000ரூபா, மான் அல்லது மரை போன்ற விலங்கின் ஒரு அடித்தோல் 1000ரூபா, மத்தளத்திற்கு முத்திரைக்கட்டு கட்டவதற்கு4500ரூபா என மொத்தமாக 21500ரூபா வரை செலவாகின்றது.
ஒரு மத்தளம் 25000ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. மத்தளங்களின் அளவைப்பொறுத்த பெரியது, சிறியது என அதன் அளவிற்கு விற்பனை செய்கின்றனர். உண்மையில் இத் தொழிலில் ஈடுபடுபவர்கள் காலத்தையும் நேரத்தையும் வீணாக்குகின்றார்களே தவிர பெரிய இலாம் ஈட்டமுடியாதுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு அருகிவரும் பாரம்பரிய மத்தளக்கைத்தொழிலை இலகுபடுத்தி ஒரு இலாம் ஈட்டும் தொழிலாக மாற்றுவதற்க்கு அரசாங்கமும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ப.கதிர்காமநாதன் என்பவர் இப்படிக்கூறுகின்றார் ‘எங்களுக்குப்பிறகு இந்தப்பாரம்பரிய தொழிலைச் செய்வதற்கு எவரும் இல்லை. இன்றைய இளைஞர்கள் மத்தளம் கட்டும் தொழிலை ஒரு ஆத்மதிருப்திக்காவது பழகவேண்டும்.
அரசாங்கம் அருகிவரும் இத்தொழிலை இளைஞர்களுக்கு சொல்லிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நாங்கள் சொல்லிக்கொடுக்கத்தயாராக இருக்pகறோம். காடுகளில் இயற்கையாக உயிரிழக்கும் மிருகங்களின் தோலை பெற்றுத்தர அரசு உதவவேண்டும்’ என்றார்.
இவ்வாறானவர்களின் வாழ்வாதரத்துக்கும், அரச,அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவமுன்வரவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.