செ.துஜியந்தன்
எதிர்வரும் தீபாவளி திருநாளை தற்போதை கொரோனா வைரஸ் தொற்று காலச் சூழலை கருத்தில் கொண்டு இந்துக்கள் அதிகளவில் ஆலயம் சென்று வழிபடுவதையும், ஆடம்பரத்தையும் தவிர்த்து மனிதகுல நலனுக்காக வீடுகளில் இருந்தவாறு இறை பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகை தொடர்பாக கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ்
மேலும் தெரிவிக்கையில்…
இம்முறை இந்துக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தவாறு சுகாதாரவிதிமுறைகளைக் கடைப்பிடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு வேண்டுகிறோம். உங்கள் வீடுகளுக்கு அதிகளவு உறவினர்கள் வருகை தருவதையும், விருந்துபசாரங்கள், கழியாட்டங்களில் பங்கெடுப்பதையும் இயன்றவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இக் கால கட்டமானது கொரோனா வைரஸ் தொற்றினால் மனிதகுலம் பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இவ் வைரஸ் தொற்றை நாட்டில் இருந்து முற்றாக ஒழிப்பதற்க்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைபபு வழங்கவேண்டும்.
கடந்த முறை தீபாவளி திருநாளை அனைத்து இந்துக்களும் சிறப்பாக கொண்டாடியிருந்தோம். அச் சூழல் இன்று இல்லை என்பது கவலையானது. இருந்தும் இம்முறை தங்கள் வீடுகளில் இருந்தவாறு மனிதகுல நன்மைக்காகவும், நாட்டு நலனுக்காகவும், இத் தீபத்திருநாளில் இறைவழிபாட்டில் ஈடுபடுமாறு வேண்டுகின்றோம். தீபாவளி அன்று அனுமதியளிக்கப்பட்ட ஐந்து பக்தர்களுடனே இங்குள்ள இந்து ஆலயங்கயில் விசேட பூசை வழிபாடுகள் நடத்தப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.