பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, வெப் சீரிஸில் நடிகையாக அறிமுகமாகிறார்.
பிரபல விளையாட்டு வீராங்கனைகளின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன.
அதில், நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்போதும் சில வீராங்கனைகளின் பயோபிக் படமாக்கப்பட்டு வருகிறது.
ஆனால், பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, வெப் சீரிஸ் ஒன்றில் அவரே நடிக்கிறார். கடந்த ஜனவரி மாதம் வெளியான தொடர், எம்டிவி நிஷேத். பாலியல், கருக்கலைப்பு உள்ளிட்ட விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தொடர் உருவாக்கப்பட்டது.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இதன் அடுத்த பகுதியை உருவாக்க இருக்கின்றனர். இதற்கு, எம்டிவி நிஷேத் அலோன் டு கெதர் என்று தலைப்பிட்டுள்ளனர். காசநோய் (டிபி)குறித்த விழிப்புணர்வு இந்தத் தொடரின் மையமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொடரில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, முதன்முறையாக நடிகையாக அறிமுகமாகிறார். இதில் அவர் அவராகவே நடிக்க இருக்கிறார். இதுபற்றி சானியா மிர்சா கூறும்போது, நம் நாட்டில் இருக்கும் தீராத நோய்களில் ஒன்று காசநோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 30 வயதுக்கும் குறைவானவர்கள்.
அந்த நோய் பற்றிய தவறான கருத்துகளை மாற்றுவது இப்போதைய தேவையாக இருக்கிறது. அதை இந்த தொடர், அழுத்தமாகவும், தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சொல்லும். தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்துவரும் இந்தக் காசநோய், கொரோனா தொற்று பரவல் காரணமாக மோசமடைந்திருக்கிறது’ என்றார். இந்த தொடர் 5 எபிசோடுகளாக உருவாகி இருக்கிறது. இந்த மாத இறுதியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.