HomeSrilankaமனித வாழ்வில் ஏற்றம் நல்கும் பொறுமையும் சகிப்புத் தன்மையும்- ஆன்மீக அருள் உபதேச தொகுப்பு!

மனித வாழ்வில் ஏற்றம் நல்கும் பொறுமையும் சகிப்புத் தன்மையும்- ஆன்மீக அருள் உபதேச தொகுப்பு!

உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் தத்தம் வாழ்க்கை மேன்மையுறவே எண்ணுவார்களே அல்லாது கீழ் நிலையில் துன்பமான வாழ்க்கையினை வாழ்ந்திட ஒரு போதும் எவரும் விரும்புவது கிடையாது ஆனாலும் அவர்களால் இன்பம் நிறைந்த மேன்மை வாழ்வினை வாழ இயலாமல் பல காரணிகள் அவர்கள் இயல்பு வாழ்விலே தாக்கத்தினை உண்டுபண்ணி வேதனையான பல விடயங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலிலே மனித சமுதாயம் வாழ்ந்து கொண்டிருப்பது மறுக்க இயலாத உண்மை.DSC 0127 scaled

இவ்வாறு துன்பமான வாழ்வினை பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற உயர்வு தரும் நற்குணங்களை பேணுவதன் மூலம் அவற்றை வெற்றி கொண்டு முழுமையினை நல்கக்கூடிய இன்பமான வாழ்க்கையினை வாழ்வது எவ்வாறு என்பதனை ஆன்மீகக் குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் தான் தன் குருவான காயத்திரி சித்தர் பகவான் முருகேசு சுவாமிகளிடமிருந்து அடைந்த உயர் ஞானத்தால் மனிதர்களின் துன்பத்திற்கான காரணங்களை அறிந்து, உணர்ந்து, தெளிந்தது மாத்திரமல்லாமல் இவ்வாறு இவ்வுலக மக்கள் தம் வாழ்க்கையினை தொடர்ந்தும் கைக்கொண்டு வாழ்வார்களேயானால் மிக விரைவில் உலகம் பல பேரழிவுகளை சந்திக்கும் என்றுணர்ந்த சுவாமிகள் எந்த சுயநலனும் இன்றி எவ்விதமான எதிர்பார்ப்புகளுமின்றி, ஆடம்பரம், விளம்பரங்களின்றி மனித சமுதாயத்தினை காத்திட கடந்த 16 வருடங்களுக்கும் மேலாக ஞான உபதேசங்களை நல்கி வருகிறார்.

அந்த வகையில் பொறுமை, சகிப்புத் தன்மை பற்றியதாக இந்த தொகுப்பு மேலும் பல மேன்மையான விடயங்களை உள்ளடக்கி வருகிறது படித்து பயனடைந்திடுங்கள்.

ஒரு நொடிப் பொழுதில் முடிந்து விடும் மனித வாழ்க்கையிலே மனிதர்கள் பேராசை, கோபம், பொறாமை, மோகம், காமம் என்பவற்றையெல்லாம் தம் தளமான மனதிலே ஏற்றி வைத்துக் கொண்டு அதனை விடவும் இயலாமல் அவற்றை விட்டகலும் வழியும் அறியாமல் தமது முழு வாழ்க்கையினையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கலியுகம் என்பது பேராசையினால் மனிதர்கள் துன்பத்தினை இலகுவில் தமதாக்கி கொள்ளக்கூடிய யுகமாகும் ஆனாலும் அதே மனிதர்கள் சற்றே நிதானித்தார்களானால் நற்குணம் உள்ளவர்களாக சிறந்த மனிதர்களாக வாழும் போதே இறைவனையும் அறிந்துணர்ந்து இறைவனோடு ஐக்கியமாக்கிடவல்ல சிறந்த யுகம் எனலாம்.

ஆனால் மனிதர்களோ கலியெனும் மாயையில் சிக்கி தான் அடைந்த செல்வத்தாலும், கற்ற கல்வியாலும், பட்டம், பதவி, அந்தஸ்த்து போன்றவற்றின் மீது கொண்டலையும் மோகத்தால்  இத்தனை விடயங்களையும் தான் அடைந்திட  தனது உடலுக்குள் உயிராக இயங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவினை பற்றிய சுயமான அறிவினையும் அது சார்ந்த ஆன்மீக கல்வியினையும் கற்கவோ கேட்கவோ அறியவோ தவறிவிடுகிறார்கள்.

தான் உருவாக்கிய அல்லது தான் அடைந்த பொருட்களையெல்லாம் நேசித்து பாதுகாத்து பயனடைந்துவரும் மனிதர்கள் தம்மை பாதுகாக்கும் உயிரான ஜீவனை பாதுகாக்க தவறுகிறார்கள். இவ்விடயத்தினை ஸ்ரீ ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் மிக அழகாக குறிப்பிடுகிறார். ” மரணம் உன்னை நெருங்கிடும் சமயம் கற்ற இலக்கணம் காத்திடுமா?” எனவே கோவிந்தனை துதி …. என்று பாடுகிறார்.DSCF9170

ஏனெனில் மரணத்தின் போது கற்ற கல்வியோ பெற்ற பட்டமோ பதவியோ அடைந்த அந்தஸ்த்தோ புகழோ கௌரவமோ சேகரித்த சொத்துக்களோ செல்வங்களோ பெற்ற பிள்ளைகளோ மனைவியோ சுற்றம் உற்றார் உறவினர்கள் என எதுவாலும் எவராலும் உயிரை காத்திட இயலாது இவ்வுயிரினை சிருஷ்டித்த இறைவனால் மாத்திரமே காத்திட இயலும் என்பதனை மாயையினை விட்டகன்று மாதவம் செய்திட்டால் மாதவன் யாரென உணரலாம் என்கிறார் சுவாமிகள்.

உலகெங்கிலும் தற்போது தியானத்தின் மகிமையும் கூட்டுப் பிரார்த்தனையும் என இறை வழிபாட்டின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது இதன் காரணமாக அனைத்து நாடுகளிலும் இறை பிரார்த்தனைகளையும் ஜெப தியானத்தினையும் வலியுறுத்தி வருகிறார்கள்.

சாதாரண மனிதனாக இவ்வுலகில் பிறந்து தன் துன்பத்தினை வெல்ல வழி தேடி ஆன்மீகத்தினை நாடி ஞானமடைந்த ஒரு குருவினை சரணடைந்து அவர் காண்பிக்கும் ஆன்மீக வழியினை சரியாக பின்பற்றி  துன்பப்படுத்திய அத்தனை விடயங்களையும் வெற்றியடைந்தவர்களை இவ்வுலகம் கையெடுத்து வணங்கி அவர்களின் மூலம் தீராத பிணிகளெல்லாம் தீரப்பெற்று தீர்க்க இயலாத சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு கிட்டி நிம்மதியான வாழ்க்கை தமக்கு கிட்டியிருக்கிறதென்று மக்கள் பலர் இவ்வாறு கூறக் கேட்டிருக்கிறோம் பல வரலாறுகளில் படித்திருக்கிறோம் அல்லவா!

சாதாரணமாக பிறந்த ஒருவரை  உலகமே கையெடுத்து வணங்குகிறதென்றால் அவர்கள் பிறப்பால் துன்பப்பட்டவர்களாக பிறந்திருந்தாலும் அவர்களது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையேயான வாழ்க்கையினை எவ்வாறு வாழ வேண்டும் என்ற அறிவினை தேடி அவர்கள் ஆன்மீகத்தின் பால் தம்மை ஈடுபடுத்தியதன் விளைவாக ஆன்ம ஞானம் எனும் அறிவினால் துன்பம் கலவாத இன்ப வாழ்க்கையினை வாழ்ந்தார்கள் அதன் காரணமாக உலக மக்களும் அந்த வாழ்வின் இரகசியமறிய அவர்களை நாடிச் செல்கிறார்கள் என்பதே உண்மை.

அப்பேற்பட்ட மகான்களை மனிதர்கள் சரணடைந்து பொறுமை சகிப்புத் தன்மையோடு அவர்கள் காண்பிக்கு அருள் வாழ்க்கை நெறியினை கடைப்பிடித்து வரும் போது மனிதர்கள் தம் சுய அறிவின் மூலம் தத்தம் கடமைகளை செவ்வனே ஆற்றி அதில் வெற்றியும் கண்டு வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பதே சுவாமிகளின் கூற்று.

தீக்குச்சியினை பற்ற வைக்கும் போது  முதலில் அந்த தீக்குச்சிதான் எரியும் பின்புதான் மற்றையதை எரிக்கும் எனும் யதார்த்தத்திற்கமைய மனிதர்கள் எதை இன்னொருவருக்கு வழங்க எண்ணுகிறார்களோ அது முதலில் அவர்களுக்குத்தான் கிடைக்கும் பின்னரே மற்றவருக்கு வழங்கப்படும் அவை நல்லதோ கெட்டதோ இது யதார்த்த உண்மை.

உலகம் வட்டம் வட்டம் என்கிறார்கள் அந்த வட்டத்திற்குள் வாழும் மனிதர்கள் எதையெதையெல்லாம் இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து செயல் புரிகிறார்களோ அவை அனைத்தும் அந்த வட்டத்துக்குள் நின்று செயலாற்றும் அதே மனிதர்களை வந்தடையும் என்பதே அனுபவ உண்மை.

மேலும் இதனை தெளிவாக விளக்கும் முகமாக யோகியானவர் கூறுகிறார் இப்போது நீ என்னை வணங்குவதாக எண்ணிக் கொண்டிருக்கிறாய் ஆனால் உண்மை அதுவல்ல நீ உன்னையே வணங்குகிறாய் என்பதனை உனக்கு சுய அறிவான ஞானம் சித்திக்கும் போது அதனை நீ உணர்ந்து விடுவாய் அதே போன்றுதான் உலகில் நீ ஆற்றும் அனைத்துக் கருமங்களும் உனக்கு நீயே செய்து கொண்டிருக்கிறாய் ஆனால் உன்னை பற்றியிருக்கும் மாயையால் அவற்றை நீ பிறருக்கு செய்வதாக எண்ணவைக்கப்படுகிறாய் இவ் உண்மையினை உணர்த்தவே ஒரு குரு தேவைப்படுகிறார்.

உனக்குள், எனக்குள், உள்ளே, வெளியே என பிரபஞ்சம் அனைத்திலும் பரம்பொருள் என்ற ஒன்றே பரந்தும் ஒடுங்கியும் காணப்படுகிறது நாம் வெறும் கருவி மாத்திரமே எனும் பேருண்மையினை மனிதர்கள் புரிந்து விடுவார்கள் அந்த அறிவை பெறுவதற்குத்தான் குரு தேவைப்படுகிறார் என்கிறார் சுவாமிகள்.DSC 0130 scaled

வங்கியில் பணத்தினை வைப்பு வைத்தவரால் மாத்திரமே மீண்டும் அந்த வைப்பினை எடுக்க இயலும் வேறு ஒருவரால் அந்த வைப்பினை எடுக்க இயலாத போது மனிதர்கள் இப் பிரபஞ்சத்தில் இருந்து ஆற்றும் செயல்களின் விளைவான பலன்களை அவரவர்கள்தானே அனுபவிக்க வேண்டும் வேறொருவர் அவற்றை எவ்வாறு அனுபவிக்க இயலும்.

வட்டம் ஒன்றினை வரையும் போது அவ் வட்டம் முழுமை பெற வேண்டுமெனில் அதனை வரைய ஆரம்பித்த புள்ளிக்கு மீண்டும் வர வேண்டுமல்லவா! அப்போதுதானே அது வட்டம் என்ற பெயரினை பெறும் அது போன்றுதான் வாழ்வில் பிறருக்கென நினைத்து செய்யும் அத்தனை விடயங்களும் செயலாற்றும் அந்த மனிதர்களிடமே  மீண்டும் வந்தடைகிறது.

நவக் கிரகங்கள் அனைத்தும் பிரபஞ்சத்தின் சுற்றுவட்டப் பாதையில் ஒவ்வொன்றும் தனித்தனியாக வீற்றிருக்கின்றன அதிலே பூமியும் ஒரு கிரகமாக இருக்கிறது அதிலேதான் மனிதர்கள் வாழுகிறார்கள் ஆனாலும் பூமிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் செய்யும் செயல்கள் எவ்வாறு வேறு கிரகத்திற்கு செல்லும் என்பதனை சற்றே சிந்தித்துப்பார்த்தோமானால் கிரகங்கள் மனிதர்களை பகைப்பதில்லை மனிதர்கள்தான் கிரகங்களை பகைத்துக் கொள்கிறார்கள் எனும் உண்மை புலப்படும். 

மனிதர்கள் பிரபஞ்சத்தினை நோக்கி வீசும் விடயங்கள் அத்தனையும் அவர்களை நோக்கி மீண்டும் வரும் என்பதே பிரபஞ்ச நியதி இதுவே இறைவனின் சிருஷ்ட்டியாகிறது

“நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும் நாதன் உள்ளிருக்கையிலே” என்று இடைக்காட்டுச் சித்தர் கூறியிருக்கிறார் இது முற்றும் உணர்ந்த ஞானியர்களை குருவாக சரணடைந்த மானிடர்களுக்கு சாலப் பொருந்தும் மகா வாக்கியமாகிறது.

“உணர்வுள்ள பொருளை நினைக்கும் போது உணர்வற்றுப் போவது எப்படி” என்கிறார் மகா யோகி மனித சரீரத்திற்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் சுவாசத்தினை அடிக்கடி கண்களை மூடி கவனித்து வரும் போது அந்த சுவாசம் உன்னை விட்டுப் போவது எப்படி?… என்கிறார்.

இவ்வாறு சுவாசத்தினை அடிக்கடி கண்களை மூடி கவனித்து வரும் போது நீண்ட காலம் துன்பம் கலவாத இன்ப வாழ்க்கையினை வாழலாம்தானே
நல்லதை எண்ணியெண்ணி நல்லதை பெருக்குவதும் மனிதனே தீயதை எண்ணியெண்ணி தனக்குள் இருக்கும் நல்லதை கெடுப்பதுவும் மனிதனே “தர்மத்தை நீ காப்பாற்றினால் அந்த தர்மம் உன்னை மாத்திரமல்ல உன் பரம்பரையினையே காப்பாற்றுமப்பா” என்கிறார் சுவாமிகள்.

ஆனாலும் மனிதர்களுக்கு ஒரு விடயத்தில் தெளிவற்ற நிலையே காணப்படுகிறது அதாவது இறைவழியில் செல்பவர்களுக்கு அல்லது ஒரு ஞான குருவினை சரணடைந்தவர்களுக்கு அதிக துன்பம் வருகிறதே அவ்வாறு ஏன் நிகழ்கிறது என அவர்களால் புரிந்து கொள்ள இயல்வதில்லை.

இதனை விளக்கும் முகமாக மகாபாரத சரித்திரம் மூலமாக அவ்வுண்மையினை புரிய வைத்து தெளிவினை நல்குகிறார் சுவாமிகள்…

பஞ்சபாண்டவர்கள் நாடிழந்து காட்டிலே வனவாசம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்ட போது “பாண்டவர்கள் பரமாத்வானான உன்னையே சரணடைந்து உன்மீது பக்தி வைத்து வாழ்ந்து வருகிறார்கள் ஆனாலும் ஏன் அவர்களுக்கு துன்பம் வருகிறது கண்ணா…” என்று ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவினை நோக்கி குந்தி தேவி வினாவுகிறார் அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் புன்முறுவலோடு பதில் உரைக்கிறார் “அத்தை  பாண்டவர்கள் என்னையே நினைத்து வாழ்வதால் இப்பிறவியிலேயே அவர்களுக்கு பிறவாப் பேரின்ப நிலையினை வழங்கப் போகிறேன்! அவர்கள் பல பிறவிகளில் செய்த பாவங்கள் இப்போது அதிகமாக உள்ளது புண்ணியம் குறைவாக உள்ளது எனவே குறைவாக உள்ள புண்ணியத்தை அதிகரித்து அதிகமாக உள்ள பாவத்தை கரைத்து அவர்களை மேன்மையுறச் செய்யவே இந்த வனவாசமும் சோதனைகளும்” என்கிறார்.

12ஆண்டு கால வன வாசம் நிறைவடைந்த பின்னர் பாண்டவர்கள் கௌரவர்களை எதிர்த்து குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்து தர்மத்தை நிலைநாட்டினார்கள் ஈற்றில் பரமாத்வாவோடு ஐக்கியமாகி பிறவாப் பேரின்ப நிலையான முக்தியினை பெற்றார்கள் என்பது வரலாறு.DSCF8985 scaled

இவ்வாறு இறைவனை நினைத்து இறைவனோடு வாழும் ஆன்மீக வாழ்வின் போது பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்திக்கும் மனிதர்கள் தங்கத்தை புடம் போடுவது போல வைரத்தை பட்டை தீட்டுவது போல பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது ஆனாலும் அத்துன்பங்களை பொறுமை சகிப்புத் தன்மையோடு கையாளும் போது அவர்கள் ஒளி பொருந்திய வைரமாக புடம் போட்ட தங்கமாக இவ்வுலகில் ஜொலிக்கிறார்கள் என்பதே உண்மையாகிறது இதுவே பல வரலாறுகளிலும் மனித குலத்தின் நன்மைக்காக கூறப்பட்டுள்ள மனு நீதியாகிறது.

தற்போது உலகில் ஏற்பட்டுள்ள தொற்று நோயோ அல்லது துன்பங்களோ பசியோ பட்டினியோ மேலும் அதிகரிக்கலாம் அல்லது குறைவடைந்தும் போகலாம் சாதாரண மனிதர்கள் கைகளில் எதுவுமேயில்லை எனவே அடிக்கடி கண்களை மூடி உங்கள் சுவாசத்தினை மாத்திரம் கவனியுங்கள் அது மாத்திரம்தான் பிறக்கும் போது மனிதர்கள் கூடவே வந்த பொருள் ஆனால் அறியாமை அகக் கண்களை மறைத்ததால் புறக்கண்களால் புலன் இன்பத்திலே திளைத்துக் கிடந்து விட்டு துன்பம் வரும் போது இது தாம் செய்த செயல்களின் பலன்களே என்பதனை மனிதர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை இவ்வாறு ஏற்க மறுக்கும் போது சிருஷ்ட்டி தனது யோக மாயையினால் மனித சரீரமெடுத்து குருவாக வீற்றிருந்து உலகிற்கு இவ் உண்மையினை உரைக்கிறது.

அப்போதும் உலக மக்கள் அவ்வுண்மையினை ஏற்க மறுக்கும் தருணத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது உதாரணத்திற்கு சாதாரண உணவு விடயத்திலேயே மனிதர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது அதே போன்று சிருஷ்டிக்கு ஒவ்வாத காரியத்தில் மனிதர்கள் ஈடுபடும் போது அதே ஒவ்வாமை பெரும் இயற்கை சீற்றத்தினையும் பேரழிவினையும் உண்டாக்கி தொற்றுநோய், பசி, பஞ்சம், பட்டினி என்று மனிதர்கள் துன்பப்படுவார்கள்தானே இதிலிருந்து மனிதர்கள் படைத்தவனை நொந்து கொள்வதால் என்ன பயன் மனிதர்கள் ஒவ்வொருவரும் தாமே தமக்குரிய படுகுழியினை உண்டாக்கி வைத்துள்ளார்கள் எனும் பேருண்மை புலனாகிறதல்லவா.

இவ்வுலகில் மனிதனாக பிறப்பெடுத்த அனைவரும் ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் மனிதப் பிறவி என்பது பல பிறவிகளின் பரிணாம வளர்ச்சியின் இறுதி ஆகிறது இவ்வாறு பரிணாமம் வளர்ந்து பரந்தாமனை காண எத்தனிக்கும் மனிதர்களுக்கு சோதனை, வேதனை வாழ்வில் நிட்சயம் ஏற்படும் ஆனால் தன் சுய அறிவின் மூலம் பொறுமை, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி போன்றவற்றை கடைப்பிடித்து சிந்தித்து தெளிவடைந்து விட்டார்கள் என்றால் அவர்களை சோதனைகளோ வேதனைகளோ எதுவும் தாக்காது.

இதனை விளக்க மகா யோகி “பிள்ளையாரும் படிக்கல்லும்” எனும் தத்துவக் கதையொன்றினை விபரிக்கிறார்…

ஆலயம் ஒன்றிலே கர்பக்கிரகமாக பிள்ளையார் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது அங்கே படிக்கல்லொன்று பிள்ளையாரை நோக்கி ஒரு வினாவினை தொடுக்கிறது ” பிள்ளையாரே உன்னையும் என்னையும் சிற்பியானவன் ஒரே மலைக் கல்லிருந்துதான் பெயர்த்தெடுத்தான் ஆனால் இன்று மக்கள் என்னை மிதித்துக் கொண்டு உன்னை கையெடுத்து வணங்கிச் செல்கிறார்கள் அது ஏன்?” என்று கேட்டது.

அதற்கு பிள்ளையார் ” உண்மைதான் படிக்கல்லே உன்னையும் என்னையும் ஒரே மலையில் இருந்துதான் சிற்பி பெயர்த்தெடுத்தான் பின்னர் சிலை செதுக்க உன்னைத்தான் முதலில் அவன் தேர்ந்தெடுத்து தன் உளியினை உன் மேல் வைத்து அடித்தான் ஆனால் அவனது முதலாவது அடியிலேயே நீ உடைந்து விட்டாய் அதன் பின்னர்தான் அவன் என்னை எடுத்து உளி கொண்டு செதுக்க ஆரம்பித்தான் அவன் அடித்த அத்தனை அடிகளையும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் நான் பொறுத்துக் கொண்டேன் பல அடிகளுக்குப் பிறகு வெறும் கல்லாக இருந்த நான் பிள்ளையாராகி இன்று கர்ப்பக்கிரகத்தில் மூலவராக வீற்றிருக்கிறேன் அதனால் என்னை மக்கள் கையெடுத்து வணங்குகிறார்கள்.

ஆனால் சிற்பி அடித்த ஒரு அடியில் நீ உடைந்து விட்டாய் ஆதலால் பொறுமையும் சகிப்புத் தன்மையினையும் பேணாத நீ படிக்கல்லாக கிடந்து மிதிபடுகிறாய் எனவேதான் உன்னை மிதித்து விட்டு என்னை வணங்குகிறார்கள்” என்று பிள்ளையார் சிலை கூறியதாக சுவாமிகள் இச்சிறிய கதையொன்றின் மூலமாக ” பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடுறைவார்” எனும் பழமொழியின் சாராம்சத்தினை அனைவருக்கும் புரியும் விதத்தில் கூறுகிறார்.DSC 0870 2 scaled

ஆனால் மனிதர்களோ உணர்வற்ற பொருட்களையெல்லாம் எண்ணியெண்ணி உணர்வற்று போகிறார்கள் வானுயர்ந்த கட்டடங்கள், பட்டம் பதவி, புகழ், பணம் என  உணர்வற்ற பொருட்களால் உனக்கென்ன இலாபம் மனிதா! என்கிறார்; உன் இலாப நஷ்ட கணக்கை என்னிடம் விட்டு விடு நீ இவ்வுலகில் எதற்காக படைக்கப்பட்டாயோ அந்த கருமத்தினை மாத்திரம் ஆற்று மற்றவர்கள் அப்படி , இப்படி இருக்கிறார்கள் நானும் அப்படி வாழ வேண்டும் எனும் பேராசையினை விட்டு விடு இருப்பதனைக் கொண்டு நிறைவான வாழ்க்கை வாழப் பழகு பிறர் பொருளின் மேல் பேராசை கொள்ளாதே பிறர் பொருள் மேல் மோகம் கொள்ளாதே மொத்தத்தில் பிறர் பொருள் மேல் நாட்டம் கொள்ளாதே.

சுயநலவாதியாய் போகியாய் வாழ்ந்தது போதும் பொதுநலவாதியாய் யோகியாய் வாழக் கற்றுக் கொள் இவ் உண்மைகளை போதித்து நல்வழி காண்பித்து எங்கிருந்து வந்தாயோ அந்த மூலத்திடம் உன்னை ஐக்கியப்படுத்திடவே நான் அவதரித்துள்ளேன் காலம் கனியும் போது இவ்வுண்மையினை நீ உணர்ந்து கொள்ளுவாய் அது வரையில் என் உபதேச நெறி நின்று தர்மத்தினை பெருக்கக்கூடிய ஜெப தியான வாழ்வினை கடைப்பிடித்து  வாழுங்கள் என்பதனைப் போலாகவே மகா யோகியின் ஆன்ம எழுச்சியினை நல்கக்கூடிய ஞான உதேசங்களின் சாராம்சம் கட்டியம் கூறி நிற்கின்றன.

இதுவே ஞானத்தின் முதிர்வு நிலை மனித வாழ்வின் புடம் போட்ட உண்மைகளை மொத்தமாய் வெளிச்சம் போட்டுக் காட்டும் உயர்ந்த ஆன்மீக தொகுப்பு இது எனலாம்.

நோயோ, துன்பமோ ஏற்படும் போது தற்காலிக நிவாரணமாக வைத்தியமோ அல்லது அதற்கான மாற்று உபாயங்கள் மூலமாகவோ தீர்வு கிட்டுகிறது ஆனாலும் அவை அனைத்தும் இனி வராது இத்தோடு முடிந்தது என்ற எண்ணத்தோடு மனிதர்கள் வாழ முனையும் போதுதான் பல துன்பங்களை வேதனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள் மனம் நொந்து போகிறார்கள் ஒன்று வந்துள்ளது இதே போன்று இன்னும் பல நிகழ்வுகளை வாழ்வில் எதிர் கொள்ள வேண்டும் எனும் சுய அறிவு செயலற்று போயுள்ளதால் மாயை அவர்களை ஆட் கொண்டு வழிநடாத்துகிறது.

இவ்வாறு துன்பங்களும் சோதனைகளும் வேதனைகளும்  ஒவ்வொன்றாக வரும் போது அதனை தன் அறிவால் வெல்வதே ஞானம் மனிதனாக பிறந்தால் பல சிக்கல்கல்கள் ஏற்படும் அவை நாம் முற்பிறவியில் செய்த செயல்களின் பலனாகவே அவ்வாறு நிகழுகிறது எனவே அதனை வெற்றி கொண்டு வாழ்வதே ஆன்மீக வாழ்க்கை உதாரணத்திற்கு வாகனம் ஒன்று பழுதாகி அதனை திருத்துனரிடம் கொண்டு சென்று திருத்தி சரி செய்து விட்டால் விட்டால் மீண்டும் பழுது வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

வாகனங்கள் இயங்கும் போது அவற்றின் உதிரிப்பாகங்களில் தேய்மானம் ஏற்படும் பின்னர் அதனை திருத்துனரிடம் கொண்டு சென்று சரி செய்து மீண்டும் இயங்க வைப்பது என இது தொடர்ச்சியாக நிகழும் யதார்த்தமான விடயம் வாகனமோ அல்லது அன்றாடம் வீடுகளில் பாவிக்கும் மின் கருவிகள் ஏனைய பொருட்களில்  பழுது ஏற்பட்டவுடன் அவற்றுக்குரிய திருத்துனர்களிடம் சென்றால்தான் அவற்றுக்கான தீர்வு கிடைக்கும் என்றறிந்த மனிதனுக்கு.

தன் வாழ்வில் துன்பம் ஏற்படும் போது அதற்கான தீர்வினை தரக்கூடிய திருத்துனர் தம்மை படைத்த இறைவன்தான் என்பதனை உணர இயலாமல் துன்பத்தில் உழலும் மனிதர்களை கண்ணுற்ற இறைவன் இவ்வுலகிலே மனிதனாக பிறந்து மனிதன் படும் துன்பங்கள் வேதனைகள் அனைத்தையும் தானும் அனுபவித்து அவரும் ஒரு ஞான குருவினை சரணடைந்து ஆன்மீக வாழ்வினை கடைப்பிடித்து துன்பங்களிலிருந்து விடுபட்டு தான் யார் என்பதனை அறிந்து தான் அவதரித்த கடமையினை உணர்ந்து  குருவாக இருந்து ஞான போதனைகளை வழங்குகிறார் அவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்டு அதனை பின்பற்றி வாழ நினைத்தவர்கள் தங்கள் பழுதுகள் திருத்தப்பட்டு துன்பம் கலவாத இன்ப வாழ்க்கை வாழ்கிறார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் செவிசாய்க்காத மனிதர்கள் மென் மேலும் துன்பத்தினை அனுபவிக்கிறார்கள் இங்கே படைத்தவனிலோ அல்லது வழிகாட்டும் குருவிலோ குறையுள்ளதா என்றால் இவற்றை செவிமடுக்காத மனிதர்கள்தானே தவறிழைக்கிறார்கள் என்பது புலனாகிறது எனவே செவி மடுப்பதுவும் செவி மடுக்காமல் கடந்து செல்வதுவும் அவரவர் சுதந்திரம் இது யோகியின் மகா வாக்கியம்.DSCF9179 1 scaled

அதிகமாக யோசிக்க யோசிக்க மனிதர்களது ஆயுள் குறைந்து போகிறது  உதாரணத்திற்கு சிறு குழந்தைகளுக்கு எதுவிதமான யோசனைகளும் இல்லை பசித்து அழுதால் உணவு வழங்குகிறார்கள் பாலூட்டி தாலாட்டி சீராட்டி வளர்க்கிறார்கள் ஆதலால் அந்தக் குழந்தைகளுக்கு கவலையில்லை   யோசனையில்லை ஆரோக்கியமாக இருக்கிறார்கள் அதனால் அவர்களுக்கு பிராண சக்தி அதிகமாக காணப்படுகிறது ஆனால் அந்தக் குழந்தை வளர வளர அவர்கள் வாழும் சூழல் தன்மையின் பிரகாரம் மனதின் எண்ணங்களும் விகாரமடைந்து பல விடயங்களை தாங்கிய யோசனையின் பக்கம் மனதினை செலுத்தி பிராண சக்தியினை குறைவடைய செய்கிறார்கள் அதன்போது தொற்று நோய்கள் இலகுவாக உடலில் ஊடுருவி தாக்கத்தை உண்டு பண்ணி விடுகிறது.

இதுவே சிறு பராயம் முதலாகவே குழந்தைகளுக்கு இறை வழியில் நாட்டத்தினை உண்டாக்கி வேதங்களில் மகா மந்திரமாக போற்றப்படும் காயத்திரி மகா மந்திரத்தினையும் மகா மிருத்தியுஞ்ஜெய மந்திரத்தினையும் தினமும் அதிகாலை மாலை வேளைகளில் பாராயணம் செய்ய வைத்து குறைந்தது பத்து நிமிடங்களாவது கண்களை மூடி அவர்கள் சுவாசத்தினை கவனிக்க செய்திட்டால் அவர்களது ஆன்ம சக்தி மேலும் வலுப்பெற்று உடலில் ஏற்படும் உபாதைகள் மனதில் ஏற்படும் சலனங்கள் அனைத்தையும் வெற்றியடைந்து உலகில் மாபெரும் மனிதர்களாக வாழ்வாங்கு வாழ்வது திண்ணம்.

சிறு குழந்தைகள் மாத்திரமன்றி பெரியவர்களும் இவற்றை முறையே பின்பற்றி வருவார்களேயானால் சுபீட்சம் நிறைந்த எதிர்காலம் அவர்களுக்கு மிக மிக அண்மையிலேயே உள்ளது என்கிறார் மகா யோகி.

தன் வாழ்வில் நிகழும் தான் எதிர் கொள்ளும் எந்த விடயங்களும் தான் எண்ணாமல் நிகழ்வதில்லை என்பதனை மனிதர்கள் ஏற்கொள்ளாமல் இன்னொருவரை நோக்கி தமது விரல்களை நீட்டுகிறார்கள் ஆனால் சுயமாக ஆராய்ந்து பார்த்தால் தனக்கு நிகழும் நிகழ்வுகள் அனைத்திற்கும் தாமே காரணம் என்பதனை உணர்ந்து விடுவார்கள்.

உதாரணத்திற்கு ஆணோ பெண்ணோ இருவரிலும் யாரோ ஒருவர் திருமண வயதினை எட்டியவுடன் வீட்டிலுள்ளவர்கள் திருமண பேச்சினை எடுப்பார்கள் சிலர் அதற்கு முதலாகவே காதலித்தும் இருப்பார்கள் இந்த சந்தர்ப்பத்தில் பெண்ணையோ ஆணையோ அழைத்து திருமணத்திற்கு சம்மதம் கேட்பார்கள் இது அனைத்து திருமணங்களின் போதும் ஆரம்பத்தில் நிகழும் ஒரு நிகழ்வாகிறது அதற்கு சம்மதம் தெரிவித்ததும் அடுத்த கட்ட நிகழ்வுகள் தொடங்கப்பட்டு புதிய வாழ்க்கைக்குள் அந்த தம்பதியர்கள் காலடியெடுத்து வைத்து வாழ்க்கையினை ஆரம்பிக்கிறார்கள் ஆனால் தாம் மிக மகிழ்வாக செல்வமாக வாழும் தருணத்தில் தமக்கு திருமணம் செய்து தந்தவர்களையோ அல்லது காதலுக்கு உதவியவர்களையோ அவர்கள் நினைப்பது கிடையாது மாறாக வாழ்வில் ஏதாவது பிணக்கு ஏற்படும் சந்தர்ப்பத்தில் தம்மை இணைத்து வைத்த நபர்களை பல வார்த்தைகள் கொண்டு திட்டித் தீர்ப்பார்கள்.

இங்கு திருமண வாழ்க்கை தொடர்பான பேச்சினை அவர்கள் எடுத்திருந்தாலும் அதற்கு சம்மதித்து அவ் வாழ்வினை ஏற்று வாழ்பவர்கள் ஏதோ தம்மை அவர்கள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததை போலவும் காதலிக்க வைத்ததைப் போலாகவும் எண்ணி அவர்களுக்கு திட்டுவது எந்த விதத்தில் நியாயம் ஆகிறது இந்த உதாரணத்தை போன்றுதான் மனிதர்கள் தங்கள் வாழ்வில் அனைத்து காரியங்களிலும் மகிழ்ச்சியினை அடைய இயலாத போது பிறரை நோக்கி தமது விரல்களை நீட்டுகிறார்கள் இது மனிதர்களின் அறியாமையினை குறிக்கிறது.

ஆமையானது தனக்கு ஏதாவது ஆபத்து நிகழப் போகிறது என்று உணரும் போது தனது ஐந்து அவயங்களையும் தன் ஓட்டினுள்ளே இழுத்து ஒடுக்கி வெறும் ஜடம் போல கிடக்கும் அப்போது அது மிருகங்களாலோ மனிதர்களாலோ ஏற்படும் ஆபத்தை வென்று விடுகிறது அது போல அறியாமையினால் தன் ஐந்து புலன்களினாலும் ஏற்படக்கூடிய துன்பங்களை அறியாமை நீங்கிய ஞான குருவின் திருப்பாதங்களை சரணடைவதன் மூலமாக ஐம்புலன்களை ஒடுங்கச் செய்து பிரம்மத்தினுள் ஜீவாத்மாவினை ஐக்கியமாக்கி பேரின்ப பெருவாழ்வினை வாழ்ந்திடலாம்.DSC 0290 1 scaled

ஆனால் மனிதர்கள் எதற்கெடுத்தாலும் பயம் எதை பார்த்தாலும் பயம் இவ்வாறு பயம் பயம் என்று பயமுறுத்தப்பட்டு அச்சமூட்டும் நிகழ்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு தம் சுயம் அறியாமல் வாழுகிறார்கள் பயத்தின் தன்மையினை உணர்த்த மகாபாரதத்தில் நிகழ்ந்த இன்னுமொரு சுவாரசியமான நிகழ்வினை பக்தர்களுக்கு ஞாபகமூட்டுகிறார் மகா யோகி…

ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் காடொன்றில் தங்கியிருக்கவேண்டிய நிலையேற்பட்டது அப்போது இரவு நேரம் நெருங்கியதால் பலராமர் ஸ்ரீ கிருஷ்ணர் தன் தம்பியாகையால் தானே காவல் காக்கவேண்டும் என்று மனதிலே எண்ணிக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை உறங்குமாறு கூறிவிட்டு தான் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டார் அப்போது அந்த அடர்ந்த காட்டில் அரக்கன் ஒருவன் பலராமர் முன் தோன்றி பெரும் சப்தமிட்டு பயமுறுத்தினான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பலராமரும் சிறிது நேரம் அவனோடு போராடினார் ஆனால் அரக்கனது பெரும் சப்தம் அவரை பயம் கொள்ள வைத்தது பலராமர் பயம் கொள்ளக் கொள்ள  அரக்கன் வானளாவ உருவெடுத்து நின்றான் உடனே பதறிக்கொண்டு பலராமர் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டார்.

நடந்த சம்பவங்களை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணரோ பலராமருக்கு தெரியாமல் அரக்கன் இருந்த இடத்திற்கு சென்று அவனைப்பார்த்து அவனை விட பல மடங்கு உரக்க சப்தமிட்டார் ஸ்ரீ கிருஷ்ணரின் சப்தத்தால் திகைத்துப் போன அரக்கனது உருவம் மெல்ல மெல்ல சிறுத்துக் கொண்டு வந்தது இவ்வாறு தொடர்ந்தும் பகவானின் சப்தத்தினால் பயங்கொண்ட அரக்கன் கட்டை விரல் அளவு சிறுத்துப் போனான் உடனே அவனை தன் சால்வையில் சிறு முடிச்சொன்று போட்டு முடிந்து இடுப்பிலே சொருகிக் கொண்டு எதுவும் அறியாதவர் போல பலராமரின் பக்கத்தில் சென்று உறங்கினார்.

காலை புலர்ந்து இருவரும் கண் விழித்தார்கள் பலராமரை பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர் இரவு பெரிய சப்தங்கள் கேட்டதே அண்ணா அது என்ன என்று கேட்டார் அப்போது தனக்கு நடந்த சம்பவத்தினை பலராமர் கிருஷ்ணரிடம் விபரித்தார் அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் தனது இடுப்பிலே முடிந்து வைத்திருந்த முடிச்சினை அவிழ்த்து இதோ இருக்கிறானே இவனா உங்களை பயமுறுத்தியவன் என்று பாருங்கள் அண்ணா என்று உருவத்தில் சிறுத்துப் போயிருந்த அந்த அரக்கனை காண்பித்தார்.

பிரமித்துப் போன பலராமர் தம்பி வானளாவ வளர்ந்து நின்ற இந்த அரக்கன் எவ்வாறு கட்டைவிரல் அளவு சிறியவனானான் என்று வினாவினார் அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் தான் அவனைப்பார்த்து பெரும் சப்தம் இட்டதனையும் அதனால் அவன் பயம் கொண்டு அவனது சக்தி குன்றி சிறியவனான சம்பவத்தினையும் விபரித்தார். என்று மகா யோகியானவர் அந்த கதையினை உரைக்கிறார்.

இந்த சம்பவத்தில் கூறப்பட்டுள்ளவாறே மக்களும் தம்மை பயங்கொள்ள வைக்கும் செய்திகளையும் தகவல்களையும் உள்வாங்கி பயந்து நடுங்கியதன் விளைவால் அவர்களுக்கு ஏற்படும் நோய்களும் துன்பங்களும் பெரும் தாங்கங்களை ஏற்படுத்துகின்றன அதுவே பயத்தை விலக்கி தைரியமாக இவற்றையெல்லாம் நிட்சயம் வெற்றியடைவோம் என்று மனதிலே உறுதி பூண்டு செயற்கரிய நற் காரியங்களையெல்லாம் செய்து கொண்டு மனிதர்கள் ஒவ்வொருவரும் தாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களே நமக்கு துன்பத்தை தரும் கொடிய தொற்று நோய்களாக, பசிப் பிணியாக, இதர துன்பங்களாக உருவெடுத்து வந்து தம்மை தாக்கி வேதனைப்பட வைக்கின்றன என்பதனை ஏற்று அவற்றையெல்லாம் வெற்றியடைந்து வாழ்வாங்கு வாழ வைத்திட வழியுரைக்கும் ஞான குரு ஒருவரை சரணடைந்து தத்தம் மத அனுஸ்டானங்களை முறையே கடைப்பிடித்து ஆன்மீக வாழ்க்கையில் ஜெப தியானங்களில் தம்மை ஈடுபடுத்தி வாழ்வாங்கு வாழ முயற்சிக்க வேண்டும் என்பதே மகா யோகிகள் மானிடர்களுக்கு உரைக்கும் உபாயம்.DSC 0867 scaled

மனிதர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் செய்த கருமத்தினை அடிப்படையாக கொண்டு பாவ புண்ணியங்களின் படி பல சோதனைகளையும் வேதனைகளையும் கடந்தே பயணிக்க வேண்டியுள்ளது  இதுவே சிருஷ்டியின் நியதி.

அதுவேதான் மகான்களும் இவ்வுலகில் பிறந்து பல வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவித்து ஆன்மீக அற நெறி பிறளாது வாழ்வாங்கு வாழ்ந்து துன்பங்களையெல்லாம் தூசு தட்டி நிலையான இன்பத்தினை அனுபவித்துக் கொண்டு அதனை தன்னை நாடிவரும் மக்களுக்கும் எந்த சுயநலமுமின்றி வாரி வாரி வழங்குகிறார்கள்.

இதையே ஸ்ரீ கிருஷ்ணர் அரிச்சுனனிடம் இவ்வாறு கூறுகிறார் “அரிச்சுனா நானே படைத்தவன் இவ்வுலகில் நான் நினைத்தால் அடைய இயலாது என்று எந்தப் பொருளும் கிடையாது ஆனாலும் சிருஷ்டியின் தத்துவத்தை பேணுவதற்காக எந்த நோக்கத்தோடு இங்கு நான் மனித சரீரம் எடுத்து வந்தேனோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதே எனது அவதாரத்தின் நோக்கம் அதனை நோக்கியே எனது அனைத்து கடமைகளும் நிகழ்த்தப்படுகிறது அதனால் உன் கடமை எதுவோ அதை நீ செய் அதற்கான பலன்களை இந்த சிருஷ்டி உனக்கு நிட்சயம் வழங்கும் என்கிறார்.”

எனவே பொறுமை சகிப்புத் தன்மையோடு தமக்கு ஏற்படும் துன்பங்களை மனதிலே போட்டு குழப்பிக் கொண்டிராமல் பரிபூரணமான இறைவனை மனதிலே இருத்தி அவரை எண்ணிக் கொண்டு வாழ முயற்சிக்கும் போது அம் முயற்சியின் பலனாக நகம் வளர்வது தெரியாது முடி வளர்வது தெரியாது அது வளர்ந்த பின்னரே தெரிவதனைப் போன்று இறை வாழ்க்கையும் அவ்வாறே காணப்படுகிறது அதனை சரியாக கடைப்பிடித்து நெறி தவறாது வாழும் போது வாழ்வில்  வெற்றியடைந்து விட்டோம் என்னும் உண்மை தெரியவரும் அப்போது அது நம்மை காத்து நிற்கும் எனவே அது வரையிலும் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் நமது கருமங்களை ஆற்ற வேண்டும் என்கிறார் மகா யோகி.

துன்பம் தரும் விடயங்களான தொற்று நோய்களோ ஏனைய துன்பங்களையோ பெரிதாக எண்ணாமல் அதனால் பயம் கொள்ளாமல் அதனை வெற்றியடையக்கூடிய வழி முறைகளையும் அதற்கான உணவு பழக்கவழக்கங்களையும் கடைப்பிடித்துக் கொண்டும் ஜெப தியானங்களையும் செய்து கொண்டு வாழும் போது அவற்றின் வீரியம் குறைவடைந்து மறைந்து காணாமல் போய் விடும்.

பிரச்சினை என்று ஒன்று வரும் போது அதற்கான தீர்வு நிட்சயம் இருக்கும் ஆனால் மனிதர்களோ தமக்கான தீர்வினை தமக்குள்ளேயே வைத்துக் கொண்டு எங்கெல்லாமோ தேடியலைகிறார்கள் அதுதான் “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே” என்ற பாடலும் உள்ளது எனவே உலகம் வாழ் மக்கள் அனைவரும் பேரின்ப ஞானத்தை நல்கக்கூடிய மகா யோகியின் திரு வாக்கினை கடைப்பிடித்து இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ வேண்டுமென்பதே இவ் உபதேசத் தொகுப்புகளின் நோக்கமாகிறது.

“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -