Home Srilanka கல்முனை பிராந்திய சுகாதார பகுதிகளில் 72 பேருக்கு கொரோனா தொற்று- பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் சுகுணன்!

கல்முனை பிராந்திய சுகாதார பகுதிகளில் 72 பேருக்கு கொரோனா தொற்று- பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் சுகுணன்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா நோய் பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை 72 பேர் கொவிட் 19 தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை (26) எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளில், ஆரம்பத்தில் 20 பேரில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட உப கொத்தணிப் பரவலைத் தொடர்ந்தே இவ்வாறு 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் தெரிவித்தார்.

இதுவரை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் 45 பேரும், கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட ஏனைய பிரதேசங்களிலிருந்து 27 பேரும் நேற்று வரை அடையாளங் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இறக்காமம் பிரதேசத்திலிருந்து 4 பேரும், நிந்தவூர் பிரதேசத்தில் ஒருவரும், நாவிதன்வெளி பிரதேசத்தில் ஒருவரும் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

கல்முனைப் பிராந்தியத்தின் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில், அந்தந்த பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் எண்ணிக்கை, அபாயமான பிரதேசங்களிலிருந்து இப் பிரதேசங்களுக்கு வந்த நபர்களின் எண்ணிக்கை, அந்த பிரதேசத்தில் காணப்படும் அபாயநிலை போன்றவற்றைக் கருத்திற் கொண்டு பி.சி.ஆர் மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. இதுவரை கல்முனைப் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் பி.சி.ஆர். மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று சந்தைப் பிரதேசத்தில் எழுமாறாக 20 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, குறித்த சந்தைப் பிரதேசத்திற்கு நேரடியாகச் சென்று வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கருதப்படும் நபர்களுக்கும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களுக்கும் பி.சி.ஆர். மற்றும் அன்ரிஜன் பரிசோனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச சுகாதார பிரிவுகளில் பிறப்பிக்கபட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் விதிகளுக்கமைய இப்பிரதெசங்களிலுள்ள வர்;த்தக நிலையங்கள், கடைகள், மத ஸ்தாபனங்கள், அரச நிறுவனங்கள் என்பன கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளன. பொது மக்களும் தமது நாளாந்த வேலைகளில் ஈடுபடமுடியாதவாறு வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலமை மேலும் நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கல்முனை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன், தனியார் வகுப்புகள் மற்றும் கூட்டங்கள் கூடுதல் என்பன தடுக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -