ஆன்மீக அன்பர்களுக்கு இனிய வணக்கங்கள்! இவ்வுலகமும் அதில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற மனிதர்களும் சுயமான விழிப்புணர்வினை அடையாமையாலும் தன்னை படைத்து, காத்து, அருளும் வல்லமை பொருந்திய முல சக்தியான ஆதி சக்தி தனக்குள்தான் இருக்கிறது அதுவேதான் இப் பிரபஞ்சத்தினையும் இயக்குகிறது எனும் பேருண்மையினை அறியாமையினாலும் தன்னை சூழவுள்ள புற உலகில் காணப்படும் அழியும் பொருட்களின் மேல் கொண்ட அளவற்ற பற்றினாலும் பேராசையினாலும் தனது சுய நிலையான ஆன்ம நிலையறியாது ஏற்பட்ட, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற விடயங்களான இன்ப, துன்பங்களை பிறரொருவரின் செயலால்தான் தாம் அனுபவிக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இந்த மனிதர்களின் பிறப்பின் நோக்கம் என்ன? அவர்களின் சுய தன்மை என்ன? அந்த சுய தன்மையினை தமக்குள்தாமே உணர்ந்து கொள்வது எவ்வாறு? என்று எழுப்பப்படும் வினாக்களுக்கான பதில்களை பல வருடங்களாக இவ்வுலக மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டு ஆன்மீகப் பாதையில் தன்னை ஈடுபடுத்தி தன் ஞான குருவின் மேல் அசைக்க முடியாத பக்தி வைத்து பிரம்ம சாட்சாத்கார நிலையான ஆன்மா ஆன்மாவினை சார்ந்த நிலையான பரப்பிரம்ம சொரூபமாக வீற்றிருந்து எந்த பாரபட்சமும் இன்றி பொதுநல நோக்கோடு கடந்த 16 வருடங்களுக்கும் மேலாக தன்னை நாடிவரும் மக்களுக்கு தெளிவூட்டி ஞானமெனும் அறிவினை போதித்து நல்வழி காண்பித்து வருகிறார் ஆன்மீக ஜெகத்குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள்.
இவ்வாறு சுவாமிகளால் அருளப்பட்ட “மனிதர்களே விழித்துக் கொள்ளுங்கள்” எனும் தலைப்பிலான ஆன்மீக ஞான உபதேச தொகுப்பினை தொகுத்து வழங்குகிறோம்.
இந்தப் பிரபஞ்சமும் அதில் உள்ளடக்கமான பல கோள்களும் நட்சத்திரங்களும் எவ்வித தடைகளுமின்றி சர்வகாலமும் சுழன்று கொண்டும் தத்தமது கடமைகளை தவறாமல் நிகழ்த்திக் கொண்டும் தொடர்ந்தும் இந்த வினாடி வரையிலும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன ஆனால் சகல விதமான வளங்களும் ஒருங்கே அமையப் பெற்ற பூமியில் வாழும் மனிதர்களது செயல்களில் பல தடைகள் ஏற்படுகின்றன அவை ஏன்? எப்படி? எதற்காக? என்ற வினாவினை இதுவரை எவருமே கேட்கவில்லை மாறாக இது அவரால் வந்தது இவரால் வந்தது என்று கூறிக் கொண்டுதான் காலம் நகர்கிறதே தவிர இதன் உண்மைத்தன்மையினை ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்திட எவரும் தயாராக இல்லை காரணம் தமது சுய சக்தியான ஆன்ம சக்தியினை குறைவடைய வைக்கும் கருமங்களின் மேல் வைத்துள்ள பற்றும் பேராசையும் மனிதர்களது சிந்திக்கும் திறனை அடியோடு மழுங்கடிந்து விட்டது.
இவ்விடத்தில் ஒரு விடயத்தில் மாத்திரம் மனிதர்கள் தெளிவு நிலைக்கு வரவேண்டும் உதாரணத்திற்கு அடுக்கு மாடிகளையும் விலையுயர்ந்த ஆடம்பர வாகனங்களையும் பல தொழிநுட்ப சாதனங்களையும் மனிதர்கள் கண்டு பிடிக்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள் ஆனால் அவற்றினால் தாம் அடைந்த இலாபம் என்ன என்று பார்ப்பார்களேயானால் முடிவில் பூஜ்ஜியமே மீதமிருக்கும் ஏனெனில் இவற்றையெல்லாம் கட்டுவதற்கும் கண்டுபிடிப்பதற்கும் அல்லது கொள்வனவு செய்வதற்கும் தமது சக்தியினை பல வழிகளிலும் செலவு செய்கிறார்கள் இவ்வாறு தாம் செலவழிக்கும் சக்தியினை மீள பெற்று சமநிலை பேணாமல் அதாவது ரீசார்ச் செய்து சக்தி நிலையினை அதிகரிக்கச் செய்யாமல் போகுமிடத்து அவர்கள் உருவாக்கிய அல்லது கொள்வனவு செய்த பெறுமதிமிக்க பொருட்களால் உண்டாகும் மகிழ்ச்சியினையோ இன்பத்தினையோ அவர்களால் முழுமையாக அனுபவிக்கத்தான் இயலுமா சற்றே சிந்திப்போம்.
இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் மனிதர்கள் அனுபவிக்கத்தான் படைக்கப்பட்டுள்ளன இருந்த போதிலும் அவற்றின் நன்மை தீமை உணர்ந்து முழுமையான பயன்பெற வழி செய்வதே ஆன்மீகம்.
பிறக்கும் போது எந்த விதமான ஆசைகளோ, இன்பங்களோ, துன்பங்களோ, சொந்தபந்தங்களோ என்று எதுவுமே அறியாது பிறந்த மனிதர்கள் வளர வளர இவை அனைத்தையும் தனது உடைமைகளாக கற்பனை பண்ணிக்கொண்டு நான், எனது, என்னுடையது என்று அனைத்திலும் உரிமை கொண்டாடியதன் விளைவாக தன்னைப் படைத்த மூலசக்தியான ஆதி சக்தியினை மறந்து விட்டார்கள் அதனால் நொடியில் அழிவடையும் உலக பொருட்களின் மேல் நாட்டம் கொண்டு தமது சக்தியினை செலவழித்து இறுதியில் சக்தி குன்றியவர்களாக பல துன்பங்களை எதிர் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
எந்தப் பொருளும் தனது சக்தி குறைவடையும் போது அவை சிதைவடைந்து போய்விடும் என்பது நாம் அனைவரும் கண்கூடாக கண்டு வருகிறோம் அது போலவே மனிதனுக்கு சக்தியினை வழங்குவது எது? அது அவர்களது சுவாசமல்லவா! மனிதர்கள் பல கருமங்களை செய்து செய்து அக்கருமங்கள் முழுமைபெறாத சந்தர்ப்பத்தில் அவற்றால் அவர்கள் சொல்லொணா துன்பங்களை வேதனைகளை நோய்களை அனுபவித்து இறுதியில் அவ்வுடலுக்கு சக்தியினை வழங்கும் தம் மூச்சான சுவாசத்தினை தன் உடலை விட்டு இழந்து விடுகிறார்கள் இதுவே மரணமாகிறது அங்கே அவர்கள் ஆற்றிய கருமங்களும். நிறைவடையாமல் போகிறது அதுவே பல பிறவிகளுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது.
ஒரு வீட்டினை கட்டுவதானால் அதன் அத்திவாரம் பலமாக இடப்பட வேண்டும் அவ்வாறு அத்திவாரம் பலமாக அமைந்தால்தான் அக்கட்டடம் உறுதியாக இருக்கும் இவ்வாறு கல், மண், சீமெந்து கலந்து கட்டும் கட்டிடத்திற்குள் அது இடிந்து வீழாது எனும் நம்பிக்கையோடு அதற்குள் வசிக்கும் மனிதர்கள் தங்கள் மனித சரீரமான உடல் எனும் கட்டிடத்தினை கட்டித்தந்த இறைவன் சாதாரணமாக கட்டியிருப்பாரா அது எத்தனை பலமாக இருக்கும் என்பதனை சற்று சிந்திக்க வேண்டும் அவ்வாறான உறுதிவாய்ந்த மனித சரீரத்தை உடைய நாம் எதற்காக பயம் கொள்ள வேண்டும்? ஆக எங்கோ ஓரிடத்தில் மனிதர்கள் தாம் தவறு விட்டுக் கொண்டிருப்பதால்தான் அந்தப் பயம் உண்டாகிறது என்பதனை உணரமுடிகிறதல்லவா.
உதாரணத்திற்கு ஒரு வாகனத்தை பார்த்து கூறுவார்கள் ” இதற்கு மூச்சுப் போய்விட்டது” என்று அது போல்தான் மனிதனது மூச்சுப் போய் விட்டால் பேச்சுப் போய் விடும் அதாவது அவன் கட்டிய மாளிகையோ, கோபுரமோ, ஆடம்பரமாக வாழ்ந்த வாழ்க்கையோ என்று அவை எதைப்பற்றிய பேச்சுக்களும் அங்கே மீதமிருக்காது இறப்பிற்கு முன்னர் என்னுடையது, நான்தான் நிர்வகிக்கிறேன் என்று கூறிய அதே நபர் அங்கு உயிரற்ற சடலமாக நம் கண்முன்னேதானே கிடத்தப்பட்டிருக்கிறார் இப்போது ஏன் அவரால் அந்த வார்த்தையை பேச இயலவில்லை அவரின் செல்வச்செழிப்பில் வாழ்ந்த மனைவி, மக்கள், சொந்த பந்தங்கள் எல்லாம் ஏன் அங்கே ஓலமிட்டு அழ வேண்டும் மேலும் சிந்திப்போம்.
மனிதர்களே! ஏனெனில் அவரது மூச்சுப் போய் விட்டது அந்த மூச்சினை அந்த நபர் ஏற்கனவே கவனித்து அதன் பலத்தினை கூட்டும் வழிகளை உண்மை ஞானிகளை அணுகி தன்னால் இயன்றளவு தான தர்மங்களை பிறருக்கு செய்து அவர்கள் வழி நடந்திருந்தால் அவரது மூச்சு பலம் பெற்றிருக்கும் மென்மேலும் செல்வந்தராக அவர் சேர்த்த செல்வங்களோடும் சொத்துக்களோடும் நீண்ட ஆயுளோடும் நிம்மதியாக வாழ்ந்திருப்பார் அல்லவா ஏனையவர்களும் அழுதிருக்கமாட்டார்கள் அல்லவா ஆனால் மனிதர்களோ உண்மை ஞானிகளை நாடி அவர்கள் அருளினை பெற முயலவில்லை என்றே கூறலாம்.
அதுவேதான் ஞானி ஒருவரிடம் நபர் ஒருவர் கேள்வி ஒன்று கேட்கிறார் “சுவாமி குரு மாற்றம் நிகழ்கிறது அது நன்மை பயக்குமா” என்றார் அதற்கு ஞானியோ “ஆம் அது வருடத்தில் ஓரிரு முறை காலாகாலமாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் மனிதர்கள் தங்கள் மனங்களை மாற்ற முன்வராத வரையில் கிரகங்களின் மாற்றம் அவர்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்றார் உண்மையில் மனிதர்கள் ஞானிகளைப்பற்றிய தெளிந்த அறிவினைப் பெற முயல வேண்டும்.
ஞானிகள் தம் ஆரம்ப வாழ்வில் சாதாரண மனிதர்கள் படும் வேதனைகளைக்காட்டிலும் பன்மடங்கு வேதனைகளையும் சோதனைகளையும் சந்தித்தவர்களாக திக்கெட்டும் அநாதைகளாக உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, உறங்க இடமின்றி, ஆதரிப்பார் யாருமின்றி அலைந்து திரிந்தார்கள் அந்த சூழ் நிலையில் அவர்கள் இவ்வாறான வேதனைகள் தம்மை ஏன் தாக்குகின்றன என்று சிந்தித்தார்கள் அப்போது அவர்களுக்கு வழிகாட்ட தகுந்த ஞான குரு கிடைத்து அவர்களை தபத்தில் ஆழ்த்தினார் அதன் போது தன் மூச்சைக் குறைவடையச் செய்து பேச்சினை இல்லாமல் செய்யும் பொருட்கள் எவை எவை என்று தனக்குள்ளேயே கண்டுபிடித்து அவற்றையெல்லாம் துடைத்தெறிந்து மூச்சினை வளர்த்தார்கள் அவர்கள் மூச்சிலே அந்த முழுமையான இறைவனை கண்டார்கள் தான் வேறு இறைவன் வேறல்ல எனும் ஆன்மா ஆன்மாவினை சார்ந்த பிரம்ம சாட்சாத்கார பரி நிர்வாண நிலையடைந்தார்கள் உலக துன்பங்கள் அனைத்திலும் இருந்து விடுதலை பெற்றார்கள் இதுவே முற்றும் துறந்த நிலை.
தன் குருவின் அருளால் அந்த நிலையடைந்த பின்னர் அதனை உலக மக்களுக்கு போதித்தருளினார்கள் இவ்வாறு அவர்கள் போதித்தவைகளே காலத்தால் அழியாத ஞானப் பொக்கிஷமாக, வேதங்களாக, பொது மறையாக, பகவத் கீதையாக, ஆலயங்களாக, வழிபாட்டுத்தலங்களாக, உருவெடுத்து இன்று வரையில் மனிதர்கள் தம் சக்தியினை வளர்த்திட துணை புரியும் சாதனங்களாக மிளிர்கின்றன. எனவேதான் காலத்துக்கு தகுந்தவாறு மனிதர்கள் எதனைக் கண்டால் பற்றிப் பிடிப்பார்களோ அந்தத் தன்மையில் அந்த வடிவத்தில் குருவாக எழுந்தருளி வழி நடாத்தி வருகிறார் அந்த இறையெனும் பரம்பொருள்.
இவற்றையெல்லாம் யாருக்காக அவர்கள் செய்தார்கள் மக்களுக்காக மக்களது நலனுக்காவே தவிர தமக்காக எதுவுமே செய்யவில்லை
அவர்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு மேல் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கவும் வல்லவர்கள் விரல் சொடுக்கும் ஒரு நொடிப் பொழுதில் இவ்வுலகத்தினை ஆக்கவும் அழிக்கவும் வல்லவர்கள் கண் சிமிட்டும் நேரத்திற்குள் கண்டம் விட்டு கண்டம் கிரகம் விட்டு கிரகம் என்று மனித சரீரத்தோடே சென்று வரும் வல்லமை படைத்தவர்கள் இவ்வுலகில் எதை நினைத்தாலும் அதனை தமது காலடியில் கிடைக்கச் செய்யக்கூடிய வல்லமை பொருந்தியவர்கள்.
ஆனால் இத்தனை வல்லமைகளையும் தாம் அடைந்து விட்டதாக எந்த பெருமையும் கொள்ளாமல் அவற்றை வெளியுலகிற்கு காண்பிக்காமலும் சிறு குழந்தையினைப் போன்று சிரித்துக் கொண்டே தாம் ஆற்ற வந்த கடமைகளை மாத்திரம் எவ்வித தடையுமின்றி தகுந்த நேரத்தில் தகுந்த காலத்தில் தவறாமல் ஆற்றிக் கொண்டே இருக்கின்றனர் இதுவே ஞானிகள் வாழ்க்கை.
உலகமெனும் சேற்றுக்குள் ஒட்டாத தாமரை போன்று அப்பழுக்கற்ற ஆதவனைப் போன்ற அவர்களின் யோகாக்கினி எனும் ஞானத் தீயில் அவர்களை நாடிச் செல்லும் மனிதர்களது பாவச் சுமைகள் சாம்பலாகி விடும் என்பதே கட்டியம் கூறி நிற்கும் உண்மை.
இவ்வாறு ஞானிகளது மகிமை உணராது ஒரு வெள்ளைக்காரர் பாபா ஒருவரிடம் வினா ஒன்றினைத் தொடுத்தார் “சுவாமி உங்களுக்கு காமம் ஏற்படாதா?” என்றார் உடனே பாபாவும் சிரித்துக் கொண்டு “ஏற்படும்”
என்கிறார் உடனே அந்த வெள்ளைக்காரர் “அப்படியாயின் நீங்கள் ஞானியல்லவே” என்றார்.
அப்போதும் பாபா சிரித்துக் கொண்டு “எனக்கு அவ்வெண்ணம் ஏற்படும் ஆனால் நான் அதனை எடுத்துக் கொள்வதில்லை மாறாக நான் எனது சுய நிலையான ஆன்ம நிலையில் இருந்து எப்போதும் மாறாமல் இருக்கிறேன் என் ஆன்மாவிற்கு உகந்ததை மாத்திரமே நான் உள்வாங்குகிறேன் செயலாற்றுகிறேன் ஆன்மாவின் வளர்ச்சிக்கு பங்கம் விளைவிக்கும் எண்ணங்களை தவிர்த்து விடுகிறேன் ஆனால் சாதாரண மனிதர்களோ தமக்குள் எழும் அவ் எண்ணத்தினை பற்றி ஆராயாமல் அதன் முடிவுகளை உணராமல் எண்ணம் உண்டாகியவுடன் தன்னை அந்தச் செயலில் ஈடுபடுத்தி விடுகிறார்கள் அதனால் அச்செயலின் பலனை அவர்களே அனுபவிக்கிறார்கள்.
இவ்வாறு எண்ணமானது சக்தி பெற்று அவர்களை செயற்படுத்தி விடுகிறது ஞானிகள் எண்ணத்தை ஆராய்ந்து அதனை தாமே செயற்படுத்துகிறார்கள் இதுவே ஞானிகளுக்கும் போகிகளுக்கும் இடையேயான வேறுபாடு” என்றுரைத்தார் அந்தப் பாபா உடனே பாபாவின் பாதத்தில் வீழ்ந்து வணங்கிச் சென்றார் அந்த வெள்ளைக்காரர்.
இவ்வுலகில் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எண்ணற்ற பல எண்ணப் பிரவாகங்கள் மனிதனாக பிறந்த அனைவருக்கும் வரத்தான் செய்யும் அது நல்ல பலனைத் தரும் நல்லெண்ணமா தீய பலனைத் தரும் தீய எண்ணமா என்று மனிதர்கள் பகுத்தறியும் தன்மையினை பெற வேண்டும் இதுவே சுய அறிவு அதுவே ஞானம் எனப்படுகிறது.
இவ்வாறு ஞானிகளையும் அவர்கள் மகிமையினையும் உணர்ந்து அவர்களிடம் மனிதர்கள் தம்மை சரணடையச் செய்து வாழ்வாங்கு வாழ்ந்திடவே மனிதர்கள் எத்தனிக்க வேண்டுமே தவிர இவர் ஞானியா இவரது மூலம் என்ன என்று நதி மூலம் ரிஷி மூலம் ஆராய எத்தனித்தோமானால் முடிவில் அதற்கான எந்த முடிவினையும் மனிதர்களால் பெற இயலாது காரணம் ஞானிகள் எந்த மூலத்தில் இருந்து பிரிந்து வந்தார்களோ அந்த மூலத்தோடு தம்மை கலக்கச் செய்து விட்டார்கள் கடலில் கலந்த நதிகளை எவ்வாறு பிரித்துப்பார்க்க இயலாதோ பரமாத்மா எனும் கடலில் சங்கமித்த அவர்களையும் பிரித்தறிய இயலாது அவர்களும் சாட்சாத் பரமாத்மாவாகவே வீற்றிருக்கிறார்கள் இதுவே “பாம்பின் கால் பாம்பறியும்” என்று அன்றே கூறி வைத்துள்ளார்கள் “தன்னை உணர்ந்தால்தான் தலைவனை உணர முடியும்” அவ்வாறு உணர்ந்தவர்களே இத் தரணியில் கேடின்றி வாழலாம்.
மனிதர்கள் தகுந்த ஞான குருவினை சரணடைந்து தனக்குள் தன்னை தேடிக் கண்டு பிடித்துவிட்டால் இந்த தரணியில் அவர்கள் ஆற்றும் எந்தக் கடமைகளுக்கும் தடையேற்படாமல் அவர்களது ஆத்ம சக்தி பலம் பெற்று காத்து நிற்கும் அதனால் அவர்களது வாழ்வும் முழுமை பெறும் மாறாக தன்னை மாற்றிக் கொள்ள முனையாத மனிதர்கள் எத்தனை புண்ணிய தீர்த்தத்தில் நீராடினாலும் அவர்களது கருமாக்கள் கரைக்கப்படாது என்பதே நிதர்சனம்.
இதனை மேலும் விளக்கிட குருவிற்கும் சீடர்களுக்குமிடையே நிகழ்ந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தினை சுவாமிகள் கூறுகிறார்…. ஒரு குருவிடம் ஆன்மீக சாதனைகள் பயிலும் சில சீடர்கள் சேர்ந்து தாம் பல புண்ணிய தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு அங்குள்ள புண்ணிய நதிகளில் நீராடி தமது கருமாக்களை கரைத்திட எண்ணியுள்ளதாகவும் தமது குருவினையும் யாத்திரையில் பங்குபற்றிடுமாறும் கோரினார்கள் அதன்போது அந்தக் குரு தனக்கு பதிலாக ஒரு பாகற்காயினை அவர்களிடம் வழங்கி நீங்கள் செல்லும் யாத்திரையில் இந்தப் பாகற்காயினை என் சார்பாக எடுத்துச் சென்று புண்ணிய தீர்த்தங்களில் நீராட்டி கொண்டு வாருங்கள் என்றார் சீடர்களும் குருவின் ஆணைப்படி அவ்வாறே அந்தப் பாகற்காயினையும் தம்மோடு எடுத்துச் சென்று யாத்திரையின் போது புண்ணிய தீர்த்தங்களில் தாம் நீராடும் போது அதனையும் நீரில் அமிழ்த்தி எடுத்துக் கொண்டு யாத்திரையினை நிறைவு செய்து மீண்டும் தம் குருவிடம் வந்து வணங்கி பாகற்காயினை கையளித்தார்கள் அதன் போது குருவானர் அந்த பாகற்காயினை திரும்பவும் சீடர்கள் கரங்களில் கொடுத்து இந்தப் பாகற்காய் புண்ணிய தீர்த்தங்களில் நீராடியதால் அதன் கசப்புத் தன்மை போய் இனிப்புத் தன்மை பெற்றுள்ளது எனவே அதனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள் என்றார்.
ஆச்சரியத்தோடு அகலக் கண்கள் விரித்த சீடர்கள் குரு கூறியவாறே பாகற்காயினை வாயில் போட்டு மென்றார்கள் கசப்போ கசப்பு கடும் கசப்பாக இருந்தது உடனே சீடர்கள் ஆளையாள் பெரும் குழப்பத்தோடு நோக்கினர் அப்போது அந்தக் குரு அன்பார்ந்த சீடர்களே நீங்களும் நீங்கள் செய்த யாத்திரையின் பயனும் இந்தப் பாகற்காயினைப் போன்றதுதான்.
காரணம் அங்கே புண்ணிய தலங்கள் தீர்த்தங்கள் போன்றவற்றில் இறையருள் நிறையவே இருக்கிறது ஆனாலும் அதனை ஈர்த்துப் பெறவல்ல தன்மை உங்களில் உண்டாகுவதற்கு நீங்கள் குரு காண்பிக்கும் ஆன்மீக பாதையினை குரு பக்தியோடு தவறாமல் கடைப்பிடித்திருந்தால் ஆன்மாவின் சுய தன்மையினை உங்களுக்குள்ளேயே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் அதன் மூலம் ஆலய சிலைக்குள் என்ன தன்மை உள்ளது புண்ணிய தீர்த்தத்தில் என்ன தன்மை உள்ளது என பகுத்துணரும் தன்மையினை நீங்கள் பெற்றிருப்பீர்கள்.
ஆனால் இவ் உண்மையினை உங்களுக்குள் நீங்கள் உணராத வரையில் வெளியில் பார்ப்பதாலோ பிறர் கூறக் கேட்பதாலோ அந்த அனுபவம் உங்களுக்குள் ஏற்பட வாய்ப்பில்லை எனவே இந்தப் பாகற்காய் போலதான் உங்கள் பாவங்களும் எங்குமே கரைக்கப்படவில்லை அது அப்படியேதான் இருக்கின்றது.
முதலில் நீங்கள் யார்? என்று தேடுங்கள் பின்னர் உங்களுக்கு வழிகாட்டும் குரு யார்? அவரது தன்மை என்ன? என்று தானாகவே உணர்வீர்கள் இவ் உண்மையினை உணர்ந்தால் நீங்கள் எந்த யாத்திரைகளால் புண்ணிய தீர்த்தங்களால் உங்கள் பாவங்கள் கரைக்கப்படும் என்று நம்பியிருந்தீர்களோ அவை அனைத்தையும் குருவின் பாதத்தினை அபிஷேகம் செய்து பருகும் ஒரு துளித் தீர்த்தம் ஏற்படுத்திவிடும் என்றுரைத்தார்.
மனிதர்கள் தேவையற்ற செயல்களுக்காக ஓடியோடி களைத்துப் போய் தமக்குள் கலந்துள்ள ஆன்மஜோதியினை மறந்து போய் வாடி வாடி நாட்களும் கடந்து போய் கோடி கோடிப்பேர்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள் என்கிறார் சுவாமிகள்.
மனிதர்களே! இனிமேலாவது விழித்துக் கொள்ளுங்கள் மகா யோகி இவ்வுலக மக்களுக்கு பரிந்துரைக்கும் ஆன்மீக வழியாக மிக மிக இலகுவான தியான முறையொன்றினை அருளியுள்ளார் உலகில் பிறந்த மனிதர்கள் யாராகினும் சரி எந்த மார்க்கத்தினை பின்பற்றுபவராக இருந்தாலும் சரி எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் சரி அவர்கள் ஏழையோ, பணக்காரரோ, இருப்பவரோ, இல்லாதவரோ இப்படியான எந்தப் பாகுபாடும் இன்றி அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் குறித்த ஒரு நேரத்திற்கு எங்கோ ஏதோ ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்து உங்கள் சுவாசத்தினை கவனித்து வர வேண்டும் ஆரம்பத்தில் ஐந்து நிமிடங்கள் பின்னர் பத்து நிமிடங்கள் என சுவாசத்தினை கவனிக்கும் நேரத்தினை படிப்படியாக கூட்டிக் கொள்ளலாம்.
இவ்வாறு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தினந்தோறும் தவறாமல் இரு நேரங்கள் என்றில்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்களை மூடி சுவாசத்தினை கவனியுங்கள் தொடர்ந்தும் உங்கள் சுவாசத்தினை நீங்கள் கவனித்து வரும் போது உங்கள் சுவாசம் சீராகவும் உயிர்ச்சக்தி எனப்படும் பிராண சக்தியின் பலமும் அதிகரிக்கும்.
அப்போது உங்கள் உடலில் தாக்கத்தை உண்டாக்கி உங்களை உங்கள் கருமங்களை செய்ய விடாமல் தடுப்புக்களை அமைக்கும் கொடிய உயிர்க் கொல்லி நோய்கள், தொற்று நோய்கள், மன அழுத்தம், சோர்வு போன்ற வியாதிகள் முற்றாக நிட்சயம் குணமடையும் மூச்சுப் பலம் பெறும் நம் பேச்சும் நீடிக்கும் எதிலும் கவனம் செலுத்தும் நிலை வரும் எதனையும் பகுத்துணரும் தன்மையுண்டாகும் சுயமாக முடிவெடுக்கும் அறிவு வரும் எந்தக் காரியமும் வெற்றி பெறும் என்கிறார் மகா யோகி.
எனவே ஞானிகள் வாக்கு ஒரு போதும் பொய்த்துப் போகாது அவர்கள் வாக்கு வேதங்களாகியது, மந்திரங்களாகியது, ஏன் மொழிகளாகவும் மாறியது அப்பேற்பட்ட மகான்கள் அவசரமான இவ்வுலகில் அவசரமான மனிதர்களுக்கு அவசரமாக உரைக்கும் நல்வழியே இது எனவே இதனைப் பார்க்கும் படிக்கும் மனிதர்கள் பின்பற்றி வாழ்ந்தால் அவர்களுக்கு கோடி நன்மையுண்டாகும்.
தியானம் செய்தால் நிறைய இலாபம் கிட்டும் தியானம் செய்யாவிட்டால் நிறைய நஷ்டம் உண்டாகும் என்கிறார் சுவாமிகள் நாம் இன்னொருவரை திருத்த இயலாது நாம் நம்மை திருத்திக் கொண்டாலே போதுமானது இவ்வுலகம் தானாகவே திருந்திவிடும்.
அன்று வாழ்ந்த நம் முன்னோர்கள் நமக்காக பல மரங்களை நாட்டினார்கள் இயற்கையினை, நீர் நிலைகளை பாதுகாத்தார்கள், மண் வளம் கெடாதவாறும் நச்சு இராசனப் பொருட்களை பாவிக்காமலும் இயற்கை முறையில் விவசாயம் செய்து தனக்கும் தன்னை சூழ்ந்துள்ள விலங்குகளுக்கும் என எந்த உயிரினங்களுக்கும் பங்கம் விளைவிக்காமல் உண்டும் உறங்கியும் திடகாத்திரமானவர்களாக ஆயுள் கூடியவர்களாக வாழ்ந்து தானும் அனுபவித்து தன் தலைமுறைக்கும் அவற்றையும் அதனோடிணைந்த தர்மத்தினையும் விட்டுச் சென்றார்கள்.
ஆனால் அந்த தலைமுறையான நாம் அவர்களுக்கு எந்த வகையில் நன்றிக்கடன் செய்யப் போகிறோம் எதிர்வரும் நம் அடுத்த தலை முறைக்கு எதை கொடுக்க விளைகிறோம் என்றால் பணம் கொடுத்து சுத்தமான நீரினை அருந்த வேண்டிய நிலமையினையும், பணம் கொடுத்து சுத்தமான காற்றினை சுவாசிக்கும் நிலமையினையும், நச்சு இராசாயணங்கள் நிறைந்த சூழலையும், எங்கும் மரண ஓலங்கள் நிறைந்த அழுகுரல்களையும், மனிதனை மனிதன் பார்த்து அச்சமடைவதையும், தீராத தொற்று நோய்களையும், பசியினையும், பட்டினியையும் வழங்கி விட்டு செல்லப் போகிறோமா அல்லது அன்று நமது மூதாதையர் எமக்களித்த வரப்பிரசாதங்களையும் தர்மத்தையும் இறை வழிபாடுகளையும் பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்கு வழங்கப் போகிறோமா என்று ஒவ்வொரு மனிதர்களும் சிந்தித்து முடிவெடுக்கவேண்டிய மிக முக்கியமான காலகட்டம் இது எனலாம்.
எதனை மனிதன் அதிகமாக எண்ணி வாழ்கிறானோ அந்த விடயமே அவனுக்கு கிடைக்கும் அதுவே அவனது வாழ்க்கையில் நிலைக்கிறது இது இறைவன் மனிதனுக்கு வழங்கிய வரப்பிரசாதமாகிறது ஆகவே நல்லவற்றை எண்ணி நல்லவற்றை பேசி நல்லவற்றை வழங்கிட ஆன்மீக வழியினை பின்பற்றி வாழ அனைவருமே முயற்சிக்க வேண்டும் ஏனெனில் தமக்குள் தேட வேண்டியதை விடுத்து மனிதன் புறத்தில் தேடினான் அவ்வாறு புறத்தில் தேடியவைகளால் அகத்தில் துன்பத்தை அனுபவிக்கிறான்.
விஞ்ஞானிகள் படைக்கப்பட்ட பொருட்களை புறத்தில் தேடினார்கள் மெய்ஞானிகள் அப் பொருட்களையெல்லாம் படைத்தவரை அகத்தில் தேடினார்கள் அதனால்தான் இவ்வுலகினை துன்பக்கடலில் இருந்து மீட்டு இன்பக் கடலுக்குள் அழைத்துச் சென்றிடும் படகு போல பல்லாயிரக்கணக்கான ஞான உபதேசங்களை வழங்குகிறார்கள் இவையனைத்தும் மக்களின் நன்மைக்காகவே அன்றி தமக்காக அல்ல.
இரவு பகல் பாராது கண் துஞ்சாது, பசி நோக்காது, மான அவமானங்களை, இன்ப துன்பங்களை, இலாப நஷ்டங்களைக் கடந்து அருட் பெரும் ஜோதியாக வீற்றிருந்து அண்டத்தை இயக்கும் ஆதி சக்திதான் இந்தப் பிண்டங்கள் அனைத்தையும் இயக்குகிறது என்று திருவாய் மலர்ந்தருளுகிறார் ஆன்மீக ஜெகத்குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள்.
இவ்வுலகில் உள்ள அத்தனை பொருட்களோடும் அத்தனை விடயங்களோடும் மனிதனுக்கு மிக மிக நெருங்கிய தொடர்பு பேணப்படுகிறது அதனால் இயற்கை மரம் செடி கொடிகள் தமது வாழ்விற்கு தேவையானவற்றை இந்தப் பூமியில் இருந்து அளவுக்கு எடுத்துக் கொண்டு அதனால் உண்டாகும் நன்மைகளை பிறருக்கும் அவை வழங்குகின்றன இவ்வாறு பிறருக்கு அவை வழங்கி அவர்களது உயிர்ச்சக்தியினை மேம்பட உதவியமையினால்தான் நமது மூதாதையர்கள் இயற்கையினை தெய்வமாக வணங்கி வழிபட்டனர் பல தெய்வ வழிபாடுகளை உண்டாக்கி அதன் மூலம் அவற்றிற்கு நன்றி செலுத்தினர்.
ஆக எந்த சுயநலமும் இன்றி பிரதிபலன் எதிர்பாராது தான் பெற்றதை விட பல மடங்கு பிறருக்கு வழங்குவதே அன்பெனப்படுகிறது அந்த அன்பில்தான் இறைவனை காண இயலும் அன்பு ஒன்றே இவ்வுலகின் சுழற்சிக்கு மூலமாக இருக்கிறது எனவே கருணாமூர்த்தியான இறைவனை அன்பெனும் பக்தி சிரத்தையோடு வழிபட்டு அந்தத் தாயுமானவரின் அருளினைப் பெற்று அன்பு நிறைந்த உலகமாக மிளிரச் செய்திட ஆன்மீக வாழ்வினை கடைப்பிடிப்போமாக.
“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”