அமெரிக்காவில் அமையவிருக்கும் புதிய அரசில் கருப்பினத்தவர் ஒருவரை வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளார் ஜோ பைடன்.
குறித்த பதவியில் லாயிட் ஆஸ்டின் அமர்ந்தால் பென்டகன் தலைவராக பொறுப்பு ஏற்கும் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி 20-ம் திகதி ஜோ பைடன் ஜனாதிபதியாகவும், இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாகவும் பதவியேற்க உள்ளனர். அமையவிருக்கும் தமது அமைச்சரவையில் இடம்பெறும் நபர்களை ஜோ பைடன் அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஜெனரல் லாயிட் ஆஸ்டின்(67) என்பவரை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சராக ஜோ பைடன் நியமித்துள்ளார்.
இதனால் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தலைவராக அமெரிக்க வரலாற்றில் முதன்முதலாக ஒரு கருப்பினத்தவர் பொறுப்பேற்கிறார் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.
2003 ல் அமெரிக்க படைகளை பாக்தாத்துக்கு வழிநடத்தி, அமெரிக்க மத்திய படைக்கு தலைமை தாங்கியவர் லாயிட் ஆஸ்டின்.
லாயிட் ஆஸ்டின் நான்கு தசாப்தங்களாக தனது பணியை ராணுவத்தில் செலவிட்டவர். முன்னணி படைப்பிரிவுகள் முதல் தளவாடக் குழுக்களை இயக்குவது, ராணுவத்தில் ஆட்சேர்ப்பை மேற்பார்வையிடுவது, பென்டகன் தொடர்பான பல முக்கிய பணிகளைப் செய்தவர் லாயிட் ஆஸ்டின்.
லாயிட் ஆஸ்ட்டினை பதவியில் அமர்த்த ஜோ பிடன் திங்கள்கிழமை தனது விருப்பத்தை தெரிவித்ததாகவும், வெள்ளிக்கிழமை இது உறுதிபடுத்தப்படும் எனவும் முக்கிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இருப்பினும், லாயிட் ஆஸ்டின் நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.