இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து, ஆஸ்திரேலியாவில் கலக்கிவரும் தமிழக வீரர் நடராஜனின் தாயார் சாந்தா, சேலம் மாவட்டத்தில் சிக்கன் வறுவல் விற்று வருகிறார். மகன் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும், நடராஜனின் தாயாரின் இயல்பு மாறாத குணம் பொதுமக்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
தனது கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் தமிழ்நாடு பிரீமியம் லீக் தொடரில் விளையாடி, ஐ.பி.எல்லுக்குள் வழியாக இந்திய அணியில் நுழைந்தவர் நடராஜன். தனது துல்லியமான யார்க்கர் பந்து வீச்சு மூலம் பிசிசிஐ ன் கவனத்தைப் பெற்று தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வருகிறார்.
ஆனால், நடராஜனின் தாயார் சாந்தா, சின்னப்பம்பட்டியிலிருந்து ஜலகண்டாபுரம் செல்லும் வழியில், சின்ன கடை வைத்து சிக்கன் வறுவல் விற்பனை செய்து வருகிறார்.
இது குறித்து நடராஜனின் தாயார் சாந்தா, “என்னுடைய மகன் எவ்வளவு சம்பாதித்தாலும் நாங்கள் இந்தத் தொழிலை விடமாட்டோம். இந்தத் தொழிலை செய்துதான் என் மகனைக் கிரிக்கெட் வீரராக்கினோம். வறுமையில் வாடிய காலத்தில், என் குடும்பத்தையும் காப்பாற்றியது இந்தத் தொழில் தான். அதனால், சாகும் வரை இந்த தொழிலை நாங்கள் விடவும் மாட்டோம், நிறுத்தவும் மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
மகன் கோடிகளில் சம்பாதித்து சர்வதேச அளவில் பெயர் பெற்றாலும், இயல்பு மாறாமல் நடராஜனின் தாயார் வாழ்ந்து வருவது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.