Home Srilanka யுகங்களும் அவற்றில் வாழ்ந்த மனிதர்களது தர்மத்தின் விகிதாசாரமும்- ஆன்மீக உபதேச தொகுப்பு!

யுகங்களும் அவற்றில் வாழ்ந்த மனிதர்களது தர்மத்தின் விகிதாசாரமும்- ஆன்மீக உபதேச தொகுப்பு!

ஆன்மீகத்தினை நாடி அதனை பின்பற்றி நலன் பெற விரும்பும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்….!

“நல்லோரைக் காண்பதுவும் நன்று நல்லோர் சொற் கேட்பதுவும் நன்று அவர்கள் வழி நின்று கடைப்பிடித்து ஒழுகுவதும் நன்று” என்பதனைப் போல இவ்வுலகெங்கும் பரந்து வாழுகின்ற மனிதர்களது நல் வாழ்வு கருதி தினந்தோறும் தன்னை நாடிவரும் மக்களது வேதனை, துன்பங்களையெல்லாம் தானடைந்த உயர் ஞானத்தால் தர்மத்தினை போதித்து அந்த தர்மத்தினடிப்படையில் ஆன்மீகத்தை கடைப்பிடித்து வாழும் பட்சத்தில் ஏற்பட்ட துன்பங்கள், வேதனைகள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு கிட்டிட செய்திடும் வகையில் ஆன்மீக ஜெகத்குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தினை ஸ்தாபித்து மிக உயர்ந்த ஆன்மீக ஞான உபதேசங்களை அருளி வருகிறார் அதனையொட்டி அனைத்து மக்களுக்காகவும் ஜாதி, மதம், இனம், மொழி வேறு பாடின்றி சுவாமிகளால் அருளப்பட்ட ஆன்மீக ஞான உபதேசங்களை தொடர்ந்தும் தொகுத்து வழங்கி வருகின்றோம்.DSC 0067

அந்த அடிப்படையில் “நான்கு யுகங்களும் அதில் வாழ்ந்த மனிதர்களது தர்மத்தின் விகிதாசாரமும்” எனும் தலைப்பின் கீழே பல ஆன்மீக இரகசியங்கள் அடங்கிய அனைவருக்கும் நன்மை தரக்கூடிய பொக்கிஷமாகவும் மனிதர்கள் விடை தெரியாமல் தவிக்கும் வினாக்களான ஞானிகளும், யோகிகளும், மகான்களும், அவதாரபுருஷர்களும் இவ்வுலகில் ஏன் அவதரித்தார்கள்?, மனித சமுதாயம் அவர்களை பின்பற்றி வாழ்வதால் என்னென்ன நன்மைகள் கிட்டும்?, ஆன்மீகத்தினை கடைப்பிடிக்காமல் மனிதர்கள் வாழ முடியுமா?, கடவுள் என்றால் என்ன?, இறைவனே இல்லை என்று சிலர் கூறுகிறார்கள் உண்மையில் இறைவன் இருக்கிறாரா இல்லையா?, நான்கு யுகங்களின் தன்மைகள் எவ்வாறு இருந்தன? எப்படி  தர்மத்தின் விகிதாசாரம் குறைவடைந்து சென்றது?, இவற்றுக்கெல்லாம் காரணம் யார்?, என பல சந்தேகங்களுக்கு தகுந்த பதில்களோடு இந்த தொகுப்பு மிக மிக காத்திரமானதாக அமையவிருக்கிறது.

எனவே பொறுமை சகிப்புத் தன்மையோடு இதனை முழுமையாக படித்தால் பல நன்மைகள் உண்டாகும் உலக மக்கள் அனைவரும் பலன் பெற வேண்டும் எனும் உயரிய நோக்கிலேயே இதனை பதிவிடுகிறோம்.

யுகங்களும் அவற்றில் வாழ்ந்த மனிதர்களின் பண்புகளும்…

கலியுகத்தில் மக்கள் அவரவர் தன் சுயநலத்திற்காக அதர்ம வழியில் சென்று பாவங்களை செய்வதால் அதனால் பகைகுணம் மிகுந்தும் காணப்படுவதால் வாழ்வதற்கே சிரமப்படுவார்கள் அவர்களை நல்வழிப்படுத்த மீண்டும் பகவான் மனித ரூபத்தில் அவதரித்து மக்களை ஆன்மீக வாழ்வினை கடைப்பிடிக்கச் செய்து சத்தியமெனப்படும் தர்மத்தை நிலை நாட்டிட மனிதர்களுக்கு ஞான உபதேசங்களை நல்குவார் என்றும் மக்கள் அவற்றை கடைப்பிடித்து ஆன்மீக வாழ்க்கை வாழ்வார்கள் என்றும் அதன்போதே சத்தியயுகம்  தோற்றம் பெறும் என்று கூறப்படுகின்றது.

உதாரணத்திற்கு தர்மத்தை (அறம்) , ஒரு குதிரையோடு ஒப்பிடுவோம் தர்மம் என்ற குதிரைக்கு சத்திய யுகமான கிருத யுகத்தில் 4 கால்களும் நன்றாக ஓடின அதாவது குதிரையின் ஒரு காலை 25% தர்மம் என்று எடுத்துக்கொண்டால் 100% தர்மம் சத்ய யுகத்தில் இருந்தது மனிதர்கள் அவ்வாறே வாழ்ந்ததாக ஞானிகளும் வரலாறுகளிலும் கூறுகிறார்கள்.

அதுவே திரேதா யுகத்தில் தர்மம் என்ற குதிரையின் 3 கால்கள் மட்டுமே நன்றாக ஓடின ஒரு கால் செயல் இழந்துவிட்டது அதாவது 75% தர்மம் இருந்தது.

துவாபர யுகத்தில் குதிரையின் 2 கால்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன அதாவது 50% தர்மம் மட்டுமே இருந்தது.

இப்போது நாம் வாழும் கடைசி யுகமான கலியுகத்தில் குதிரையின் ஒரு கால் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது நான்கில் மூன்று கால்கள் ஒடிந்துவிட்டன அதாவது 75% அதர்மங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது 25% தர்மம் மட்டுமே இருக்கிறது.

இந்த விடயங்களை அடிப்படையாக கொண்டு தற்போது மனித சமுதாயத்தில் நிலவும் அவலங்களை எல்லாம் பார்க்கும் போது இது ஏற்றுக்கொள்ளும்படி தான் இருக்கிறது ஏனெனில் அளவுக்கதிகமான ஆசை, கோபம், குரோதம், பற்று, கவலை, பொறாமை, சூது, போதை, காமம் என்று அனைத்து தீய குணங்களும் மனிதர்களிடம் அளவுக்கதிகமாக காணப்படுகிறது அதனை அவர்கள் தமது செயல்கள் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

இவ்வாறு அளவுக்கதிகமாக உள்ள  தீயவை அனைத்தும் ஒன்றுகூடி மனிதர்களது ஆன்ம சக்தியான உயிர்ச்சக்தியின் வீரியத்தினை மழுங்கடிக்கச் செய்து தற்போதுதான் கலி தன்னுடைய வேலையினை ஆரம்பித்துள்ளது என்பதனை கண்கூடாக அறிய முடிகிறது.

இவ்வாறு தர்மத்தின் வீழ்ச்சியும் அதர்மத்தின் ஆக்கிரமிப்பும் படிப்படியாக நிகழ்ந்து அது தற்போது உச்சகட்டத்தை நெருங்கியுள்ளது எனவே உலக நாடுகள் அனைத்திலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டு செல்லுமாக இருந்தால் பொருளாதாரம் முற்றாக சரிவடைந்து  மனித சமுதாயம் பட்டினிச் சாவினை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகக்கூடிய ஏதுவான பல அறிகுறிகள் தென்படுவதாக மகா யோகி குறிப்பிடுகிறார்.

அதுவே புத்த பகவான் “ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்றும் இடைக்காட்டு சித்தர் “ஆசை கூடக் கூட துன்பம் ஓடி ஓடி வரும் ஆசையினை விட விட ஆனந்தமே” என்றும் கூறியுள்ளார்கள்.

இவற்றையெல்லாம் எதற்காக மனிதர்களை நோக்கி அவர்கள் கூறினார்கள் என்று ஆராய்ந்தால் இறைவன் எனும் பரம்பொருள் மனிதர்களை படைத்து அவர்களை துன்பம் கலவாத இன்ப வாழ்க்கை வாழ வைப்பதற்கு அவர்களுக்குள் தன்னை ஆன்மாவாக இருத்தி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இயற்கையினையும் இதர பல பொருட்களையும் படைத்து மனிதப் பிறவி எனும் அரிய பிறவிக்கு அறிவு எனும் விடயத்தையும் வழங்கி தனது படைப்பினை எதுவிதமான குறைகளுமின்றி நிறைவாக படைத்துள்ளார் இறைவன்.

இதனை மிக மிக அழகாக “ஐந்து பேர் வாழ்கின்ற வீடு அறிவான பொருளொன்றை தேடு பஞ்சு போல் பறந்திடும் வாழ்க்கை நாளை பாரி எமன் வந்தால் காடு” என்று இவ்வுலகில் 385 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்த மகா ஞானி ஞானாநந்தகிரி சுவாமிகள் இவ்வாறு அருளியுள்ளார் எனவே மனிதர்கள் இறைவன் தனக்கு வழங்கியுள்ள அறிவுச் செல்வத்தினை தனக்குள் தானே தேடி உணர வேண்டும் அவ்வாறில்லையேல் கலியிடம் அகப்பட்டு இந்த மனித வாழ்க்கை பஞ்சு போல் பறந்து போய்விடும் என்கிறார் மிக மிக தத்துவார்த்தமாக.

அதே போன்று அரிதான மானிடப் பிறவி பற்றி ஔவையாரும் “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனிலும் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது” என்று கூறியுள்ளார்.

மனிதர்கள் மாத்திரமே இவ்வுலகில் எவற்றை எல்லாம் எண்ணி வாழ்கிறார்களோ அந்த பொருட்களின் சக்தியினை அல்லது அந்த பொருட்களை அடையக்கூடிய வரத்தினைப் பெற்றவர்களாக விளங்குகின்றனர் இது மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய வரம் என்றே கூறலாம்.

இவ்வாறு எவற்றையெல்லாம் எண்ணி வாழ வேண்டும் எவையெவையெல்லாம் நன்மை பயக்கவல்லது எனும் ஆறாவது அறிவான பகுத்தறிவினை வழங்கி தன்னை ஆன்ம சொரூபமாக அவர்களுக்குள் இருத்திக் கொண்டு மனிதர்கள் தன்னை தொடர்புகொண்டு வாழும் போது துன்பங்கள் பாதிக்காதவாறு இன்ப வாழ்க்கை வாழலாம் என்றும் அவ்வாறு துன்பங்கள் ஏற்படுவதற்கான அடிப்படை காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்ப்பதால் மனிதர்கள் அளவுக்கதிகமாக ஆசையின் பக்கம் சென்று மனதால் அந்த ஆசையினை எண்ணியெண்ணி பெருக்கி அது பேராசையாக உருவெடுத்து அதுவே அவர்களது துன்பத்திற்கு மூலகாரணமாக அமைந்து விடுகிறது என்று உணரும் பகுத்துணர்வே அறிவு என்கிறார் மகா யோகி.

ஏன் மனிதனுக்கு ஆசைகள் அதிகரிக்கிறது என்றால் அவர்கள் ஆன்மீகத்தின் பால் மனதை நிலைப்படுத்தாமல் நிலையற்ற அழியும் பிற பொருட்களின் மேல் கொண்ட பற்று பேராசையாக மாறி அது மோகத்தில் நிலை பெற்று மோகத் தீ மனதிலே பற்றியெரிந்து தன் சுய தன்மையினை இழந்து தவிக்கிறார்கள் மனிதர்கள் அதனால் அவர்களது ஆன்ம சக்தியான உயிர்ச்சக்திக்கு பங்கம் ஏற்படுகிறது அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பல துன்பங்கள், வேதனைகள், நோய்கள் அவர்களை அவற்றிலிருந்து மீளமுடியாதவாறு பீடித்து விடுகின்றன இவ்வாறுதான் மனிதனை கலி ஆட் கொள்ளுகிறது.

அதன்காரணமாகத்தான் இவ்வுலகத்தினை இப்போதுதான் கலி பீடிக்க ஆரம்பித்துள்ளது என்கிறார் மகா யோகி ஏனெனில் தற்போது இவ்வுலகில் மனிதர்கள் நற்காரியங்களை தடையின்றி சந்தோசமாக செய்வதற்கும் அதன் ஊடாக இன்பத்தினை பெறுவதற்கும் இயலாமல் உள்ளதல்லவா இவற்றை அடிப்படையாக கொண்டே மகா யோகிகள் அவ்வாறு கூறுகிறார்.

இவற்றுக்கெல்லாம் யார் காரணம் என்று பார்ப்போமானால் மனிதர்கள்தான் காரணமாக இருக்கிறார்களே தவிர வேறு யாருமல்ல ஆனால் அதனை உணரமுடியாதவாறு மாயையான கலி மனிதர்களது புத்தியினை மறைத்து உலகத்தினை வேக வேகமாக பீடித்து தனது கட்டுப்பாட்டுக்குள் அவர்களை வைத்துள்ளதால் சாதாரண மனிதர்களால் இதன் உண்மை தார்ப்பரியத்தினை உணர இயலாமல் போய்விடுகிறது.

இவற்றை உணர்த்திடவே மாயையினை வென்ற மகான்களும், ஞானிகளும், யோகிகளும், அவதார புருஷர்களும் அவ்வப்போது மனிதர்களுள் மனிதராக அவதரித்து மனித குலத்திற்கு நேர்வழியான ஆன்மாவை நினைத்து வாழ்கின்ற ஆன்மீக வாழ்வினை உபதேசித்து மாயை இருள் அகற்றி மாதவனான பரமாத்மாவோடு இரண்டற கலந்திடவும் இவ்வுலக வாழ்க்கையினை துன்பம் கலவாமல் இன்பமாக வாழ்ந்திடவும் வழிகாண்பித்தார்கள் அதன் மூலம் உலகில் தர்மத்தை நிலைநாட்டினார்கள்.

ஞானிகள் உருவிலே இப் பிரபஞ்சத்தினை படைத்த இறைவனே வீற்றிருந்து எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் எவற்றையெல்லாம் தவிர்த்து வாழ வேண்டும் என்றும் வழி காண்பித்தார்கள் அவ்வாறு அவர்கள் போதித்த விடயங்களை ஏற்றுக் கொண்டு கடைப்பிடிப்பதுவும் அல்லது கடைப்பிடிக்காமல் போவதுவும் அவரவர் சுய விருப்பமே தவிர ஆன்மீகம் என்பது வற்புறுத்தி திணிக்கப்படும் பொருள் அல்ல என்பதனை மனிதர்கள் உணர வேண்டும்.DSC 0602 scaled

ஞானிகள் அருளிய விடயங்கள் தமது வாழ்விற்கு நன்மையளிக்கும் என்று உணர்பவர்கள் அதனை கடைப்பிடித்து ஒழுகலாமே தவிர ஞானிகள் அனைத்து மனிதர்களும் நலமாக வாழ வேண்டும் என்ற நோக்கிலேயே பொதுவாக உபதேசிக்கிறார்கள் அவற்றை மனிதர்கள்தான் எடுத்து கடைப்பிடித்து நேர்வழியில் வாழ முயற்சிக்க வேண்டுமே தவிர ஞானிகளுக்கு அந்த தேவை ஒரு போதும் கிடையாது.

மனிதர்கள் மாத்திரமே எண்ணி வாழக்கூடிய வரப்பிரசாதத்தினை பெற்றவராகிறார்கள் அவர்களுடைய ஆழ் மனம் கற்பகவிருட்சத்தினை போன்றது எதனை அவர்கள் அதிகமாக எண்ணி வாழ்கிறார்களோ நிட்சயம் அந்தப் பொருள் அவர்களுக்கு கிடைக்கும் இதுவே மனிதர்களது மனதின் இரகசியம் ஆக எதை எண்ணுவதால் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் நன்மை உண்டாகும் என்பதனை பகுத்துணரவே புத்தி எனும் அறிவாக, ஆன்ம சொரூபமாக இறைவன் மனிதனுக்குள்ளேயும் அந்த உண்மையினை அவர்களுக்கு உணர்த்த குருவாக வெளியேயும் இருந்து உபதேசித்து வருகிறார்கள்.

மனிதர்கள் தங்கள் மனங்களில் பதித்து வைத்துள்ள பாவ எண்ணங்களை ஞானிகள் காண்பிக்கும் ஆன்மீக வழியில் தம்மையும் இணைத்துக் கொண்டு அவர்களை முழுமையாக சரணடைந்து இல்லாமல் செய்யலாமே தவிர தமது கருமத்தினை வென்றிட வேறு எந்த மார்க்கமும் மனிதர்களுக்கு கிடையவே கிடையாது மனிதர்கள் தத்தம் மனங்களை சுத்திகரிக்க அவர்கள்தான் முன்வரவேண்டும் அதற்குண்டான வழிமுறைகளையும் நுணுக்கங்களையும் கற்பிக்க ஞானிகள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு தமது பிள்ளையினை கல்வி பயில்வதற்காக அந்தப் பிள்ளையின் தாய் தந்தை பாடசாலையில் இணைப்பதற்கான அனைத்து விடயங்களையும் ஒழுங்குகளையும் மேற்கொண்டு அவர்களை இணைத்து விடத்தான் முடியுமே தவிர அவர்களுக்கு பதிலாக அந்த தாய் தந்தையோ உற்றார் சுற்றம் உறவுகளோ கல்வி பயில இயலுமா? சற்றே சிந்திப்போம் அந்தப் பிள்ளை படித்து வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ வரவேண்டும் என்று அனைவரும் நினைத்தாலும் அதற்கும் அந்தப் பிள்ளைதான் முன்வந்து உணர்ந்து ஆர்வத்தோடு கல்வி கற்றுத் தேற வேண்டும் அங்கும் அவர்களுக்கு ஆசிரியரால் உத்வேகத்தினையும், ஏற்படும் சந்தேகங்களுக்கு தெளிவினையும், இலகுவாக கற்பதற்கான நுணுக்கங்களையுமே கூற இயலும்.

இவ் உதாரணம் போன்றே உலகத்தில் மனிதன் சுகமாக வாழ்வதற்காக அனைத்தையும் படைத்து இறைவன் மனிதர்களுக்கு வழங்கியுள்ளார் அவற்றை பயன்படுத்தி சுகமாக வாழ்வது எவ்வாறென்றும் ஞானிகள் உருவத்தில் வீற்றிருந்து வழியுரைக்கின்றார் அவற்றை கேட்டு சரியாக கடைப்பிடிப்பது மனிதர்கள் கடமையாகிறது அவற்றை கடைப்பிடிக்காமல் போனாலும் அவர்களுக்கு நஷ்டமில்லை அதனால் இவ்வுலகில் வாழும் மனிதர்களுக்கே கஷ்டமும் நஷ்டமும் ஏற்படுமென்று மகான்கள் எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

மனிதர்கள் இதுவரையில் எண்ணியிருந்தவை அதன் மூலம் ஆற்றிய செயல்கள் அனைத்தும் பாவத்தினை அடிப்படையாக கொண்டவையாதலால் “பாவத்தின் சம்பளம் மரணம்” என்பதனைப்போன்று இன்று இவ்வுலக மக்கள் தத்தம் செய்த செயலுக்கான சம்பளத்தினை பெற்றிட வேகமாக சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதனை உணரமுடிகிறதல்லவா! உதாரணத்திற்கு மது போதையினை ஒருவருக்கு வழங்கி மதிமயங்கச் செய்து அழைத்துச் செல்வதனைப் போன்று மாயையான கலி ஆசையெனும் போதையினை ஊட்டி மரணத்தை நோக்கி மனிதர்களை அழைத்துச் செல்கிறது அதன் காரணமாகத்தான் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள்.

கிருத யுகத்தில் மனிதர்கள் தெய்வமாகவே வாழ்ந்தார்கள் அதாவது தர்மத்தினை முழுமையாக கடைப்பிடித்து வாழ்ந்தார்கள் அதனால் அங்கே இறைவன் அவதாரம் நிகழ்த்த வேண்டிய தேவை ஏற்படவில்லை அதனைத்தொடர்ந்து திரேதா யுகத்தில் சிறிது தர்மம் குறைவடைந்த போது அதனை நிவர்த்திக்க ஸ்ரீ ராமராக அவதாரம் எடுத்து வந்து தர்மத்தை நிலை நாட்டிச் சென்றார் பகவான் அதன் பின்னராக தர்மம் சரிவடைந்து சரி பாதியாகி தர்மத்திற்கு நிகராக அதர்மம் இருந்தது அதனை சீர் செய்திட பகவான் ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்து கடும் தர்மசங்கடமான நிலைகளையெல்லாம் சமாளித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே மகா பாரதத்தில் குருச்சேத்திரப் போரின் மூலம் தர்மத்தினை நிலை நிறுத்தினார் அதன் பின்னராக மக்கள் தியான ஜெபங்களை மறந்து ஆசையின் பக்கம் மனதினை திருப்பி படைத்தவரையும் மறந்து அவர் படைத்த பொருட்களின் மேல் தீராத மோகம் கொண்டதனால் கலியுகம் தோற்றம் பெற்றது.

அன்று ஞானிகளின் கணிப்பின் படி கலியுகத்தில் தர்மத்திற்கு 1% கூட இடமில்லை என்றுதான் இருந்தது ஆனாலும் தர்மத்தை கடைப்பிடித்து வாழ்பவர்கள் ஒரு சிலர் தற்போதும் வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களது கணிப்பையும் தாண்டிய ஒரு அரிதான விடயம் எனவும் அவ்வாறானவர்களின் தர்மத்தினால்தான் இவ்வுலகின் தர்மச்சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறதென்றும் மகா யோகி திருவாய்மலர்கிறார்.

முன்னைய யுகங்களை விட மிகவும் சவால் நிறைந்த யுகம் கலியுகம் எனலாம் அவ்வாறெனில் கலியுகத்தில் இறைவனின் அவதாரம் எத்தனை மகா சக்தி பொருந்தியதாக இருக்கும் என்று சற்றே சிந்தித்து பார்ப்போம் அதனை மிக மிக சூசகமாக மகா யோகியின் குருநாதரான காயத்திரி சித்தர் பகவான் முருகேசு சுவாமிகள் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு கூனியால் இராமாயணமும் ஒரு சகுனியினால் மகாபாரதமும் இவ்வுலகிற்கு கிடைத்தது அது போல கலியுகத்தில் பல கூனிகளும் பல சகுனிகளும் பல்கிப்பெருகி காணப்படுகிறார்கள் என்பார் சுவாமிகள் இக்கூற்றினை வைத்துப் பார்க்கும் போது மீண்டும் இவ்வுலகிற்கு மாபெரும் வரலாற்று காவியம் கிடைக்கப்போகிறது என்பதனை ஊகிக்க முடிகிறது.

மனிதர்களின் மனங்களை செம்மையாக்கவே மந்திர ஜெபங்களும் தியானமும் இறை வழிபாடுகளும் அவற்றை கடைப்பிடிக்கவென மார்க்கங்களும் மதங்களும் ஞானிகளால் உருவாக்கப்பட்டன அவற்றின் மூலம் மனிதர்கள் தத்தம் மனங்களை செம்மைப்படுத்தி இவ்வுலக வாழ்வினை சிறப்பாக வாழ்ந்து அவ்வாறு வாழும் போதே பரப்பிரம்ம சொரூபத்தில் தம்மை ஐக்கியப்படுத்திடவே பல வழிகளை காண்பித்தார்கள்.

உதாரணத்திற்கு ஒரு இடத்திற்கு பயணிக்க வேண்டும் அந்த பயணத்தினை இலகுவாக்க ஒரு வாகனம் தேவை அது எந்த வாகனமாக இருந்தாலும் சரி செல்ல வேண்டியது பயணம் மாத்திரமே அந்த பயணத்தினால் அடைய வேண்டிய இடமான இலக்கும் ஒன்றாக இருக்கும் போது பயணப்படும் பாதையில் உனது வாகனம் தரமில்லை எனது வாகனம் தரமானது என்று சண்டையிட்டுக் கொண்டு அவர்கள் அடைய வேண்டிய இலக்கினை அடையவிடாமல் தடை செய்வதனைப் போன்று மனிதர்கள் அடைய வேண்டிய பொருளாம் ஆண்டவனை அடைய வேண்டிய பயணத்தை விடுத்து மேலே உதாரணத்திற்கு கூறியதனைப் போன்று செல்ல வேண்டிய பாதையில் தர்க்கப்பட்டு சண்டை பிடித்துக் கொண்டு கிடப்பதனைப் போல என் மதம் பெரிது உன் மதம் பெரிதென்ற தர்க்கத்தில் ஈடுபடுகிறார்கள் அதனால் அவர்களால் தமது இலக்கினை அடைய இயலாமல் போய் விடுகிறது.

அதுவே காயத்திரி சித்தர் பகவான் முருகேசு சுவாமிகள் “மதத்தால் இறை பக்தி வளர வேண்டுமே தவிர அது மத வெறி ஆகக்கூடாது” என்கிறார் இவற்றை மனிதர்கள் நன்கு அலசி ஆராய வேண்டும்.

சுய அறிவினை மயக்கி இலக்கினை அடைய இயலாதவாறு கவனத்தை திசைதிருப்பி அதன்பாட்டிற்கு மனிதர்களை ஆட வைத்துக் கொண்டிருக்கிறது கலி “நான் செய்கிறேன் நான் செய்கிறேன்” என்று அனைத்தையும் தான் செய்வதாக மனிதர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அப்படி அவர்களை எண்ண வைத்து கலியானது தனது வேலையை செய்து கொண்டிருக்கிறது என்பது உடனே புரியாது போகப் போகத்தான் அது புரியும்.

நான் ஆன்மீகத்தை கடைப்பிடிக்கவில்லை என்பவர்கள் தங்கள் உலக கடமைகளை சரிவர செய்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் சரியாக இல்லை அப்படியாயின் அவர்கள் அடைந்த இலாபம் என்ன?  சற்று சிந்திப்போம் மனிதனாக பிறந்தால் ஆன்மீகத்தினை கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியதி அந்த நியதியினை மீறும் போது அது விதி மீறலாகிறது சாதாரணமாக நாட்டில் உள்ள சட்டத்தினை மதித்து வாழாதவர்களுக்கு தண்டனை உண்டெனில் உலகினை படைத்த இறைவன் வகுத்த விதியினை மீறும் போதும் தண்டனையினை அனுபவிக்கத்தானே வேண்டும் அதுவே தற்போது தமது கடமைகளை ஆற்ற முடியாதவாறு வீடுகளுக்குள் மனிதர்கள் முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று உணர முடிகிறதல்லவா! இதனை மனிதர்கள் சிந்திக்க வேண்டும்.

மனிதர்களால் ஆன்மீகத்தினையும் சரியாக கடைப்பிடிக்க இயலவில்லை உலக கடமைகளையும் சரியாக ஆற்ற இயலவில்லை இவ்வாறு மக்கள் அவரவர் கடமைகளை செய்யாத காரணத்தினால்தான் பல துன்பங்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் அதனை வெற்றி கொள்ள ஆன்மீகம் ஒன்றே துணைபுரியும் ஏனையவை அனைத்தும் துன்பத்தையே தருகின்றன.

ஆன்ம ஞானிகள் கூற்றினை மதித்து அவர்கள் காண்பித்த ஆன்மீக வாழ்வினை கடைப்பிடித்து வாழ்ந்திருந்தால் சிறையில் அடைபட்டது போன்ற தற்போது மனிதர்கள் வாழும் துன்பியல் வாழ்க்கையினை தவிர்த்திருக்கலாம் அல்லவா! ஆன்மீக வாழ்க்கையினை கடைப்பிடித்து வாழுகின்ற ஞானிகள் குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டு அந்த வாழ்க்கை அவர்களது ஆன்மீகத்தை பாதிக்காமலும் அனைத்து உலக கடமைகளையும் தகுந்த கால நேரத்திற்கு எந்த தடைகளுமின்றி நிகழ்த்தி வருகிறார்கள் அவ்வாறே தமது ஆன்மீக கடமைகளையும் ஆற்றி வருகிறார்கள் அவ்வாறு அவர்கள் வாழ்ந்து காட்டி போதித்தருளும் வாழ்க்கையே ஆன்மீக வாழ்க்கையாகிறது.

மனிதர்களுக்கும் – இறைவனுக்கும் ஆன்மீகத்திற்கும் – ஆன்மாவிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது இவ்வுலகில் ஆன்மீகத்தை கடைப்பிடிப்பவர்கள் தமக்கு எதுவும் தேவையில்லை தாம் அனைத்திலும் இருந்து தம்மை விடுவித்து விட்டதாக கூறவும் இயலாது ஏனெனில் இவ்வுலகில் மனிதப் பிறவியெடுத்தால் தனக்குரிய அத்தனை கடமைகளையும் சரியாக ஆற்றி முடிக்க வேண்டும் மாறாக நான் ஆன்மீகவாதி கண்களை மூடிக்கொண்டு காவியுடுத்துக் கொண்டும் யாரோடும் பேசாமல் மௌனமாக வாழ்கிறேன் என்று பாசாங்கு செய்வதால் அவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள் அதனால் அவர்களும் கலியின் பிடியில் சிக்கிவிடுகிறார்கள்.

அதே போல நான் ஆன்மீகத்தினை கடைப்பிடிக்கவில்லை அதனால் இறைவன் இல்லை என்று மறுக்கிறேன் என்றும் கூறவும் இயலாது அங்கே அவர்களின் உடலினை இயக்கும் பொருள் ஆன்மா அதனை தனக்குள் வைத்துக் கொண்டு அவ்வாறு கூறித்திரிவது பூனை தன் கண்களை மூடிக் கொண்டு பாலினை குடிப்பதற்கு ஒப்பான காரியமாகிறது அவர்களால் ஆன்மா இன்றியும்  ஆன்மீகம் இன்றியும் வாழவே இயலாது அவ்வாறானவர்களையும் கலி பீடித்து துன்பத்தை கொடுத்து விடும்.

இப்போது புரிகிறதல்லவா ஏன் மனிதர்கள் சிறையில் அடைபட்டாற்போன்று வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் பயந்து பயந்து துடிதுடிக்கிறார்கள் என்று ஏனெனில் இவர்கள் எவருமே இதுவரையில் உண்மை ஆன்மீகத்தினை கடைப்பிடிக்கவில்லை என்பது தெட்டத்தெளிவாக மனிதர்கள் அனைவரும் தமது ஊனக்கண்களாலேயே காணக்கூடிதாக இருக்கிறது.

எனவேதான் உண்மை ஆன்மீகம் என்றால் என்ன அதனை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதனை தானடைந்த உயர் ஞானத்தால் ஞானத்தை பகுத்து பாமர மக்களுக்கும் புரியும் விதத்தில் ஞான உபதேசமாக அருளி வருகிறார் மகா யோகி.

எனவே ஆன்மீகத்தினை கடைப்பிடிப்பவர்கள் தாம் இவ்வுலகினை துறந்து விட்டேன் என்று கூறவும் இயலாது அதே போல நான் ஆன்மீகத்தை கடைப்பிடிக்கவில்லை இறைவன் இல்லை என்று கூறுபவர்களும் நான்தான் அனைத்தையும் செய்கிறேன் இவை என்னுடையது என்று சொந்தம் கொண்டாடவும் இயலாது ஏனெனில் உயிரான ஆன்மாவினை உடலினுள் வைத்துக் கொண்டு அவ்வாறு கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று எண்ணிப்பாருங்கள்.

ஆன்மாவானது மனிதர்கள் உடலுக்குள் இருக்கும் வரையில் ஆன்மீகமும் இருக்கும் அதனை உணர்ந்து கொள்ளவும் உணர்த்தவுமே அவதார புருஷர்கள் ஞானிகளாக இவ்வுலகில் அவதரிக்கிறார்கள் அவர்கள் பற்றற்று தாமரை இலையின் மேலுள்ள நீர் போன்று இவ்வுலக விடயங்களில் ஒட்டாமல் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்  எந்த எதிர்பார்ப்புமின்றி சுயநலமுமின்றி முழுமையான அன்பால் தமது கடமைகளை சிறப்பாக ஆற்றும் வாழ்க்கையினை காண்பிப்பது ஆன்மீகம் ஒன்றே.

ஒவ்வொரு மனிதர்களும் எந்த தடைகளுமின்றி தமது உடலால் ஆற்றும் காரியங்கள் அனைத்தும்  எப்போது முழுமை பெறுகிறதோ அன்றுதான் மனிதர்கள் துன்பம் கலவாத இன்ப வாழ்க்கையினை வாழுவார்கள் அதுவே சத்திய யுகமான கிரேதா யுகமாகும் என்கிறார் மகாயோகி.

swami

அந்த யுகத்திற்குள் காலடியெடுத்து வைக்கும் முன்பு மனிதர்கள் பல துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது வைரம் ஒளிர வேண்டுமெனில் அது பட்டை தீட்டப்பட வேண்டும் அது போல தங்கம் ஜொலிக்க வேண்டுமெனில் அது பல முறை புடம் போடப்பட வேண்டும் சோதனையும் வேதனையும் இறைவன் வழங்கிய அருட் கொடை என எண்ணிக் கொண்டு மனிதர்கள் தமக்கு ஏற்படும் துன்பங்களை பொறுமை, சகிப்புத்தன்மையோடு எதிர்கொள்ள தம்மை தயார் படுத்திக் கொண்டு பேரின்ப வாழ்வான ஆன்மீக வாழ்க்கையினை இனிமேலாவது கடைப்பிடித்து வாழ்ந்திட முனைய வேண்டும்.

“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”

Contact 👇👇👇
SHRI PEERINPAGNANA PEETAM, Batticaloa, Srilanka
T.P- 0094652226801

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -