Home Spiritual சுயத்தினை உணர்ந்து சுகமாக வாழுங்கள்- மனிதர்களே! இனியும் காலம் தாழ்த்தாதீர்கள்!!

சுயத்தினை உணர்ந்து சுகமாக வாழுங்கள்- மனிதர்களே! இனியும் காலம் தாழ்த்தாதீர்கள்!!

ஆன்மீகத்தினையும் ஆன்மீக வாழ்வினையும் கடைப்பிடிக்கின்ற மற்றும் கடைப்பிடித்து வாழ முனைகின்ற அன்பர்களுக்கு இனிய வணக்கங்கள்.

உலக மக்களனைவருக்கும் ஆன்மீகத்தின் மூலம் அருள் வழி காண்பித்திட இலங்கை, மட்டக்களப்பில் ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தினை ஸ்தாபித்து எந்த விதமான பிரதிபலன்களையும் எதிர்பாராது உலக சேமத்திற்காகவும் அதில் வாழும் மனிதர்களது நல் வாழ்வு கருதியும் கடந்த 16 வருடங்களுக்கும் மேலாக ஆன்மீக ஜெகத் குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் போதித்தருளி வருகிறார்.WhatsApp Image 2020 12 25 at 20.19.05

அதன் அடிப்படையில் சுவாமிகளால் அருளப்பட்ட மனிதர்களின் சுய தன்மைகள் என்ன? அந்த தன்மையை அடைந்திடவும் அதன் மூலம் முழுமையான பேரின்பத்தினை அனுபவித்து வாழ்வாங்கு வாழ்வது பற்றியும் விளக்கும் கனதியான ஆன்மீகத் தொகுப்பாக இது அமையவிருக்கிறது எனவே பொதுநலம் வாய்ந்த ஆன்மீக தொகுப்பினை சுய நலத்தினை விடுத்து சற்றே நேரமொதுக்கி படித்து தெளிவினை அடைந்திடுங்கள்.

மனிதர்களின் ஆயுளை அறுக்கும் ஆறு வாள்கள் பற்றி மகா பாரதத்தில் விதுரர் திருதராஷ்டிரனுக்கு உரைத்த விடயங்களோடு இந்த தொகுப்பு ஆரம்பமாகிறது

ஒரு முறை திருதராஷ்டிரன் தன் சகோதரர் விதுரரிடம் ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர் எனினும் இதுவரை நூறு வருடங்களைக் கடந்த மனிதர்கள் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது இதற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டார்.

விதுரர் பதில் சொன்னார் ‘‘அரசே மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு

முதலாவது வாள்-  கர்வம்
மனிதர்களில் பலர் இந்த உலகில் நானே கெட்டிக்காரன் மற்றவரெல்லாம் முட்டாள் என்று நினைக்கிறார்கள் ஒருவனுக்கு கர்வம் ஏற்பட்டால் அதுவே அவனது அழிவுக்கு காரணமாகி விடுகிறது ஆகவே கர்வம் இல்லாமல் இருக்க தனது குற்றம் குறைகளைப் பார்க்க வேண்டும் பிறரிடம் நற்குணங்களையே பார்க்க வேண்டும்

இரண்டாவது வாள்- அதிகம் பேசுவது தனக்குப் பேச விஷயங்கள் இல்லாதபோதும் வீண் பேச்சு பேசுபவன் வீண் வம்பை விலைக்கு வாங்குகிறான்.

மூன்றாவது வாள்- தியாக உணர்வு இன்மை அதீத ஆசையே மனிதனின் தியாக உணர்வைத் தடுக்கிறது இதை உணர்ந்தால் தியாக உணர்வு தானே வரும்

நான்காவது வாள்- கோபம்
கோபத்தை வெல்பவனே உண்மையான யோகி கோபம் வந்து விட்டால் தர்மம் எது? அதர்மம் எது என்பது தெரியாமல் போகிறது விவேகம் இழந்து பாவங்களைச் செய்ய நேரிடுகிறது.

ஐந்தாவது வாள்- சுயநலம்
சுயநலமே எல்லா தீமைகளுக்கும் காரணம் சுயநலம் கொண்டவன் தனது காரியத்துக்காக பாவம் செய்யத் தயங்குவதில்லை.

ஆறாவது வாள்- துரோகம்
இந்த உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிது அப்படிப் பட்டவர்களுக்குத் துரோகம் செய்வது தவறு.

இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான் என்றுரைக்கிறார் விதுரர்.

இவ்வாறு மனிதர்கள் தம் சுய தன்மையினை உணர இயலாதவாறு மாயை மனதில் சலனத்தை உண்டாக்கி திசைதிருப்பி துன்பத்தினை பரிசாக வழங்கிட அழைத்துச் செல்கிறது கலி.

உலகில் நிகழும் எந்த ஒரு செயலுக்கும் ஒரு விலை உள்ளது அதாவது அதனை ஊதியம் என்றும் கூறலாம் அது போல மனிதர்கள் இதுவரையில் மனதில் சலனத்தோடும் தம் சுய தன்மையினை அறியாமலும் ஆற்றிய  செயல்கள் அனைத்துக்குமான ஊதியமாக உலக நாடுகள் முழுவதையும் செயலிழக்க செய்து வருகிறது கொடிய தொற்று நோய் என்பது கண்கூடு.

ஆனாலும் அதனை எதிர்கொண்டு வாழ்ந்திட மனிதர்கள் தத்தம் சுயத்தினை உணரவேண்டும் தனக்குள் வீற்றிருக்கும் சுய பொருளினை உள்முகமாக தேடி உணர வேண்டும் ஏனெனில் வெளியில் தேடித் தேடி அலைந்ததன் விளைவாகவே தற்போது மனிதர்கள் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரின் பார்வைக்கும் மிகத் தெளிவாக தெரிகிறது இருந்த போதும் மனிதர்களின் சுயநலம் ஆன்மீக வாழ்வின் பொதுநலத்தினை உணரவிடாமல் தடுக்கிறது.

இவ்வுலகில் இயற்கையாக படைக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களும் படைப்பின் போதிருந்த தன்மைகளில் இருந்து தமது தோற்றம் முதற் கொண்டு தமது இறுதிக்காலம் வரையிலும் பல நன்மை பயக்கும் விடயங்களையே தாம் வாழும் சூழலில் வெளிப்படுத்தி ஏனையவர்களுக்கும் எவ்வித பாகுபாடின்றி பல நன்மைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.d648924d 3a78 4c8c 8499 3cf86a492596

ஆனால் இவற்றையெல்லாம் விட மிக மிக உன்னத பிறவியான மனிதர்கள் மாத்திரம் அதற்கெல்லாம் விதிவிலக்காக வாழ்கின்றார்கள் என்பதனை பல விடயங்களினூடு நேரடியாகவே காண முடிகிறது மனிதர்கள் இயற்கையின்  வரப்பிரசாதங்களை பெற்று அவற்றை அனுபவித்து வாழ்ந்து வந்தாலும் அவர்களால் மீண்டும் இயற்கைக்கு நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபட முடியாவிட்டாலும் அவற்றுக்கு தீங்கு விளைவிக்காமல் கூட அவர்களால் வாழ இயவில்லை.

இதற்கு காரணம் மனிதர்களது பிறப்பின் போதிருந்த சுய தன்மையினை அவர்கள் வாழும் சூழல், அச்சூழலின் தன்மைகள் அனைத்து விடயங்களையும் மறைத்து மனித தர்மத்தினையும் சுய ஒழுக்க விதிகளையும் திசைமாற்றி கவனத்தை சிதறடித்து மனிதம் எனும் சுய தன்மையினை மழுங்கடித்து விட்டது மனிதர்களின் புனிதம் மறைந்து கிடக்கிறது இதன் காரணமாக கலியானது துரிதமாக செயற்பட்டு மனிதர்களுக்கே மீண்டும் பல துன்பங்களை பரிசாக வழங்கிட தாமச, ராட்சச குணங்களான அசுர குணங்களை அவர்கள் மனதிற்குள் குடியிருத்தி விட்டது.

இவ்வாறு மனிதத் தன்மையான அன்பு,  பரிவு, பரோபாகார சிந்தனை, கருணை, பிற உயிர்களை தன் உயிர் போல மதித்து வாழும் தன்மை, போன்ற நற்குணங்களுடன் வாழ வேண்டிய மனிதர்கள் அசுர குணங்களான பேராசை, காமம், கோபம், குரோதம், பொறாமை, சுயநலம் போன்ற தீய குணங்களால் ஆட் கொள்ளப்பட்டுள்ளார்கள் இதன் காரணமாக தீய எண்ணப் பிரவாகங்கள் மனிதர்கள் மனதினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு மென்மேலும் அவர்களுக்கு துன்பத்தினையே வழங்குகின்றன.

தத்தமது சுய தன்மையினை உணராத மனிதர்கள் இயற்கையின் அருட் கொடைகளை உதாசீனம் செய்து அவற்றை மதிக்காது அவற்றுக்கெதிரான செயல்களில் ஈடுபடும் போது இயற்கையும் பொறுமையிழந்து வெகுண்டெழுகிறது அவை பூகம்பமாக, சூறாவளியாக, சுனாமியாக, எரிமலைக் குமுறல்களாக, மழை வெள்ளமாக, தொற்று நோய்களாக, வறட்சி, பசி, பஞ்சம்,  பட்டினி என பல பக்கத்தாலும் மனித இனம் அழிவடைந்து கொண்டு வருகின்றமை கண்கூடு.

இவ்வாறெல்லாம் பல துன்பங்களை உலகம் விரைவில் எதிர்கொள்ள வேண்டிய சூழல் தென்படுகிறது எனவே அதனை எதிர் கொண்டு வாழும் அளவுக்கு உங்கள் ஆத்ம சக்தியினை வளர்த்துக் கொள்ள ஆன்மீகத்தினை கடைப்பிடித்துக் கொண்டும் செல்வம் படைத்த தனவந்தர்கள் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு முடிந்தவரையில் அன்னதானம் வஸ்திர தானம் செய்யுங்கள் அவ்வாறு இயலாதவர்கள் தத்தம் மார்க்க நெறி முறைகளை சரியாக கடைப்பிடித்து தினமும் தியான ஜெபங்கள், இறை பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் என்றும்.

அல்லாது போனால் கலியின் கோரத்தினை சாதாரண மனிதர்களால் தாங்க இயலாது எனவே அவற்றையெல்லாம் எதிர் கொள்ளக்கூடிய மனத் தைரியத்தினை இப்போதிருந்தே வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கடந்த பல உபதேசத் தொகுப்புகளின் ஊடாகவும் கடந்த 16 வருட ஞான உபதேசங்களின் மூலமாகவும் மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எச்சரித்துக் கொண்டும் அதனை எதிர் கொண்டு வாழக் கூடிய வழிகளையும் மிக மிக இலகுவாக பாமர மக்களுக்கும் புரியும் விதத்தில் விரிவாகவும் நுணுக்கமாகவும் அருளியிருந்தார்.DSC 0264 scaled

அதுமாத்திரமல்லாது உலக சேமத்திற்காக ஆயிரக்கணக்கான காயத்திரி மகா யாகங்கள் யக்ஞங்கள், பூஜைகள், ஜெப தியான வழிபாடுகள், பல்லாயிரக்கணக்கான உபதேசங்கள் என தன்னை நாடி வந்த மக்களுக்காக மாத்திரமின்றி நாடி வராத மக்களுக்காகவும் இற்றை வரையிலும் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றார் மகா யோகி.

தேனை அருந்திட வண்டுகள் தேன் இருக்கும் சோலையினை நோக்கியே செல்லும் அது போல மகா சக்தி படைத்த ஞானிகளை நாடி அருள் பெற மக்கள் சந்தர்ப்பம் சூழ் நிலை மாற்றத்தால் நிட்சயம் தேடி வருவார்கள் அதற்கு எந்த வித ஆடம்பரங்களோ விளம்பரங்களோ தேவையில்லைதானே ஆன்மா தன் சுயத்தினை உணர வேண்டுமெனில் அதற்கு ஒரு தாக உணர்வு தானாகவே உண்டாகும் அவ்வுணர்வு நிட்சயம் அவர்களுக்கு வழிகாண்பிக்கக்கூடிய தன் சுயத்தினை உணர்ந்த ஞானிகளிடம் தானாகவே அழைத்துச் சென்று சேர்த்துவிடும் என்பது திண்ணம்.

எனவே உலகிற்கு ஆன்மீக வழி காண்பிக்கவென்றே ஞானிகள் அவதரிக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கையினை சாதாரணமாக எண்ணி விட முடியாது அவர்களது ஒவ்வொரு அசைவுகளும் இவ்வுலகிற்கு நன்மை பயப்பனவாகவே அமையும் அவர்கள் இவ்வுலகத்தில் எந்தக் கடமைகள் ஆற்றினாலும் அந்தக் கடமைகளின் இன்பமோ துன்பமோ அவர்களை ஒரு போதும் பாதித்திடாது; அவர்களின் அசல் தன்மையான சுய தன்மையான தெய்வீகத்தன்மையே அவர்களில் இருந்து வெளிப்படும்.

அதனை உணர்த்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இவ்வாறு கூறுகிறார் “சிக்கி முக்கி கல் கற்ப கோடிக்காலம் தண்ணீருக்குள் மூழ்கி கிடந்தாலும் அதனை வெளியில் எடுத்து ஒரு இரும்புக் கம்பியினால் தட்டினால் அதிலிருந்து தீப்பொறிகள் பறக்கும்” என்கிறார். பாருங்கள் கற்பகோடி காலம் சிக்கி முக்கி கல் போன்று ஞானிகள் இவ்வுலகத்தினுள் வாழ்ந்தாலும் அவர்களது சுய தன்மையான ஆன்மா சார்ந்த வாழ்வினை எந்த உலக விடயங்களும் தாக்குவதும் கிடையாது அதனை அவர்கள் உள் வாங்குவதும் கிடையாது என்பதனை இவ் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா.

இறைவனைக் கண்டவர்கள் ஞானிகள் என்பதனை கண்டு விட்டோம் இனி இறைவனை அவர்கள் காண்பிக்கும் வழியில் நின்று நமக்குள் காண முயல வேண்டும் ஏனெனில் இறைவன் இவ்வுலகில் அவதாரம் எடுத்து வந்தாலும் அவருக்கு அவர் யாரென உணர்த்துபவரே குருதான்
இறைவனைக் காட்டுபவர் குரு, இறைவனைக் கண்டவர் குரு,
அந்த இறைவனே சாட்சாத் குருதான் எனும் உண்மையினை உணர்வதற்கு முதலில் மனிதர்கள் தம்மைத் தாமே சுய அலசல் செய்து செய்து தெளிவடைய வேண்டும்.

இவையெல்லாம் மனிதர்கள் தாங்களாகவே உணர்ந்து முன்வந்து கடைப்பிடிக்க வேண்டிய விடயமாகிறது.

மனி சரீரத்திற்குள் ஆன்ம சொரூபமாக இறைவன் வீற்றிருக்கிறார் மனித சரீரம் எனும் வீட்டிற்குள் வீற்றிருப்பவரை காண இயலாமல் சலன மனமானது தடுப்பு சுவர் அமைத்துள்ளது அந்த சலன மனத்தினை அமைதிப்படுத்தி மனிதர்கள் தனக்குள் வீற்றிருக்கும் ஆன்ம சொரூபமான தம் சுயத்தினை காணச் செய்திடவே ஞானிகள் மக்களுக்கு பல வழிகளை காண்பித்தார்கள். 

அதற்காக பக்தியுடன் பூஜைகளை செய்தார்கள், ஆலயங்கள் அமைத்து நித்திய வழிபாட்டிற்கு வழி சமைத்தார்கள், ஆங்காங்கே யோக ஆசிரமங்களை அமைத்து  ஜெப தியான வழி முறைகளை கடைப்பிடிக்கச் செய்தார்கள், யாகங்கள் யக்ஞங்கள் செய்தார்கள், பக்தியுடன் பஜனை பாடினார்கள், இவ்வாறு தனக்குள் தன்னைக் காண்பதற்கும் தனது சுயத்தினை உணர்வதற்குமாக பல்வேறு பட்ட வழிகளை காண்பித்தார்கள்.

உதாரணத்திற்கு மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு பலவிதமான வாகனங்களில் பயணிக்கிறார்கள் இவ்வாறு அவர்கள் எந்த வாகனங்களில் பயணித்தாலும் அவர்கள் பயணத்தின் இலக்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு சென்றடைவது மாத்திரமே.

இவ்வாறு அவரவர் வசதிக்கு தக்கவாறு பயணிக்கும் சாதனங்களான வாகனங்கள் வேறுபடுகிறதே தவிர அவர்களின் இலக்கானது ஒன்றாகவே காணப்படுவதனைப் போல மனிதர்கள் தனக்குள் தன்னை சந்தித்து தன் சுயத்தினை உணர்ந்து துன்பங்கள் தாக்காத இன்ப வாழ்க்கை வாழ்ந்திட அந்த இலக்கினை நோக்கி பயணித்திட பல வழிகளையும் யுக்திகளையும் பயணத்தை இலகு படுத்திடும் சாதனங்களாக பல வழிபாட்டு முறைகளையும் காலத்தின் தேவைக்கேற்ப மக்களுக்கு அருளுகிறார்கள் ஞானிகள். 

இவ்வாறு ஞானிகளை நாடி பல மக்கள் செல்கிறார்கள் ஞானிகளும் அந்த மக்களது மனநிலைக்குத் தக அவர்கள் சக்திக்குத் தக எதைக்கண்டால் பற்றிப்பிடிப்பார்களோ அந்த தன்மையில் வீற்றிருந்து பலருக்கும் பல்வேறுபட்ட வழிகளை உபதேசித்து அருளி வருகிறார்கள்.

இவ்வாறு சாதாரண மனிதர்கள் சந்திக்கும் மொத்த அனுபவங்களின் உருவமாகவே ஞானிகள் வீற்றிருக்கிறார்கள் அதனால்தான் தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு பல விதமான இறை அனுபவங்களை நல்கி அவர்களை நல்வழிப்படுத்தி நல் வாழ்வு வாழ வைக்கிறார்கள்.

நவநாகரீக விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினால் மனித சமுதாயம் தமது செயல்களை இலகுபடுத்தவென கண்டு பிடித்த பல கண்டுபிடிப்புகளால் மதியிழந்து போய்  மூதாதையர்கள் வாழ்ந்து காண்பித்து அருளிய ஆன்மீக வாழ்வினை புறக்கணித்தார்கள் அதனால் உடல் உழைப்பும் இறை வழிபாடுகளும் அவற்றின் மூலம் உணர்த்தப்பட்ட தானமும், தவமும், தர்மமும், மறைந்து போயின அதன் காரணமாக இனந்தெரியாத நோய்கள் பல உருவாகின.

பல அடுக்கு மாடி வைத்தியசாலைகள் தோற்றம் பெற்றன நவீன மருந்துகள் நவீன கருவிகள் என தற்போதும் கண்டுபிடித்துக் கொண்டே போகிறார்கள் அதே வேகத்திற்கு நோய்களும் பெருகிக் கொண்டே போகிறது மனிதர்கள் தாம் ஓடி ஓடி உண்ணாது உறங்காது உழைத்து சேர்த்து வைத்த செல்வத்தினை வைத்தியசாலைகளுக்கும் மருத்துவத்திற்கும் என கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் மறுபுறம் இயற்கை சீற்றங்களால் பல்லாயிரம் உயிர்கள் நாளுக்கு நாள் காவு கொள்ளப்பட்டு வருகிறது விபத்துகள், கொலைகள், தற் கொலைகள், கொள்ளைகள், யுத்தங்கள் என இன்னொரு புறம் மனித இனம் அழிந்து கொண்டிருக்கின்றன இவ்வாறு பல பக்கங்களாலும் மனித சமுதாயம் நசுக்கப்பட்டுக் கொண்டே வருகிறது காரணம் என்ன?  யார்யாரெல்லாம் இதனை சிந்தித்தார்கள்? என்று பார்த்தால் யாரும் கேட்கவுமில்லை சிந்திக்கவும்இல்லை காரணம் சுய நலம்.

தன் சுயத்தினை மனிதர்கள் உணரத் தலைப்படாத மட்டும் சுய நலம் எனும் கொடிய அரக்கன் மனித இனத்தை முற்றாக சூறையாடி விடுவான் என்பது திண்ணம்.

அன்று வாழ்ந்த நம் மூதாதையர்கள் இவ்வாறானதொரு இக்கட்டான துன்பமான சூழ்நிலையினை எதிர்கொள்ளவில்லை ஆனால் இப்போது வாழ்பவர்கள் ஏன்
எதிர்கொள்கிறார்கள் என்ற அடிப்படைக் காரணங்களை மனிதர்கள் ஆராய வேண்டும் அன்று வாழ்ந்தவர்கள் சத்தியத்தின் படி சுய நலமற்று பொதுநலமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் இன்று வாழ்பவர்களோ பொது நலம் மறந்து சுய நல வாழ்க்கை வாழ்கிறார்கள் சுய நலம் அழிவைத் தேடித் தந்து கொண்டிருக்கிறது பொது நலம் அழிவினை தடுத்து ஆக்க சக்தியான ஆன்ம சொரூபத்தில் திளைத்தும் நிலைத்தும் நிற்கிறது இங்கே பொது நலம் என்பதே நிலைச் சக்தி அதுவே மனிதர்களின் சுயமாகிறது இந்த சுயத்தினை உணர்த்தவே ஞானிகள் பொது நலமாக ஞான உபதேசங்களை அருளி வருகிறார்கள் கரைந்துண்ணும் காகம் போல ஞானிகளது வாழ்க்கை அமைகிறது.

எனவே மூதாதையர் மனிதர்களுக்கு விட்டுச் சென்றுள்ள ஆன்மீக வாழ்வினை அவரவர்கள் கடைப்பிடித்து வாழ திடம் பூண வேண்டும் என்பதே ஞானிகள் கூற்றாகிறது.

இவ்வுண்மைகளை அனுபூதி நிலை அடைந்த ஞானிகளால் மாத்திரமே அனுபவங்களாக போதித்தருள முடியுமே தவிர வெறும் அனுபவத்தினை மாத்திரம் வைத்துக் கொண்டு அனுபவங்களை எவராலும் போதிக்க இயலாது அதன்மூலம் மக்கள் நன்மையினை அனுபவிக்கவும்
இயலாது.

காலத்திற்கு ஏற்றால் போல் ஞானிகள் ஒரேயொரு வழிதான் உண்டென்றில்லாமல் ஆன்மீகத்தில் பல வழிகளை மக்களுக்கு காண்பித்துள்ளார்கள் ஞானிகளது, மகான்களது, யோகிகளது, நாயன்மார்களினது வாழ்க்கையினை அனுபவமாக எடுத்துக் கொண்டு நாமும் ஒரு அனுபத்தினை பெற முயற்சி செய்தால் அதன் மூலம் அனுபூதி நிலையடைய முடியும் இதுவே தத்தமது சுயத்தினை உணரும் உயரிய மார்க்கமாகிறது அவரவர் எண்ணம் போலவே அவரவர் வாழ்க்கையும் அமைகிறது அதனால் உங்கள் எண்ணங்களை இறை பக்கம் திருப்புங்கள் வாழ்க்கை வண்ணமயமாகும் என்கிறார் மகா யோகி.DSC 0269 scaled e1608909409896

ஆகவே மனிதர்கள் தத்தம் மனங்களை சலனத்தில் இருந்து மீட்டெடுக்க ஞானிகளின் வழி நின்று முயற்சி  செய்து வரவேண்டும் உதாரணத்திற்கு மாடொன்றினை அதன் முதலாளி கணுவொன்றில் கட்டி வைத்து விட்டு தன் கடமைகளை ஆற்றும் போது கணுவில் கட்டிய மாடானது ஒரு சுற்று வட்டத்துக்குள் மேய்ந்து தனது பசிக்கு உணவினை பெற்று பசியாறிக் கொள்கிறது ஆனால் அதே மாட்டினை கணுவில் கட்டாமல் அப்படியே விட்டு விட்டால் கண்டகண்ட இடமெல்லாம் சென்று மேய்ந்து திரிந்து பலரிடம் அடிபட்டு அதனால் அந்த மாட்டின் முதலாளியும் நஷ்ட ஈடு செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும் அல்லவா.

எனவே மனிதர்களும் தமது புலன்களை மனம் போன போக்கில் விட்டு விடுவதால் அங்கு மாட்டிற்கும் மாட்டினது முதலாளிக்கும் ஏற்பட்ட நிலை போன்று உடலுக்கும் மனதிற்கும் பல துன்பங்கள் ஏற்படுகிறது அதுவே ஆன்மா எனும் கணுவோடு ஐம் புலன்களை வழி நடாத்தும்  மனதினை கட்டிப் போட்டு விட்டால் மனமும் அமைதி பெறும் புலன்களும் கண்ட கண்ட எண்ணங்களை உள் வாங்கி திசை கெட்டு பயணிக்காமல் அனைத்து துன்பங்களில் இருந்தும் பாதுகாப்பாக வாழும் வழி கிட்டுமல்லவா.

படைத்தவரை தேடியடைந்து விட்டால் படைக்கப்பட்ட பொருட்களால் துன்பங்கள் நேராதல்லவா அவ்வாறு படைத்தவரை தனக்குள் உணர்ந்து தன் சுயத்தினை உணர்ந்து வாழ மிக மிக இலகுவான வழியொன்றினை உலக மக்களுக்கு பின்வருமாறு அருளியுள்ளார் மகா யோகி.

பொறுமை சகிப்புத்தன்மையோடு தினமும் அதிகாலை மாலை வேளைகளில் காயத்திரி மகா மந்திரத்தினையும் மகா மிருத்தியுஞ்ஜெய மந்திரத்தினையும் தலா 9 தடவைகள் அல்லது 21 தடவைகள் தங்கள் தங்களது இஸ்ட தெய்வங்களை கண்களை மூடியிருந்து நினைத்து ஜெபித்து பின்னர் வெளியே செல்லும் சுவாசத்தினையும் உள்ளே வரும் சுவாசத்தினையும் குறைந்தது பத்து நிமிடங்களாவது அமைதியாக இருந்து கவனித்து வர வேண்டும்.

இவ்வாறு கவனிக்கும் போது பல எண்ணங்கள் ஊடறுத்து மனதை திசை மாற்றி செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கும் ஆரம்பத்தில் சற்று அலுப்பாகவும் சலிப்பாகவும் மனம் உணரும் இருந்தும் அவ்வெண்ணங்களை பொறுமையோடு எதிர் கொண்டு விலக்கி விட்டு மீண்டும் மீண்டும் சுவாசத்தினை கவனித்து வர வேண்டும் அத்துடன் எதிர்மறையான விடயங்களை எண்ணவோ பேசவோ கூடாது, பிறரை பார்த்து குறை கூறக் கூடாது, மச்சம், மாமிசம், புலால் உணவுகளை தவிர்த்து வரவேண்டும் காலப்போக்கில் அதனை முற்றாக நிறுத்தி விட முயற்சிக்க வேண்டும்  இவ்வாறு தொடர்ந்து 21 நாட்களுக்கு தவறாமல் கடைப்பிடித்து வரவேண்டும் அப்போதும் மனம் லயப்படவில்லை எனில் 42 நாட்களாக அதனை கூட்ட வேண்டும் இவ்வாறு மனதின் சலனம் அடங்கும் வரையிலும் பயிற்சி செய்து வர வேண்டும்.

இந்தப் பயிற்சியினை இடை விடாது தொடர்ந்து கடைப்பிடித்து வரும் போது சிலருக்கு ஒரிரு நாட்களிலேயே மாற்றத்தினை உணரக் கூடியதாக இருக்கும் சிலருக்கு ஓரிரு வாரங்கள் எடுக்கும் எனவே மனம் தளராது நம்பிக்கையுடனும் பக்தியுடனும் இந்த இலகுவான தியான முறையினை கடைப்பிடித்து வரும் போது இது வரையில் உடல் ரீதியாக இருந்த நோய்கள் படிப்படியாக இல்லாமல் போவதனை உணர்வீர்கள் அது  தீர்க்கமுடியாத புற்று நோயாக இருந்தாலும் நிட்சயமாக இல்லாமல் போய் விடும் அது போல வீட்டில் உள்ள பொருளாதார தட்டுப்பாடு, மன ரீதியான உளைச்சல்கள், தொழில் ரீதியான தடைகள், தடைப்பட்டு போன திருமண நிகழ்வுகள், நற்காரியங்கள் என அனைத்துமே மெல்ல மெல்ல நிறைவேறி வர ஆரம்பிக்கும் அதோடு விட்டு விடாமல் அதனை வாழ்வின் பெரும் பாகமாக மாற்றிக் கொண்டு தொடர்ந்தும் கடைப்பிடித்து வரும் போது இதுவரையில் ஏற்பட்ட இனியும் ஏற்படவிருக்கின்ற அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுதலை நிட்சயம் கிட்டும்.

அது மாத்திரமல்ல இறுதியில் தன்னைத்தானே உணர்ந்து தனக்குள் வீற்றிருக்கும் இறைவனையும் உணரும் நிலை ஏற்படும் இதுவே தனது சுயத்தினை தானே உணர மகா யோகி அருளிய மிக மிக இலகுவான தியான முறை ஆகும்.

அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம் என்று ஔவையார் ஆத்தி சூடியில் அருளியுள்ளார் அறம் செய்யும் எண்ணம் வருவதற்கு  தியானம் முதலில் செய்யவேண்டும் அதன் பின்னர் அறம் சார்ந்த நற்குணங்கள் மனிதர்களுக்கு தானாகவே ஏற்பட்டு விடும்.

ஆக அறம் செய்ய விரும்பினாலே போதும் ஏனைய நற்குணங்கள் தானாகவே வந்து விடுவது போல அறத்தை மறந்து புறத்தை நாடும் போதும் புறத்தில் அனைவரையும் துன்பப்படுத்தும் அனைத்து விடயங்களையும் ஈர்த்து துன்பமான வாழ்க்கை வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படும்.

ஞானிகள் தாம் கூறுவதை கூறி விட்டார்கள் முடிவெடுப்பது மனிதர்களே அன்றி அவர்கள் அல்ல ஏனெனில் தொடக்கத்தினையும் அதன் முடிவினையும் நேருக்கு நேர் அவர்கள் கண்டு விட்டார்கள் அதுவே குருவாக இருந்து உலகிற்கு போதிக்கிறார்கள்.

மனிதர்கள் இறந்த ஒருவரின் மரணச் சடங்கில் பங்கேற்று அவர்கள் உறவுகளின் துயரில் பங்கெடுத்து விட்டு வருகிறோம் என்று கூறுவதனைப்போல ஞானிகளை நாடிச்சென்று அவர்கள் அனுபவிக்கும் பேரின்பத்தில் பங்கெடுக்க இந்த மனிதர்கள் முன்வராததேனோ என்று மகா யோகி வினவுகிறார்.127276753 2589532964678728 2572644307177492978 o 1

எனவே மனிதர்களே! இனியும் காலம் தாழ்த்தாது நிலையான ஞானத்தினை பெற்று தத்தம் சுய தன்மையினை உணர்ந்திட உண்மை ஞானிகள் காண்பிக்கும் ஆன்மீக வாழ்வினை கடைப்பிடித்து அவர்கள் வாழும் பேரின்ப வாழ்வினை வாழ முனைய வேண்டும் அதுவே எதிர்வரப் போகும் காலங்களை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆன்ம சக்தியினை வழங்கி காத்து நிற்கும் என்பது திண்ணம்.

“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -